முச்சந்தி

ஆழிப் பேரலையின் இருபதாவது ஆண்டு… சுனாமி நிவாரண பொறிமுறையை எதிர்த்த JVP!… – நவீனன்

(ஆழிப் பேரலையாக தமிழர் தாயகத்தை இயற்கை அழித்த சுனாமி 2004 ஆண்டின் இருபதாம் ஆண்டு நினைவுகளில் ஈழத்தமிழர் மூழ்கியுள்ளனர். ஆனால் சுனாமி நிவாரண பொறிமுறையை எதிர்த்த JVPயின் இன வஞ்சகத்தை தமிழர் தேசம் ஒருபோதும் மறக்காது)
இயேசு பாலன் பிறப்பை தேவாலையங்கள் எங்கும் மங்களம் பொங்கும் நிகழ்வுகள், பூஜைகள் நடந்து கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்த நேரம்.அந்த நேரம் தான் இந்தனோசியா கடலடியில் ஏற்பட்ட பூமித் தட்டுக்களின் உரசல் பூமிப்பந்தையே உலுக்கி இந்து மகா சமுத்திர நீரையே விழுங்கிக் கொள்கிறது.
அதிகாலை 2004.12.26 அன்று ஈழத்து நேரம் அதிகாலை 6.28 மணியளவில் விழுங்கிய நீரை பூமித்தகடுகள் துப்பிவிட மேலெழுந்த நீர் பெரும் அலைகளாகி சுனாமி என்ற சொல்லை ஈழ தேசத்துக்கு அறிமுகப்படுத்துகிறது.
2004 மார்கழி மாத இரவு தனது இருட்டைத் தொலைத்து சூரிய ஒளியால் ஒளிரத் தொடங்கிய அதிகாலை நேரம். பல ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எம் வாழ்வுக்கு ஒளி காட்ட பாலன் பிறந்துவிட்டான் என்று எம் ஊர்கள் மட்டுமல்ல உலகமே மகிழ்வில் திளைத்துக் கொண்டிருந்த வேளையில்ஈழ தேசத்தை போலவே, பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி ,பின்னர் ஆழிப் பேரலையின் பாரிய அழிவினை இதே காலகட்டத்தில் எதிர் கொள்கிறது.
ஈழத்தில் கரையோர மக்கள் காலை 9.00 -9.15 ஈழத்து நேரப்படி நத்தார் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் கடற்கரை நீர் உள் இழுக்கப்படுவதை கண்டு என்ன என்று அறிய முன் கடலில் பாரிய அலை ஒன்று கரை நோக்கி வருவதை கண்டு திகைத்து நின்றார்கள்.
தமிழர் தேச கட்டுமான சிதைவு:
நீண்ட காலமாக விடுதலைக்காக போராடிய தமிழ் மக்கள் “தேசம்” எனும் கட்டுமானத்துக்குள் வந்த காலகட்டமே 2003-2005 ஆகும். விடுதலையை மூச்சாக கொண்டு போராடிய தமிழர் தேசம் பின்னர் ஆழிப் பேரலையின் பாரிய அழிவினை இக்காலகட்டத்தில் எதிர் கொள்கிறது.
ஈழத்தின் கீழ்நில கடற்கரைப் பகுதிகள் யாவும் சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு பாரிய சேதம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 30000 மக்கள் இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்து, பல ஆயிரம் மக்கள் காயமடைந்து, பல கோடி உடமைகளை இழந்து போன அந்த நொடி இன்றும் இரத்தவாடையோடு நகர்கிறது.
தமிழ் இனத்தை மட்டுமல்லாது பல்லின மக்களையும் ஏதுமற்ற ஏதிலிகளாக்கிய சுனாமி சிறிய இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தாக்கி விட்டு சென்ற போது மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். கடல் அலையால் தூக்கி எறியப்பட்டவர்கள் கையில் கிடைத்தவற்றை பிடித்து கொண்டு தம்மை காத்து கொண்டார்கள். பனை தென்னை என்றும் மரங்களின் கொப்புகளிலும் பிடித்துக்கொண்டு காத்து கொண்டவர்கள் பயங்கர காயங்களாலும் பாதிக்கப்பட்டார்கள்.
அழிந்த தேசத்தை மீள அழித்தனர்:
இருபதாவது ஆண்டில் சுனாமியின் அழிவுகள் தமிழ் மண்ணில் நிகழ்ந்ததன் பின்னர் அதற்குரிய நிவாரண பொறிமுறையை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது அனைத்து மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான, இன,மத,மொழி வர்க்க வேறுபாடற்ற, நாட்டிற்கு தேவையான அரசியல் யாப்பை எங்களால் உருவாக்க, வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து இன மக்களும் எமக்கு ஆதரவை வழங்கியிருக்கிறார்கள் என தேர்தல் வென்றதன் பின்னர் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
தமிழ் பேசும் மக்கள் இலங்கையில் சம அந்தஸ்த்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கு ஒன்றினைந்த இலங்கைக்குள் உச்சபட்ச தீர்வை, வழங்குவார்கள் என நம்பிக்கையை இந்த தேர்தல் தீர்மானிக்கிறது என்றும் சில ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டன.
இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ, அதன் ஊடாக அரசியல் செய்வதற்கோ இனிமேல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப் போவதில்லை. சட்டத்துக்கு மேல் யாருமில்லை என கன்னி உரையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
சுனாமி நிவாரண பொறிமுறையை எதிர்த்த JVP
இப்போது இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ இடமில்லை என்று கூறும் ஜேவிபியின் முன்னைய வரலாற்றை பலரும் மறைக்க முயல்கின்றனர்.
