உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இளைஞர் யுவதிகளுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஊடாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டும் என கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த ஆண்டில் உள்ளுராட்சி சபைத் தேர்தல், மாகாண சபை தேர்தல் இடம்பெறவிருப்பதால் கட்சியின் செயற்பாடுகளை முன் கொண்டு செல்வதற்காக நான் தற்போது நியமிக்கப்பட்டுள்ளேன்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்கனவே இருப்பவர்களுக்கு மட்டும்தான் கட்சி வாய்ப்பு அளிக்கும் என்ற கருத்து இருப்பதால் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு இளைஞர்கள் பலர் முன்வருவதில்லை என்று ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் மீளவும் புதிய தெரிவு இடம்பெற வாய்ப்புள்ளது.

இளைஞர்கள், யுவதிகள் மூலக் கிளைகள் ஊடாக அங்கத்துவத்தைப் பெற்று இரண்டு வாரங்களுக்குள் கட்சி இணைந்து கொண்டால் கட்சி தீர்க்கமான நல்ல முடிவை எடுத்து ஆற்றலுள்ளவர்களை, கல்வி கற்றவர்களை, இளையோரை தெரிவு செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்களில் கட்டமைப்பு ரீதியில் இயங்குவதுடன், எல்லா மாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள கட்சியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே காணப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றங்களில் அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் வகித்தவர்கள் எங்களுடன் இருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்பாராதவிதமாக தமிழ் தேசியத்துக்கு தொய்வு ஏற்பட்டிருக்கின்ற நிலையில் அந்த இடத்திலிருந்து மீளெழுந்து உள்ளூராட்சி மன்றத்தின் தெரிவு மூலம் எங்களை நிலைநாட்டிக் கொள்வதற்கான சூழலை உருவாக்குவதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். மகளிர் இளையோர் அனைவரும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும்.பொருத்தமானவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிப்போம்.

உட்கட்சி விவகாரங்களில் விமர்சனங்கள், பிரச்சினைகள் வந்தாலும் அதனை சமாளித்து சீராக்கி முன்னோக்கி சென்றிருக்கிறோம் என்பதை கடந்த காலத்தில் மக்கள் நிரூபித்திருப்பார்கள். எதிர்ப்புகள் முரண்பாடுகளை சமூகமாக தீர்த்துக் கொண்டு முன்னோக்கி செல்வோம்.

75 ஆண்டு கால வரலாறு உள்ள தமிழ் அரசுக் கட்சியை கட்டிக்காப்பதற்கு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *