ரவி, ஷானி தேசிய மக்கள் சக்தியில் இணைய சக்தி வாய்ந்த மதத் தலைவர் பின்னணியில்
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்களான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகிய இருவரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாக இல்லாத போதும், ஒரு சக்திவாய்ந்த மதத் தலைவரின் தலையீட்டினால் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இருவரும் முதலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கு இந்த நாட்டில் உள்ள பலமான மதத் தலைவர் ஒருவரின் தலையீட்டினால் முயற்சித்த போதிலும், அக்கட்சியின் உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் கடும் எதிர்ப்பினால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அதன் பின்னர் மேற்படி மதத்தலைவரின் தலையீட்டினால் இந்த இரண்டு ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் தேசிய மக்கள் சக்தியில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்ட போது அவர்களைப் பாதுகாத்தது போன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜே.வி.பியின் பலமான செயற்பாட்டாளரான அசோக ரன்வல சபாநாயகரான பின்னர் எழுந்த கலாநிதிப் பட்டப் பிரச்சினையின் போது, அவரை பாதுகாக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அசோக ரன்வல பற்றி முடிவெடுக்கும் அதிகாரமும் திறமையும் ஜே.வி.பி.க்கு இருந்தாலும், ரவியும் ஷானியும் ஜே.வி.பி. அல்லது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அல்ல, ஆனால் அவர்கள் ஒரு சக்திவாய்ந்த மதத் தலைவரின் தேவைகளுக்காக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அதற்கான திறன் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் மூத்த அமைச்சரவை அமைச்சர் ஒருவரினால் இது தொடர்பில் தமக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
![]()