1994 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசை JVP ஆதரித்து வந்தாலும், பின்னர் குமாரதுங்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்திருந்தது.
2000 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்ற இன்றைய ஜனாதிபதி 2001 தேர்தலில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
2004 இல், சிறீலங்க சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிட்டு 39 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் கைப்பற்றியது. குருணாகல் மாவட்டத்தில் இருந்து அனுர திசநாயக்கா நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
சந்திரிக்காவின் அமைச்சரவையில் விவசாயம், கால்நடைகள், நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக 2004 பெப்ரவரியில் நியமிக்கப்பட்ட அனுரா, 2005 ஜூன் 16 இல் தன் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
காரணம் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அரசாங்கம் புலிகளுடன் இணைந்து ஏற்படுத்திய வட, கிழக்கு மாகாணங்களின் சுனாமி நிவாரண ஒருங்கிணைப்புப் பொறிமுறையை JVP எதிர்த்ததே காரணம் என்பது வரலாற்று உண்மையாகும்.
இப்படித்தான் உள்ளது உண்மையான வரலாறு. ஆயினும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், பொதுத் தேர்தலின் போதும், பல வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார்கள்.
13ஆவது திருத்த சட்ட நீக்கம்?
தமிழ் பேசும் மக்கள் இலங்கையில் சம அந்தஸ்த்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கு ஒன்றினைந்த இலங்கைக்குள் உச்சபட்ச தீர்வை வழங்குவோம் என ஜனாதிபதி தேர்தலின் போதும், பொதுத் தேர்தலின் போதும், வாக்குறுதிகளை ஜேவிபி வழங்கியிருந்தது.
1980களின் பிற்பகுதியில் JVPஆரம்பத்தில் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த இருந்தது. ஆனாலும் பின்னய காலத்தில் கட்சியின் தலைவர் றோகண விஜயவீர இனவாதத்தை கையில் எடுத்தார்.
அதன் பின்னர் இனவாதத்தை தூண்டிவிட்டே இக்கட்சி செயல்பட்டது. தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளை மீறி, தமிழ் மக்களுக்கு ஓரளவு அதிகாரப் பகிர்வு வழங்கிய 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கப் போகிறார்கள் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரிஸ்வின் சில்வா கூறியதை பின்னர் வாபஸ் பெற்றுக் கொண்டாலும், அவர்கள் மீண்டும் தங்கள் இனவாத அரசியலை விட்டு வெளியேறவில்லை என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
கற்றுணராத கடந்த 77 வருட அனுபவங்கள்:
இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த 77 வருட அனுபங்களை கற்றுணர்ந்த பாடங்கள் பலவும், காற்றில் கரைந்ததே மிச்சமாகும்.
1977ஆம் ஆண்டு தேர்தலில் ஜே.ஆர் ஜெயவர்த்தனவிற்கு இலங்கை மக்கள் கொடுத்த அறுதிப் பெரும்பான்மையை 168 ஆசனங்களில் 140ல் வெற்றி பெற்று சாதனை படைத்தார். ஆனால் 1983 இனக்கலவரத்திற்கு வித்திட்டதோடு, இலங்கையை இரத்தக் களரியாக்கிய சிங்கள பேரினவாத அரசின் கொடூரமான ஆட்சியை உலக அரங்கில் வெளிப்படுத்தினார்.
2019 பின்னர் 69 லட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவும், 145 ஆசனங்களுடன் 2/3 நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்ற அரசாங்கமாகவும் உருவெடுத்த பொதுஜன பெரமுனவும், கோட்டபய ராஜபக்ஸவும் நாட்டை வங்குரோத்திற்கு இட்டுச்சென்று, உலகின் எல்லா நாடுகளிலும் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த 77 வருட அனுபங்களை கற்றுணர்ந்த எந்த அரசும் இதுவரை நாட்டை இனவெறி தவிர்த்து ஆளவில்லை.
தற்போது 2024இல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அறுதிப்பெரும்பான்மை பெற்ற அதாவது 159 ஆசனங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக தேசிய மக்கள் சக்த்தியும் (NPP) ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து உள்ளது.
அனைத்து மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான, இன,மத,மொழி வர்க்க வேறுபாடற்ற, நாட்டிற்கு தேவையான அரசியல் யாப்பை எங்களால் உருவாக்க , வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து இன மக்களும் எமக்கு ஆதரவை வழங்கியிருக்கிறார்கள் என தேர்தல் வென்றதன் பின்னர் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
தமிழ் பேசும் மக்கள் இலங்கையில் சம அந்தஸ்த்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கு ஒன்றினைந்த இலங்கைக்குள் உச்சபட்ச தீர்வை, வழங்குவார்கள் என நம்பிக்கையை இந்த தேர்தல் தீர்மானிக்கிறது என்றும் சில ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டன.
ஆழிப் பேரலையாக தமிழர் தாயகத்தை இயற்கை அழித்த சுனாமி 2004 ஆண்டின் இருபதாம் ஆண்டு நினைவுகளில் ஈழத்தமிழர் மூழ்கியுள்ளனர். ஆனால் சுனாமி நிவாரண பொறிமுறையை எதிர்த்த JVPயின் இன வஞ்சகத்தை தமிழர் தேசம் ஒருபோதும் மறக்காது.
தற்போது இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ இடமில்லை என்று கூறும் ஜேவிபியின் முன்னைய வரலாற்றை பலரும் மறைக்க முயல்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button