கவிதைகள்
புதிதாய் எழுவாய்!… கவிதை… மெல்போர்ன் அறவேந்தன்

புதிதாய் எழுவாய் !
(தானன தனன தனதா தனதா – தனத்தனன)
காரிருள் கவிழ்ந்து பயமாய் சுமையாய்
வீதியில் வெறுமை தனியாய் தவமாய்
காற்றின் அசைவு கொடிதாய் வலிதாய் உறுத்தியதே!
வேதனை மனதில் இடியாய் வெடியாய்
சோதனை தினமும் புதிராய் நெடிதாய்
மேனியில் தளர்வு வதையாய் வலியாய் வருத்தியதே!
நாடிய தொழிலும் நலிவாய் சரிவாய்
தேடிய பொருளும் கரைவால் சலிப்பாய்
வாடிய உளமும் துயரால் நொடிவாய் நெருக்கியதே!
ஆனது எதுவும் விதியாய் வினையாய்
போனது எதுவும் பொறுப்பாய் மறப்பாய்
நீயினி புதிதாய் எழுவாய் முயல்வாய் புயலெனவே!
நாளைய பொழுது சுகமாய் புதிதாய்
பாதையில் பயணம் வலுவாய் வளமாய்
வாழ்வின் விடிவு பொலிவாய் புலர்வாய் அமையட்டுமே!
– மெல்போர்ன் அறவேந்தன்
![]()