ஆய்வுக்கப்பல்கள் வரும்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்ன ?

எமது நாட்டுக்குள் சர்வதேச நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், ஆய்வுக்கப்பல் வருகையின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று  கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இலங்கைக்கு வருகைதரும் ஆய்வுக்கப்பல்கள் தொடர்பில் இந்தியாவினால் வெளிப்படுத்தப்பட்ட பிரத்யேக கரிசனைகள் என்னவென்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித்த ஹேரத், இந்தியா அதன் ஆட்புல எல்லை சார்ந்தும், பிராந்தியப்பாதுகாப்பு சார்ந்தும் கரிசனைகளை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

அதேவேளை தாமும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், ஆகையினாலேயே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கோ அல்லது பிராந்தியப்பாதுகாப்புக்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகள் இலங்கையில் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனத் தாம் உத்தரவாதமளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோன்று இலங்கைக்கான ஆய்வுக்கப்பல் வருகை தொடர்பில் ஆராய்ந்து, அதன்போது கையாளப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பெரும்பாலும் இவ்வருட இறுதிக்குள் விசேட குழுவொன்றை நியமிக்கவிருப்பதாகவும், அக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதனையடுத்து ஆய்வுக்கப்பல்களின் வருகை தொடர்பில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டலைத் தயாரிக்கவிருப்பதாகவும், அதுவரையில் நாட்டுக்குள் ஆய்வுக்கப்பல்கள் நுழைவதற்கு ஒருவருடகால தற்காலிகத்தடை விதிப்பதாகவும் கடந்த அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவிப்பை மேற்கோள்காண்பித்த ஊடகவியலாளர், ஒருவருடம் நிறைவுறும் நிலையில், அந்த நடைமுறை வழிகாட்டலுக்கு என்ன நடந்தது? என அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அந்நடைமுறைகள் தொடர்பில் சில அறிக்கைகள், முன்மொழிவுகள் என்பன சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் தற்போதைய சூழ்நிலைக்கு அமைவாக அந்த நடைமுறைகளை மாற்றியமைக்கவேண்டியிருப்பதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.

அத்தோடு ஆய்வுக்கப்பல்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும், அதன் பின்னர் அத்தடையை நீக்குவதா? இல்லையா? என்பது குறித்து புதிதாக நியமிக்கப்படும் குழுவின் அறிக்கைக்கு அமைவாகத் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *