11 முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை ரணில், தினேஷிடம் அடுத்த வாரம் விசாரணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல செய்ததாக கூறப்படும் இம்யூனோகுளோபுலின் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கெஹலியவின் அமைச்சரவை பத்திரத்தை அங்கீகரித்த முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் 11 பேர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் அடுத்த வாரம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இதுவரையில் கடந்த அரசாங்கத்தில் இருந்த 14 அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

அதன்படி மேலும் நால்வரின் வாக்குமூலங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் அவர்களுள் அடங்குவர்.

அடுத்த வாரத்திற்குள் இவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, ரமேஷ் பத்திரன, விஜேதாச ராஜபக்ச, நளின் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க மற்றும் நசீர் அஹமட் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவையில் தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *