யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி.குழப்பம்;  வெளியேற்றக் கோரிய அதிகாரிகள்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தொடர்ச்சியாக கேள்வி கேட்டு விதண்டாவாதத்தில் ஈடுபட்ட யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு எம்.பி. யான இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் குரலெழுப்பியதால் சர்ச்சை எழுந்தது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

நகரசபை அபிவிருத்தி திணைக்களம் தொடர்பாக பேசப்பட்டபோது துறைசார் அதிகாரியிடம் அர்ச்சுனா எம்.பி.கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தார். இதன்போது வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்.பி. இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அர்ச்சுனா எம்.பி. தொடர்ச்சியாக அரச அதிகாரிகளின் கல்வித்தகைமைகள் தொடர்பில் கேள்விகளை கேட்டு விதண்டாவாதத்தில் ஈடுபட்டதுடன் பெண் அதிகாரிகளை கிண்டல் செய்யும் வகையில் அழைத்ததாலும் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட அரச அதிகாரிகள் அர்ச்சுனா எம்.பிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டதுடன் அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றுமாறும் குரலெழுப்பினர். இதனால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதேவேளை கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி ,

அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள்.இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள் .

யாழ் . போதனா வைத்தியசாலைக்கு எம்.பி.க்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால் கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கடும் தொனியில் கூறினார்.

இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் , தலையிட்ட நிலையில் நிலைமை சுமூகமானது.

இதன்போது வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணை நாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், ஶ்ரீபவானந்தராஜா ஆகியோரும் , அரச திணைக்கள பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படைகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *