திருமலையில் அடுத்தடுத்து கை வரிசை இன்னொரு கோயிலிலும் 3 விக்கிரகங்கள் உடைப்பு

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் முருகன் ஆலயத்திலும் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (14) நிலாவெளியில் உள்ள அடம்போடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மூல விக்கிரகம் விசமிகளால் உடைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையில் மறுநாள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி திருகோணமலை – நிலாவெளி வேலூர் முருகன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த கருங்கல்லினால் ஆன பிள்ளையார், முருகன், நாகதம்பிரான் ஆகிய மூன்று விக்கிரகங்கள் உட்பட கலசம் ஒன்றும் இனம்தெரியாதவர்களினால் உடைத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிறு (15) இரவு இடம்பெற்றிருக்கலாம் எனவும் நேற்று (16) காலை ஆலயத்திற்கு வழிபாட்டுக்கு சென்ற ஒருவரினால் இது அவதானிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. அத்துடன் இந்த ஆலயம் கடந்த மாதம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிலாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *