நெருக்கடிக்குள் சிக்குகிறதா அநுர அரசு; மேலும் இரு அமைச்சர்களின் கலாநிதிப் பட்டங்களில் சர்ச்சை
தற்போதைய அரசாங்கத்தில் பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வல மாத்திரமல்லாது, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோரின் கலாநிதிப் பட்டங்கள் தொடர்பிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
முன்னதாக பாராளுமன்ற இணையத்தளம் மற்றும் விக்கிபீடியா பக்கத்திலும் மேலும் பல இணையதளங்களிலும் சபாநாயகர் அசோக ரன்வல, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் பட்டமும் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் கலாநிதி பட்டமும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கலாநிதி நிர்மல் தேவசிறி, ரஜரட்ட மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் குமார களுஆராச்சி மற்றும் முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பிய பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து அவரது பெயருக்கு முன்னாலுள்ள கலாநிதி பட்டம் நீக்கப்பட்டது.
அதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களின் கோப்பகத்தில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
எனினும் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்காரவின் கல்வித் தகைமைகள் தொடர்பான விபரங்களை பாராளுமன்ற இணையத்தளத்தில் பிழையான தரவுகளை மேற்கோள்காட்டி இலங்கை பாராளுமன்றம் தெளிவுபடுத்தியதுடன், ஏற்பட்ட அசௌகரியத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாகவும் பாராளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
இதன்மூலம் பாராளுமன்ற இணையத்தளத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாகவும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா அறிவித்துள்ளார்.
இதேவேளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலகவின் கலாநிதி பட்டம் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர் அநுர கருணாதிலக்க முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றும் பி.எச்.டி. பட்டம் பெறவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்று பாராளுமன்ற இணையதளமும் பதிவு செய்துள்ளது.
ஆனால் அமைச்சர் தற்போது களனிப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பயின்று வருவதால் எதிர்காலத்தில் தனது ஆய்வறிக்கையை முன்வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் பெயர்களைக் குறிப்பிட்டு தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவரது பெயர் கலாநிதி அனுர கருணாதிலக்க என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![]()