நிதியை பெற்றது குற்றமென்றால் என்னை தூக்கிலிட்டு கொன்றுவிடுங்கள்
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து எனது சிறுசீரக மாற்று சிகிச்சைக்காகவே நிதியை பெற்றேன். இது தவறு என்றால் என்னை தூக்கிலிட்டு கொன்றுவிடுங்கள் என்று முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்ற நிதி தொடர்பான தகவல்கள் அண்மையில் அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த தகவல் பட்டியலில் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் பெயரும் இருந்த நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது,
நான் எனது சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காகவே 30 இலட்சம் ரூபா நிதியை ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பெற்றேன். அந்த நிதியானது எனக்கு சத்திரச் சிகிச்சை செய்யப்பட்ட வத்தளை தனியார் வைத்தியசாலையின் கணக்கிற்கே சென்றது.
ஆனால் நான் வைத்தியசாலையில் 3 மாதங்கள் இருந்தேன். அதற்கான மொத்த செலவு 10 மில்லியன் ரூபாவாகும். அதனை எனது வாகனத்தை விற்றே பெற்றேன். நான் பணம் பெற்றதாக பலர் கூறுகின்றனர். ஆனால் எத்தனையோ நோயாளர்களுக்கு நான் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே அந்த நிதியை நான் பெற்றேன். நான் ஊழலில் ஈடுபட்டவன் அல்ல. குறைந்தது ஒரு நுளம்பைக்கூட கொன்றதில்லை. நான் இந்த நிதியை பெற்றது குற்றமென்றால் என்னை தூக்கிலிட்டு கொன்றுவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
![]()