ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இனியும் கால நீடிப்பு வழங்கக் கூடாது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை வேண்டுவதாக கனடா அரசிடம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சிறீதரன் எம்.பி.க்கும் கனடா வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனேடிய அரசியல் தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்புநேற்று வியாழக்கிழமை கனடா – ஒட்டாவாவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, சிறீதரனால் கனேடிய பிரதியமைச்சரிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அக்கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது

ஈழத்தமிழர் மீது திட்டமிடப்பட்ட தொடர்தேர்ச்சியான இன அழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றக் குழுத் தலைவராக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி 1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய திருகோணமலைப் பிரகடனத்தில் எவ்வாறு இந்தத் திட்டமிடப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசு கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதென்பதை ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தந்தை செல்வா அவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக விளக்கியிருந்தார். அதன் ஒரு வடிவமாகவே ஒற்றையாட்சி அரசியலமைப்பு தொழிற்படுகிறதென்று சர்வதேசதரப்புகளை நோக்கி இலங்கை எதிர்நோக்கும் சிக்கல் என்ற வெளியீட்டை முதல் முதலாக சர்வதேசம் நோக்கி தமிழரசுக்கட்சி முன்வைத்திருந்தது. இது தொடர்பில் அன்று தொட்டு இன்று வரை சர்வதேசத்தின் பங்கை மக்கள் பிரதிநிதிகளாக நாம் வலியுறுத்திவருகிறோம்.

மேற்குறித்தபடி, 1956 ஆம் ஆண்டில் இந்தத் திட்டமிட்ட இன அழிப்பு என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்த முன்னரே தீவில் இன ரீதியான ஒடுக்குமுறை ஆரம்பித்திருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்ட 1948 இல் இருந்தே தமிழர்களின் குடிப்பரம்பலை அவர்களின் வரலாற்று, மரபுவழித் தாயகத்தில் மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்தல் என்பதும் மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறிப்பு உள்ளிட்ட, இதர அடக்குமுறைகளும் ஆரம்பித்துவிட்டிருந்தன.

திட்டமிட்ட இன அழிப்பின் போக்கில் இறுதியாக, பெரும் சரீர இன அழிப்புப் போரை எமது மக்கள் 2009 ஆம் ஆண்டில் எதிர்கொண்டு அழிவுக்குள்ளான பேரவலம் நடைபெற்றது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்பதான நீண்டதொரு அமைதிவழிப் போராட்டத்தின்போது தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான கூட்டாட்சிக் கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்டுவிட்டது. நேரடிப் பேச்சுகளில் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பாக இணங்கிய உடன்படிக்கைகளையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒருதலைப்பட்சமாக மீறி, மேலும் பேரினவாதமாகக் கெட்டியாக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்புகளை தமிழ் மக்களின் பங்கேற்பின்றி உருவாக்கினர்.

அமைதிப் போராட்டம் வன்முறையாலும் இனக் கொலைத் தாக்குதல்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்டது. அமைதி வழிமுறைகள் அனைத்தும் முயற்சிக்கப்பட்டு பலனிளிக்காதவிடத்து சர்வதேச சட்டம் அளிக்கும் இறுதி வழியான கிளர்ச்சி செய்யும் உரிமையின் பாற்பட்டும், பிரபலமான 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானம் வழங்கிய மக்களாணையின் பாற்பட்டும், ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. அதன்போது ஏற்பட்ட பல்வேறு சமாதான முயற்சிகளும் தென்னிலங்கைத் தரப்புகளின் இனவாதப் போக்கினால் முடக்கப்பட்டன. இடையில் கொண்டுவரப்பட்ட அதிகாரப் பரவலாக்க அரசியலமைப்பு ஒழுங்குகளையும் முழுமையாக அமுலாக்காமல் ஒற்றையாட்சி முறை தடுத்து வருகிறது. இவையெல்லாம் தங்களுக்கும் தெரிந்த வரலாறாக இருப்பினும் எனது கோரிக்கைகளின் சூழமைவை எடுத்தியம்புவதற்காக இங்கு இவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிட்டேன்.

இந்த அடிப்படையில், இலங்கைத் தீவு தொடர்பான பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாகுவதெனில் அதைப் பின்வரும் மூன்று விதமாகப் படிநிலைப்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தோடும் ஒழுங்கோடும் அணுக வேண்டும் என்பது எமது பார்வையாக உள்ளது:

1) தலையாய சர்வதேசக் குற்றமான இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல்

2) இதர சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, வலிந்து காணமலாக்கப்பட்டமை ஆகியவை பற்றிய பொறுப்புக்கூறல்

3) மேற்குறித்த குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாது புரையோடிப்போயிருக்கும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை, குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதும் பொறுப்புக்கூறலின் முக்கிய பெறுபேறாக அமையவேண்டும்.

மேற்குறித்த மூன்று முனைகளில் அர்த்தமுள்ளவகையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதிலும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதிலும் பெருந்தொகையாகப் புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடான கனடா நாடானது பின்வரும் வழிகளில் காத்திரமாக உதவவேண்டும் என்று அனைத்து ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் வேண்டி நிற்கிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *