ஞானசார தேரரும் அநுரவுக்கு ஆதரவு
இனவாதம், மதவாதத்தை இல்லாது செய்யும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை வரவேற்பதாகவும், அந்த வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தாம் தயார் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணமாக முன்னர் மகா சங்கத்தினரை சந்தித்து மிகவும் முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இனவாதம், மதவாதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூறியதுடன், இனி இனவாதம், மதவாதத்திற்கு இடமளிக்கப்படாது என்று கூறியுள்ளார். அவர் பாராளுமன்றத்தில் கொள்கைப் பிரகடன உரையின் போதும் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம். இதற்காக நாங்கள் வழங்கக் கூடிய முடிந்தளவான பங்களிப்பை வழங்க வேண்டும். இப்போது நாட்டுக்கு இனவாதம் பேதமற்ற சூழலை உருவாக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
நாங்கள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். நாடு தொடர்பான பிரச்சினையினாலேயே நாங்கள் அவ்வாறான நடவடிக்கை எடுத்தோம். ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கத்தை நடத்திச் சென்றவர்கள் சரியாக புரிந்துகொள்ளாது செயற்பட்டமையினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நாங்கள் அவ்வாறான சம்பவங்களுக்கு முன்னரே ஏற்படப் போகும் பிரச்சினைகள் தொடர்பில் கூறியிருந்தோம். ஆனால் அந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் அவற்றை கண்டுகொள்ளவில்லை. எங்கள் மீது குறைகளை கூறி வந்தன. இதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்றன நடந்தன.
இந்நிலையில் முறையான நிறுவனமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். இதன்மூலம் மதவாதிகள் யார்? அடிப்படை வாதிகள் யார்? என்பன தொடர்பில் அறிந்துகொள்ள முடியும். ஏதாவது சட்டமூலத்தை நிறைவேற்றி இனவாதம், மதவாதத்தை இல்லாது ஒழிப்போம். உடல் புல்லரிக்கும் விடயங்கள் தொடர்பான தகவல்கள் எங்களிடம் உள்ளன. அவற்றை எங்களால் சமர்ப்பிக்க முடியுமாக இருக்க வேண்டும் என்றார்.
![]()