பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி பல இலட்சம் ரூபாவை கடனாகப் பெற்ற முன்னாள் எம்.பி.க்கள்

பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பல இலட்சம் ரூபாக்களை பிரதான அரச வங்கிகளில் கடனாகப் பெற்று அவற்றை உரிய காலத்தில் செலுத்தவில்லையெனவும் தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

1994 முதல் தற்போது வரை, இரண்டு பிரதான அரச வங்கிகளில் மானிய வட்டிக்கு கடன் பெற்ற அமைச்சர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடுமாறு கோரி தகவல் கோரிக்கையை முன்வைக்கும் போதே ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி மற்றும் பாரிய மோசடி மற்றும் ஊழல் தடுப்பு ஜனாதிபதி விசாரணைக் குழுவின் முன்னாள் பிரதம செயலாளர் லசில் த சில்வா ஆகியோர் இரண்டு பிரதான அரச வங்கிகளில் மானிய வட்டிக்கு கடன் பெற்ற அமைச்சர்களின் விபரங்களை கோரியுள்ளனர்.

மானிய வட்டியில் ஐம்பத்தைந்து இலட்சம் ரூபா வரை கடன் பெற்ற பெருமளவான அமைச்சர்கள் அந்தக் கடனை உரிய காலப்பகுதியில் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சாதாரண மக்களை போன்று கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட காலத்தை செலவிடாமல் மிக குறுகிய காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடன்கள் வழங்கப்படுவதாகவும் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களே செலுத்தப்படாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்று அந்த கடனை செலுத்துவதற்கு கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பாராளுமன்ற சிறப்புரிமைகளை கொண்டு கடனை பெற்றுக் கொண்டவர்கள் இவ்வாறு கடனை மீளச் செலுத்தாமல் ஏமாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *