முச்சந்தி

ஈழத் தமிழரின் அரசியல் உரிமையை ஆதரித்த ஜஸ்டின் ட்ரூடோ!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

கனடாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பல தீர்மானங்கள் நிறைவேறி வெற்றி கண்டதும், அதில் முக்கியமாக இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் தற்போது பதவி விலகிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழருடன் ஜஸ்டின் ட்ரூடோ :
கனடாவில் தமிழ் சமூகம் கடந்த பத்து வருடங்களில் அரசியல் ரீதியான குறிப்பிட கூடிய வளர்ச்சியை அடைந்ததும், தமிழ் மரபு திங்கள் கனடாவில் அறிமுகப் படுத்தப்பட்டதும் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலத்தில் தான் எனக் கூறினால் மிகையாகாது.
அத்துடன் தமிழ் சமூக மையத்துக்கான பெரு நிதியை பெற்று கொடுத்ததும்,
ஆளும் கட்சியில் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டு, முதலாவது கனேடிய தமிழ் மந்திரியை பெற்றுக் கொண்டதும் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலத்தில் தான்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இனப் படுகொலையாளிகளுக்கு பயணத்தைத் தடையை விதித்ததும் இக்கால கட்டத்தில் தான் என்பதும் உண்மையாகும்.
அத்துடன் சர்வதேச ரீதியில் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் அதிகரித்திருக்கின்ற காலக்கட்டத்தில் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்ச்சியாக இடம் பிடிப்பதற்கும், இலங்கைக்கு எதிரான  தீர்மானத்தை  தொடர்ச்சியாக முன்னெடுக்கிறதுக்கு முக்கியமான நாடாக கனடா உள்ளமையும் , அதன் தொடர்ச்சியை உறுதி செய்தமையும்  முக்கியமானது அதில், தற்போது பதவி விலகிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின்பங்கு முக்கியமானது.
உள்நாட்டு அரசியல் சிக்கல்:
உட்கட்சி அரசியல் சிக்கல்களால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தனது பதவி விலகலை அறிவித்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகி உள்ளார்.
ஒன்பது வருட பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஜஸ்டின் ட்ரூடோ தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ள நிலையில், லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யும்வரை பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் நாட்டிற்கு உண்மையான தெரிவு தேவைப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபரில் கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினால் அது லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துதில் இருந்தா ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்துவிட்டது. ஏற்கெனவே சர்வதேச நெருக்கடிகளை ட்ரூடோ சந்தித்து வரும் நிலையில் உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பும் வலுத்து வந்தது.
ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.
அதேபோல் கடந்த டிசம்பரில் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து துணை பிரதமரும், நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
கருத்துக்கணிப்புகள் தோல்வி:
கருத்துக்கணிப்புகள் படி லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் எனவும், இச் சூழ்நிலையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவந்தனர்.
லிபரல் கட்சி மிக மோசமான நிலையிலிருந்த காலத்தில் – நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்திலிருந்த காலத்தில் 2103 இல் ட்ரூடோ கட்சியின் தலைமை பதவியை ஏற்றார்.
கனடாவிற்கு இணக்கமான அரசியல் அணுகுமுறையையும் அறிமுகப்படுத்துவதாகவும் பெண்களின் உரிமையை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான போராட்டம் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்தும் ஜஸ்டின் ட்ரூடோ 2015 இல் லிபரல் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார்.
ஆனால் கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதற்காக ட்ரூடோ தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடவேண்டிய நிலை உருவானது.
நுகர்வோரையும் வர்த்தக சமூகத்தினரையும் காப்பாற்றுவதற்காக லிபரல் கட்சி பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் வரவு செலவு திட்டப்பற்றாக்குறை அதிகரித்து வந்தது. விலைகள் அதிகரித்ததால் பொதுமக்களின் சீற்றமும் அதிகரித்தது.
எதிர்வரும் தேர்தல்களில் கட்சி தோல்வியடையலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபகாலமாக வெளியிட்டு வந்த அச்சத்தினை அவர் சமாளித்து வந்தாலும், இறுதியில் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button