இந்தியக் கடலில் இலங்கை கடற் கொள்ளையர்களா?; நாகை மீனவர்கள் மீது தாக்குதல்;
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் சனிக்கிழமை (21) அதிகாலை படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்கள் மீது, அங்கு 2 படகில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள், படகை வழி மறித்தது கத்தி மற்றும் கட்டையால் தாக்கி விட்டு படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தப்பிய மூன்று மீனவர்களான ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் உடனடியாக அவசரம் அவசரமாக கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சக மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இதில் ராஜேந்திரன் என்பவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் என்பவருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.நாகலிங்கம் என்பவருக்கும் உள்ள காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயம் அடைந்த 3 மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
![]()