புதிய அரசு என்ன செய்யப் போகிறது என காத்திருக்கிறோம்; நோர்வே தூதுவரிடம் தெரிவித்த தமிழரசுக் கட்சி
புதிய ஆட்சியாளர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவார்கள் என்ற உறுதிமொழியை வழங்கியிருப்பதாகவும் இந்தியாவுடன் இணங்கி போகும் போக்கு புதிய ஜனாதிபதியிடம் தென்படுவதாகவும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் தெரிவித்திருக்கிறார்.
புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பிலும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனருக்கும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை கூறியிருக்கிறார்.
ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முதற்தடவையாக இலங்கையின் பிரதிநிதிகளை ,எதிர்க்க்கட்சி உறுப்பினர்களை சந்தித்துவரும் தூதுவர் மே-எலின் ஸ்டெனர், நடந்து முடிந்த தேர்தல் தொடர்பான நிலைவரங்களையும் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் எத்தகைய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது, மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் அரசாங்க – எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்துவரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்;
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நோர்வே தூதுவர், புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள், அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பில் எங்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
குறிப்பாக மிகப்பெரும் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் தற்பொழுதுதான் தங்களுடைய வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுடைய செயற்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது என்பதை நோர்வே தூதுவரிடம் நாங்கள் எடுத்து கூறினோம். மேலும், சில வாக்குறுதிகளிலிருந்து அரசாங்கம் விலகி நிற்பதையும் அவதானிக்க முடிகிறது என்பதையும் சுட்டிக்காட்டினோம். விஷேசமாக புதிய அரசியலமைப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் போன்றவற்றில் ஆட்சியாளர்கள் உடனடி கரிசனை காட்டுவதாக தெரியவில்லை என்றும் ஆட்சியாளர்கள் தற்பொழுதுதான் தங்களுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்திருப்பதால் சற்று கால அவகாசம் வழங்கி,பொறுத்திருந்து பார்க்கவேண்டியிருக்கிறது எனவும் எடுத்துக்கூறினோம்.
அதற்கு பதிலளித்த தூதுவர் மே-எலின் ஸ்டெனர், தாங்கள் இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசியதாகவும், தாங்கள் (அரசாங்கம்) வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்தவாரம் இந்தியாவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விஜயம் செய்திருந்த நிலையில்,அவருடைய செயற்பாடுகள் மற்றும் நிலைப்பாடுகளை அவதானிக்கும்பொழுது ஜனாதிபதி இந்தியாவுடன் இணங்கி போவதான மனநிலையில்தான் இருப்பதாக தங்களுக்கு (தூதுவர்) தென்பட்டதாகவும் மே-எலின் ஸ்டெனர் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.
![]()