கிணறு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்; இராணுவ முகாமின் வாசலில் குடிநீருக்காக தினமும் காத்திருக்கும் பூநகரி மக்கள்
கிளிநொச்சி பூநகரி அரசபுரம் பகுதியில் உள்ள மக்கள் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பள்ளிக்குடா கிராம அலுவலர் பிரிவின் கீழுள்ள அரசபுரம் கிராமத்தில் ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 12 ஏக்கர் காணி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு குடிநீர் கிணறு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
உலக தரிசனம் நிறுவனத்தினால் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கென 2006ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டி வழங்கப்பட்ட பொது குடிநீர் கிணறு இராணுவத்தினால் அதன் கட்டுப்பாட்டு எல்லைக்குள் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் தினமும் மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை மக்கள் இராணுவ முகாமின் வாசலில் நீர் கொள்கலன்களை அடுக்கி வரிசையாக நின்று நீரினை பெறுதல் வேண்டும். இருபது லீற்றர் குடிநீர் மட்டுமே நாள் ஒன்றுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
![]()