இம்மாத இறுதிக்குள் அநுர சீனா செல்வார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய விஜயத்தை முடிந்து நாடு திரும்பிய பின்னர் இம்மாத இறுதிக்குள் சீன விஜயத்துக்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கு முன்னதாக சீனத் தூதுவரின் தலையீட்டின் பேரில் இலங்கைக்கு பல விசேட சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் இதனால் இலங்கை மக்கள் இலவச மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் சீனாவிலிருந்து சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச துறையின் துணை அமைச்சர் திருமதி சன் ஹையன் இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர் சீனாவின் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் குறித்த பிரேரணை சீனாவிலிருந்து சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க சீனா தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடுத்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்காக சீனாவிற்கு அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா தயாராகி வருகின்றது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை உருவாக்கி அந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஆதிக்கத்தை மாற்றுவதுதான் சீனாவின் திட்டம் என்று கூறப்படுகிறது.

மேலும், கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான விசேட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் பல சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பை வந்தடைந்திருந்தன.

ஆனால் ரணிலின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் இந்த முடிவை சீனா சகித்துக் கொள்ளவில்லை, அதன் காரணமாகவே ரணிலின் ஆட்சியில் இலங்கையுடன் சீனா அதிக நட்புடன் இருக்கவில்லை. அந்த கால அவகாசம் ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதன்படி ஜனவரி 15ஆம் திகதிக்கு பின்னர் சீன கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்படும். இவ்வாறான ஒரு கப்பலுக்கு சீனா ஏற்கனவே இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி கொடுப்பாரா இல்லையா என்பது ஜனாதிபதியின் சீன விஜயம் ஆரம்பிக்கும் அதே நேரத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *