ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரசியல் வாதிகள் நாட்டை விட்டு ஓடினாலும் துரத்திக் கலைத்துப் பிடிப்போம்
கடந்த ஆட்சிக் காலங்களில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன என்றும், அவர்கள் தொடர்பில் தாமதிக்காது அரசாங்கம் சட்டப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதி அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளை உடையில் இருந்த அரசியல்வாதிகள் சிலர் எப்படிப் பட்டவர்கள் என்று நாட்டுக்கு இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் எங்கே சென்றாலும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். முறையாக சட்டப்படியான நடவடிக்கைகளின் ஊடாகவே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இதன்படி நீதிமன்றம், இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் ஆகியோருக்கு அவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும். நாட்டைவிட்டு தப்பிச் சென்றாலும் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.
![]()