யாழில் 350 பவுண் நகைகளைத் திருடியவரின் மனைவி விமான நிலையத்தில் கைது; இந்தியாவுக்குச் தப்பிச் செல்ல முற்பட்ட போது சிக்கினார்

யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கோண்டாவில், மானிப்பாய் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக 350 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் திருடப்பட்ட வழக்கில், பிரதான சந்தேகநபரின் மனைவி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து வெளிநாடு ஒன்றுக்குத் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையிலேயே, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையின் அடிப்படையில் விமான நிலையப் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் இந்திக தலைமையிலான குழுவினரிடம் பாரப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரிடம் இருந்து 40 பவுண் நகைகள் மற்றும் மூன்றரை லட்சம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட நகைகளைப் பெற்றுக்கொண்ட இருவரும் கைதுசெய்யப்பட்டு அவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் பிள்ளைகள் சிறுவர் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
![]()