ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய மாற்றங்கள்!
ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக மறுசீரமைத்து மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான மனுச நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணான்டோவும் கலந்து கொண்டதுடன் தலதா அத்துகோரள, ருவன் விஜேவர்தன, வஜிர அபேவர்தன மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாகவே மறுசீரமைப்பது தொடர்பில் இங்கு அதிகம் கவனம் செலுத்தப்பட்டதாகவும் புதிய ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்குவதற்கு தேவையான யோசனைகளை தனக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கலந்துரையாடல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதை அனைத்து முன்மொழிவுகளையும் தொகுத்து, ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் அவரிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் நிறைவு பெற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் ஆறு வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கும் வகையில் நிறைவேற்றுக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பலரின் கட்சிப் பதவிகள் பறிபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிய தொடர்பிலுள்ள பலருக்கு புதிய பதவிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![]()