வணக்கம் ஐரோப்பா 2025

வணக்கம் ஐரோப்பா எனும் ஆடல் பாடல் கொண்ட மகிழ்ச்சிக் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான முறையில் 01.01.25 அன்று ஜேர்மனி ஓபகவுசன் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடந்து நிறைவு பெற்றது.
இந்த விழாவை வெற்றிகரமாக் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில். விழாவின் ஏற்பாட்டுக்குழுவினர் முனைப்புடன் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக்கிச் சாதனை படைத்தனர்.
இந்த விழாவுக்கு அனுசரணை வழங்கிய வியாபார நிறுவனங்களும் விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த மக்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.
இவ்விழாவை நடத்த வேண்டும் என்ற திட்டமிட்ட நாளிலிருந்து விழா நடந்த நிறைவுபெற்ற நாள் வரை விழாக்குழுவினர் இரவுபகலாக அதே சிந்தனையுடன் கடுமையாக உழைத்திருந்தனர்.
இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டம் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பித்திருந்தாலும்,ஆரம்பித்த நிமிடத்திலிருந்து எவ்வித கால இடைவெளியுமில்லாது நிகழ்ச்சிகளில் தொய்வோ சலிப்பே ஏற்படாதவாறு நிகழ்ச்சி நடத்துனரான திரு.செல்வநாதன் சுமித்திரன் கொண்டு சென்றமைக்காக அவரைப் பாராட்டுகிறேன்.
அவர் கடுமையான போக்கினைக் கொண்டிருந்தமையை என்னால் அவதானிக்க முடிந்தது.இப்படியான நிகழ்ச்சிகளில் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற போக்குத் தேவையே,.அப்படியென்றால்தான் நிகழ்ச்சிகளை மக்கள் இரசிக்கும்படி கொண்டு செல்ல முடியும்.
அறிவிப்பாளராக செயலாற்றிய செல்வி.பெனீசியா திருவாளர்கள்.கிருஸ்ணா,நயினை சூரி,சீலன் ஆகியோர் தமது பங்கை சிறப்பாகச் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அண்மையில் காலஞ்சென்ற சிறந்த அறிவிப்பாளரும் ,ஊடகவியலாளருமான திரு.முல்லை மோகன் அவர்களுக்கு அவர் ஆற்றிய ஊடக அறிவிப்புத்துறைச் சேவைகளை விதந்துரைத்து,நினைவுகூர்ந்து நெகிழ்ந்துணர்வின் வெளிப்பாடாக அவரின் உருவப்படத்தை டிஜிற்றல் திரையில் காண்பித்து அவருக்கு அஞ்சலி நடனத்தைச் சமிர்ப்பித்தமமை வணக்கம் ஐரோப்பாவின் ஏற்பாட்டாளர்களின் உயர்ந்த பண்பாகவும் வணக்கம் ஐரோப்பாவில் அவர் பங்காற்றியமைக்கு நன்றி மறவாமையையும் அச்செயல் கூறி நின்றது.
புகழ்மிக்க நடன ஆசிரியைகளான திருமதிகளான சாவித்திரி சரவணன்,ரஜனி சாத்தியகுமார்,சரண்யா,செல்வன் நிமிலன் சத்தியகுமார் அவர்களிளால் அமைக்கப்பட்ட சிறந்த நடனங்களும்,இளந்தலைமுறையினரின் நவீன நடனங்களும் இடம்பெற்றன.
இவ்விழாவில் தென்னிந்தியத் தொலைக்காட்சியான சீ தமிழின் சரிகமபா எனும் பாடல் போட்டியில் பங்கு கொண்டு முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கைப் பெண்ணான செல்வி. கில்மிசா சிறப்புப் பாடகியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
அது போன்று பிரான்ஸ்,சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் ஜேர்மனியிலிருந்தும் பல பாடக பாடகிகள் கலந்து கொண்டு பாடினர்.
பாடல் நிகழ்ச்சிகளுக்கு இசையமைப்பாளர் திரு.சிறீபாஸ்கர் அவர்களின் சாரங்கா இசைக்குழுவினர் மனம் கொள்ளத்தக்க வகையில் இசையார்ந்தமை குறிப்பிடத் தக்கது.
ஓலியமைப்பினை இளஞ்சூரியன் ஒலியமைப்பாளர் செல்வன் கரீஷ் சிறப்பாகச் செய்திருந்தார். ஒலிக்கலவையில் பேஸ் பிறீகுவன்சியைக் (Frequency) கட்டுப்படுத்தியிருந்தால்: மேடைக்கு அருகில் இருந்தவர்கள் கஸ்டப்பட்டிருக்கத் தேவையில்லை.
நினைக்கும் தோறும் அசைபோட்டு மகிழும் விழாவாக இவ்விழா அமைந்திருந்தது.
![]()