நிலையியற் கட்டளைகளுக்கு முரண்; ஹன்ஸாட்டிலிருந்து அர்ச்சுனாவின் உரை நீக்கம்
சுயேச்சைக்குழு 17 இன் யாழ் மாவட்ட எம்.பி.யான இராமநாதன் அர்ச்சுனா யாழ் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் பேசியதினால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்பட்டது.
பாராளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது .இதனையடுத்து இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தையடுத்து சுயேச்சைக்குழு 17 இன் யாழ் மாவட்ட எம்.பி.யான இராமநாதன் அர்ச்சுனா யாழ் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார்.
முதலில் யாழ் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாக பேசிய அர்ச்சுனா பின்னர் தடம்மாறி நிலையியற்கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத்தொடங்கினார். அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர்,விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதைமட்டும் பேசுமாறு வலியுறுத்திய போதும் அதை கேட்கும் நிலையில் அர்ச்சுனா எம்.பி. இருக்கவில்லை.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.அத்துடன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் கடுமையாக தாக்கிப்பேசினார்
இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில் எதிர்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர்.
ஆனால் அர்ச்சுனா எம்.பி. தொடர்ந்தும் விடயத்துக்கு முரணாகவே கூச்சலிட்டுபேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபைமுதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க,அர்ச்சுனா எம்.பி. யாழ் வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார். ஆனால் விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் .தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே .அறிவிக்க வேண்டும்.ஆனால் இந்த கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை .ஆகையால் இவருக்கு பாராளுமன்ற செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன் அத்துடன் இவர் விடயத்துக்கு முரணாக பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இவ்வாறு சபைமுதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார் இந்நிலையில் அவரின் நிலையியற்கட்டளைகளுக்கு முறையான கருத்துக்கள் ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்படுமென சபாநாயகர் அறிவித்தார்.
![]()