முச்சந்தி

சிரியாவில் பறிபோகும் குர்திஷ் நிலம்!…  துருக்கியின் ஆக்கிரமிப்பு எல்லை மீறுகிறதா?…  – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இப்போது சிரியாவில் குர்திஷ் மக்கள் தம் வசமுள்ள சுயாட்சி அதிகார பிரதேசத்தை பாதுகாக்க முயல்கின்றனர். ஆனால் துருக்கியின் ஆக்கிரமிப்பு தொடருமானால், குர்திஷ்தான் மக்களின் நாடு காவு வாங்கப்படும் கனவு தேசமாகவே மாறும்.

ஈராக், ஈரான், சிரியா, துருக்கி நாடுகளுக்குள் ஆயிரம் பகைமை போட்டியிருந்தாலும், குர்திஷ்தான் என்கிற ஒரு அரசு உருவாகிவிடக் கூடாது என்பதில் இந்நாடுகள் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை தான்)

சிரியாவில் வீழ்ச்சியுற்ற அசாத் ஆட்சியின் பின்னர், சிரியாவில் வாழும் குர்திஷ் மக்கள் எதிர்காலத்தில் இழக்க நேரிடுபவை இன்னும் அதிகம் என்பதை காணக் கூடியதாக உள்ளது. அவர்களின் சுயாட்சி முதல் தங்கள் சமூகங்களின் பாதுகாப்பு வரை மிகவும் முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அசாத் ஆட்சியின் பின்னர் முதன்மையான பயனாளிகளாக இஸ்ரேலும் துருக்கியும் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தாயகம் இல்லாத குர்திஷ் மக்கள் :

மத்திய கிழக்கில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமான குர்திஷ் மக்கள் (Kurdish) தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வட ஈராக், வடமேற்கு ஈரான், தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர்.

ஆயினும் தாயகம் இல்லாத மிகப்பெரிய இனக்குழுவான குர்திஷ் மக்கள் துருக்கியிலும், சிரியாவிலும் பிற இடங்களிலும் நீண்டகாலமாக துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

ஐந்து நாடுகளில் சிதறி வாழும் குர்திஷ் மக்களின், பேரிடியாக ஐந்து நாடுகளிலுமே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட இனமாக கருதப்படுகின்றனர். இதன் விளைவாக விடுதலை போராட்டத்திற்கும் தள்ளப்பட்டார்கள்.

ஈராக், ஈரான், சிரியா, துருக்கி நாடுகளுக்குள் ஆயிரம் பகைமை போட்டியிருந்தாலும், குர்திஷ்தான் என்கிற ஒரு அரசு உருவாகிவிடக் கூடாது என்பதில் இந்நாடுகள் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை தான்.

2011 இல் சிரியாவின் உள்நாட்டுப் போர் வெடித்த பிறகு, நவம்பர் 2103 இல் குர்திஷ் படைகள் வடகிழக்கு சிரியாவின் சில பகுதிகளில் சுயாட்சியை அறிவித்தன.

அங்கு அவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சுமார் 30 மில்லியன் குர்திஷ் மக்கள் வடக்கு ஈராக், மேற்கு ஈரான், வடக்கு சிரியாவில் பரவி உள்ளனர். மேலும் துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 18% பேர் உள்ளனர்.

ஐந்து நாடுகளில் சிதறிய குர்திஷ்தான்:

குர்திஷ்தான் தாயகமானது ஈராக், ஈரான், சிரியா, துருக்கி, ஆர்மேனிய நாடுகளுக்குள் ஒவ்வொன்றுடனும் இணைந்தவாறு, அந்தந்த நாடுகளின் எல்லைப் பகுதிகளிலேயே அமைந்திருக்கின்றன. குர்திஷ் மக்கள் வாழும் இந்த மலைப்பகுதிகளை இணைத்து ‘குர்திஷ்தான்’ எனும் தனிநாடு காண விரும்புகிறார்கள்.

முதலாம் உலகப்போருக்குப் பின்னர் ஓட்டோமான் சாம்ராஜ்யம் வீழ்ந்ததையடுத்து நடைபெற்ற ‘வெர்சாய்ஸ்’ சமாதான மாநாட்டில் குர்திஷ்தான் கோரிக்கை முதலில் முன்மொழியப்பட்டது.

இதையடுத்து, முதலாம் உலகப்போரில் வெற்றிபெற்ற மேற்கத்திய கூட்டுப்படையினர் சுவிட்சர்லாந்தில் கூடி, ‘செவ்ரெஸ் ஒப்பந்தம்’ கொண்டுவந்தனர். 1920ல் கொண்டுவரப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், ஐந்து நாடுகளிலும் உள்ள பகுதிகளை சேர்க்காமல், துருக்கியில் மட்டும் உள்ள பகுதியில் ’குர்திஷ் தேசம்’ ஒன்று உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், 1923ம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுடன் கையெழுத்தான ‘லாவ்சன்னே’ ஒப்பந்தத்தின்படி நவீன துருக்கியின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட போது குர்திஷ் தேசம் உருவாக்கப்படவில்லை என்பது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களாகும்.

அசாத் வீழ்ச்சியின் பின் குர்திஷ் மக்கள்:

சிரியாவுடன் கிட்டத்தட்ட 900 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் துருக்கி, அசாத் ஆட்சியின் நீண்டகால எதிர்ப்பாளராகவும், சுன்னி ஜிஹாதி பிரிவுகள் உட்பட ஆயுதக் குழுக்களின் முதன்மை ஆதரவாளராகவும் இருந்து வந்துள்ளது.

2016 முதல், துருக்கி தனது எல்லையில் ஒரு தன்னாட்சி குர்திஷ் பிராந்தியத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் குர்திஷ் மக்களைக் குறிவைத்து சிரியாவில் பல இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி நடத்தியது.

2019 ஆம் ஆண்டில், சிரியாவுடனான தனது எல்லையில் 30 கிலோமீட்டர் இடையக பாதுகாப்பு வலயத்தை உருவாக்க துருக்கி முயற்சித்து தோல்வியடைந்தது. பல ஆண்டுகளாக, எர்டோகன் அந்த தற்காப்புப் பகுதியை நிறுவுவதற்கான தனது திட்டங்களை பலமுறை முயற்சித்துள்ளார்.

தற்போது அசாத் வெளியேற்றப்பட்ட உடனேயே, அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக SDF கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியைக் கைப்பற்ற துருக்கி ஆதரவுப் போராளிகள் நுழைந்தனர்.
துருக்கிய தாக்குதலுக்கு மத்தியில் சிரியாவின் குர்திஷ் மக்களுக்கு எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியுள்ளது.

துருக்கியின் ஆக்கிரமிப்பு தாக்குதல்:

டிசம்பர் 8 அன்று சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவில் அதிகார வெற்றிடத்தை நிரப்ப உள்ளூர், பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளில் துருக்கி முதன்மையானது.

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் மூலம் அமெரிக்காவுடன் இராணுவக் கூட்டணியில் இருந்தாலும், சிரியாவில் துருக்கியின் முக்கிய இலக்கு, குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளை (SDF) அழிப்பதாகும்.

பல ஆண்டுகளாக, சிரியாவின் வடகிழக்கில் இஸ்லாமிய அரசை எதிர்த்துப் போராட அமெரிக்கப் படைகளுடன் SDF உழைத்துள்ளது. துருக்கியை தளமாகக் கொண்ட குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி – PKK இன் விரிவாக்கமாக SDF இன் சண்டைப் படையின் பெரும்பகுதியை உருவாக்கும் மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளாக YPGஐ துருக்கி பார்க்கிறது.

PKK பல தசாப்தங்களாக தென்கிழக்கு துருக்கியில் போராடி வருகிறது. அத்துடன் குர்திஷ் இன மக்களுக்கு அதிக சுயாட்சி மற்றும் உரிமைகளைப் பெறுவதற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

சிரிய தேசிய இராணுவம் -SNA

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் – HTS, ஒரு சக்திவாய்ந்த இஸ்லாமியப் பிரிவின் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள், அசாத் ஆட்சியை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

துருக்கியுடன் தொடர்புடைய மற்றொரு குழுவான ‘சிரிய தேசிய இராணுவம்’ – SNA, அந்த சண்டையில் முக்கிய பங்கு வகித்தது. சிரியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

துருக்கி ஆதரவு சிரிய இடைக்கால அரசாங்கம், சிரியாவில் ஒரு மாற்று அரசாங்கம் அமைக்க முயற்சி செய்கிறது. அசாத் அரச எதிர்ப்பை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக 2017 இல் SNA ஐ நிறுவ துருக்கி உதவியது.

துருக்கியினால் பயிற்சியளிக்கப்பட்ட, ஆயுதம் மற்றும் நிதியுதவி பெற்ற SNA, டிசம்பர் தொடக்கத்தில் சிரியப் படைகளிடமிருந்து சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை மீண்டும் கைப்பற்ற HTS க்கு உதவியது.

சிரியாவில் குர்திஷ் சுயாட்சிக்கான எந்தவொரு வாய்ப்புகளையும் நசுக்கும் முயற்சியில் SNA அங்காராவுடன் பூரண உடன்பாடு நிலையில் உள்ளது.
SNA 2018, 2019 இல் குர்திஷ் படைகளுக்கு எதிரான துருக்கியுடன் ஆதரவு தாக்குதல்களில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

குர்திஷ் மக்களுக்கு அமெரிக்காவின் நிச்சயமற்ற ஆதரவு?

சிரியாவில் தற்போது புதிய அரசை உருவாக்குவது சிரியர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

சிரியாவில் போர் நிலமைகள் மாறக்கூடிய நிலையில் இருப்பதால், குர்திஷ் படைகள் ஐ.எஸ்.க்கு எதிராக தொடர்ந்து போரிட அனுமதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை துருக்கியுடன் விவாதித்ததாக பிளிங்கன் கூறினார்.

ஆனால் துருக்கி ஒரு பரந்த தாக்குதலுக்குத் தயாராகும் நிலையில், குர்திஷ் மக்களுக்கு அமெரிக்க ஆதரவின் எதிர்காலம் தெளிவாகத் தெரியவில்லை.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு குர்திஷ் மக்களுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றார்.

ஐ.எஸ்.க்கு எதிரான போரில் குர்திஷ் பெஷ்மெர்கா படை:

வடக்கு ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, ஈராக்கிய குர்திஷ்களான பெஷ்மெர்கா வீரர்கள் முன்னணியில் போரிட்டனர். 2013 ஆம் ஆண்டின் மத்தியில், தனது கட்டுப்பாட்டில் வடக்கு சிரியாவில் இருந்த எல்லைக்குள் மூன்று குர்திஷ் வாழ்பகுதிகளை ஐ.எஸ். ஜிகாதி குழுவினர் குறி வைத்தனர்.

ஜூன் 2014ல் வடக்கு ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறியதும், அந்த நாட்டு குர்து மக்களைச் சர்ச்சைக்குள் இழுப்பதாக இருந்தது. ஈராக்கிய ராணுவத்தால் கைவிடப்பட்ட பகுதிகளுக்கு, தன்னாட்சி பெற்ற ஈராக்கில் குர்திஷ்தான் பிராந்தியத்தின் அரசாங்கம் தனது பெஷ்மெர்கா படைகளை அனுப்பி, ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டி அடித்தது.

அடக்கு முறைக்குள் குர்திஷ் மக்கள்:

நீண்ட காலமாக தனி நாட்டிற்கான போராட்டங்களால் குர்திஷ் மக்கள் பல அடக்கு முறைக்கு உள்ளானார்கள். குர்திஷ் மக்க்களின் எழுச்சிகளை கட்டுப்படுத்த நினைத்த ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஈவு இரக்கமின்றி அம்மக்களை கொன்று குவித்தார்.

1988-ல் குர்திஷ் இன மக்கள் மீது நரம்புகளை செயலிழக்க வைத்துக் கொல்லும் அதிபயங்கர ரசாயன ஆயுதங்களையும் ஏவினார்.

சதாமின் எதிரியான ஈரானிலும் குர்திஷ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். துருக்கி அரசாலும் குர்திஷ் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். சிரியாவும் குர்திஷ் மக்களை ஒடுக்கிக்கொண்டே வருகிறது.

இப்போது சிரியாவில் குர்திஷ் மக்கள் தம் வசமுள்ள சுயாட்சி அதிகார பிரதேசத்தை பாதுகாக்க முயல்கின்றனர். ஆனால் துருக்கியின் ஆக்கிரமிப்பு தொடருமானால், குர்திஷ்தான் மக்களின் நாடு காவு வாங்கப்படும் கனவு தேசமாகவே மாறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button