அநுரவின் சீன விஜயத்துக்கு முன் இலங்கை வந்துள்ள சீன கடற்படைக் கப்பல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்துக்கு முன்பாக சீனாவுக்கு சார்பான சில திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இது உலகின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இராணுவ மருத்துவமனை கப்பலாக கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அவசரகால சூழ்நிலைகளுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய பணியாகும். இந்த கப்பல் சீன மக்கள் குடியரசால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள அவசரகால சூழ்நிலைகளுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பல் 2008 ஆம் ஆண்டு முதல் நோயுற்றவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க பயன்படுத்தப்படுகிறது.
178 மீற்றர் நீளமும் 24 மீற்றர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 386 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 106 பேர் மருத்துவர்கள். இந்தக் கப்பலில் 17 மருத்துவப் பிரிவுகளும், 05 துணை நோயறிதல் துறைகளும் உள்ளன.
இதில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் இதனால் இலங்கை மக்கள் இலவச மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் சீனாவிலிருந்து சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான விசேட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் பல சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பை வந்தடைந்திருந்தன.
ஆனால் ரணிலின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் இந்த முடிவை சீனா சகித்துக் கொள்ளவில்லை, அதன் காரணமாகவே ரணிலின் ஆட்சியில் இலங்கையுடன் சீனா அதிக நட்புடன் இருக்கவில்லை. அந்த கால அவகாசம் ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இதன்படி ஜனவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் சீன கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.
![]()