ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சியை தடுப்பதே அமெரிக்கத் தடை அறிவிப்பின் உள்நோக்கம்

நாட்டில் புதிய ஆட்சி ஏற்பட்டாலும் ஸ்திரமற்ற நிலைமையே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், ராஜபக்ஷக்கள் குறிப்பாக நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் மீள் எழுச்சி அடைந்து அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காகவே என்னை மையப்படுத்திய அமெரிக்க தடை அறிவிப்பின் உள்நோக்கமாக உள்ளது என்று ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும் ராஜபக்ஷக்களின் ஒன்றுவிட்ட சகோதரருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மீது சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்துடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ஊழல் மற்றும் மனித உரிமைமீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதில் அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை தடைகளை விதித்துள்ளது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் எயார்பஸ் விமானங்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்துவதற்காக இலஞ்சம் பெற்றதாக கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான ஊழல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அமெரிக்க தடை அறிவிப்பு சம்பந்தமாக உதயங்க வீரதுங்க வீரகேசரிக்கு தெரிவிக்கையில்,

அமெரிக்கா என் மீது விதித்துள்ள தடை அறிவிப்பை பார்க்கின்றபோது ஆச்சரியமாகவுள்ளது. அத்துடன் அடிப்படையற்ற காரணங்களையும் அதற்கு கூறியுள்ளமையானது வியப்பளிப்பதாகவும்  உள்ளது.

அந்த வகையில் சில விடயங்களை இங்கே தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

முதலாவதாக, இந்த தடை அறிவிப்பானது தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றின் அறிக்கைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் குறித்த அறிக்கையில் அறுபது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் அவை படை அதிகாரிகளாகவே உள்ளனர். அதில் எனது பெயர் உள்ளடக்கப்படவில்லை என்பது முக்கியமான விடயமாகும்.

அவ்வாறான நிலையில் அமெரிக்கா எனது பெயரை உள்ளீர்த்து தடை விதித்தமைக்கு காரணம் அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும். அதாவது அமெரிக்காவின் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இவர் அநுரகுமாரவுடன் பேச்சுக்களை நடத்தும்போது நாட்டுக்கு வெளியில் மோசடியான முறையில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தார்.

அதேநேரம் அவர்களுக்கு இன்னுமொரு தேவையும் உள்ளது. அதாவது அநுர அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் ஸ்திரமற்ற நிலையில் தான் உள்ளார்கள் ஆகவே ராஜபக்ஷ குடும்பம் மீள் எழுச்சி கண்டுவிடும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. குறிப்பாக நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இளம் தலைமுறையினர் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது. இதன் காரணமாகவே ராஜபக்ஷ குடும்பத்தை அடியோடு பலவீனப்படுத்தவேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனை அநுர அரசுக்கு ஒரு உதவியாகவே அமெரிக்கா செய்கின்றது. இதேபோன்றதொரு நிலைமை முன்பும் காணப்பட்டது.

2015ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து அமெரிக்காவின் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் ஜோன் ஹெரி இலங்கைக்கு 43 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகை தந்திருந்தார்.

இவர் இலங்கைக்கு வருகை தந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவைச் சந்தித்திருந்தார். அதன்போதும் வெளிநாடுகளில் ராஜபக்ஷகளுக்கான முதலீடுகளை மீளப் பெற்று நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உதவுவதாக கூறப்பட்டது. எனக்கு எதிராகவும் அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னை கைது செய்து விளக்கமறியலில் வைத்து வாக்குமூலத்தைப் பெற்றார்கள். அதன் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விசாரணை விடயங்களை கையளித்து வழக்கு தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டது. தற்போது பத்து வருடங்களாகிறது. இன்னமும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. அப்படியென்றால் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏதுவான நிலைமைகள் சட்டமா அதிபரிடம் இல்லை என்பது தானே பொருளாகும். சான்றாதாரங்கள் இருந்திருந்தால் ராஜபக்ஷக்கள் அதிகாரத்தினை இழந்திருந்த காலத்தில் வழக்கை தாக்கல் செய்து நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. ஆகவே சான்றாதாரங்கள் இல்லாதவொரு விடயத்தினை மையப்படுத்தி தான் அமெரிக்காவும் என் மீது தடை விதித்துள்ளது என்பதை பார்க்கின்றபோது ஆச்சரியமாக உள்ளது.

இதற்கு முன்னதாக அவன்காட் விடயத்திலும் என்னைக் குற்றவாளி என்று பிரசாரம் செய்தார்கள். விசாரணைகளை நடத்தினார்கள். ஆனால் எந்தவிதமான வழக்குகளும் தாக்கப்படவில்லை. அதுபோன்று தான் மிக் கொடுக்கல் வாங்கலிலும் என்னை மூல காரணகர்த்தா என்று கூறுகின்றார்கள். இதுவொரு வேடிக்கையான விடயமாகும்.

ஏனென்றால் அக்காலத்தில் நான் தூதுவர் பதவியை வகிக்கவில்லை. வெறுமனே உக்ரேன், ரஷ்யாவில் வியாபாரத் தொடர்புகளை மட்டும் தான் வைத்திருந்தேன்.

ஆனால், மிக் கொடுக்கல் – வாங்கல் ஒப்பந்தங்களுக்கான கலந்துரையாடலைச் செய்தது அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆவர். அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது அப்போதைய விமானத் தளபதி ரொஷான் குணத்திலக்க.

அவ்வாறான நிலையில் மிக் கொடுக்கல் வாங்கல்களில் உண்மையிலேயே முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அவர்களிடத்தில் தான் விசாரணைகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான விடயங்கள் நடைபெறாமையால் தான் அவர்களிடத்தில் விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆகவே, அமெரிக்காவின் தடை அறிவிப்பானது ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றல்ல.

அந்த வகையில் குறித்த தடை அறிவிப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்யவுள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button