சீனாவுடன் அநுரகுமார பேசப்போவது என்ன?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனவரி மாதமளவில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் அந்த விஜயத்திற்கு முன்னர் அங்கு என்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப் போகின்றார் என்பதனை நாட்டுக்கு கூற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவே இவ்வாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியில் இந்தியா எங்களுடன் முக்கிய இடத்தில் இருக்கின்றது. இந்த நாட்டுடன் நெருக்கமான தொடர்புகளை பேணுவதுடன் உலக நாடுகளுடனும் நாங்கள் சமமாக பயணிக்க வேண்டும். எவ்வாறாயினும் இந்திய விஜயத்தின் போது இணங்கிய விடயங்கள் தொடர்பில் இதுவரையில் கூறப்பட்டவில்லை. ஆனால் பௌதீக தொடர்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் வலுச் சக்தி தொடர்பு ஆகிய மூன்று விடயங்களில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அவர்களின் சில கருத்துக்கள் மூலம் தெரியவருகின்றது. எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அவர்கள் அறிவிக்க வேண்டும்.

இதேவேளை எட்கா உடன்படிக்கை தொடர்பில் அவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்பதனையும் கூற வேண்டும். தேர்தலுக்கு முன்னர் அந்த உடன்படிக்கையை எதிர்த்தே கருத்து தெரிவித்தனர். ஆனால் இப்போது இவர்கள் அந்த உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடல்களை தொடர்வதற்கு இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். அதேபோன்று வலுச் சக்தி தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கும் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அரசாங்கம் இதுவரையில் தெளிவாக இது தொடர்பில் கூறவில்லை.

இந்நிலையில் அடுத்த மாதத்தில் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் அங்கு சென்று என்ன விடயம் தொடர்பில் கதைக்கப் போகின்றார். ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் எந்த கலந்துரையாடலையும் செய்ய முடியாது. இதனால் நாட்டுக்கு அது தொடர்பில் தெரிய வேண்டும். ஒருகாலத்தில் நஞ்சாகவும் இன்னுமொரு காலத்தில் அது சுவையாகவும் இருக்க முடியாது. இராஜதந்திர செயற்பாடுகளுக்கு செல்லும் போது இதன் பாரதூரமான நிலைமை அரசாங்கத்திற்கு தெரியும். இந்தியா, சீனா மற்றும் மற்றைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களின் போது சமமாக அதனை முன்னெடுப்பனரா? இல்லையா? என்பதும் தெரியாது. ஆனால் அரசாங்கம் பழைய பாதையில் செல்வதை போன்றே தெரிகின்றது. இதனால் அரசாங்கம் வெளிப்படையாக நாட்டுக்கு கூற வேண்டும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *