யாழில் காய்ச்சலால் சுவாசப்பையில் இரத்தக் கசிவு

48 மணித்தியாலத்திற்கு கூடுதலாக ஒருவருக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வதனூடாக, இறப்பை தடுக்கலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொது வைத்தியர் நிபுணர் பேரானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவிவரும் மர்ம காய்ச்சல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொது வைத்தியர் நிபுணர் இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சல் காரணமாக பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலருக்கு சுவாசப்பையில் இரத்த கசிவு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்திருக்கிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. நாங்கள் சில சிகிச்சைகளை அளித்தபோதும் சில பேரை காப்பற்ற முடியாமல் போய்விட்டது. ஆகவே இந்த காய்ச்சலுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

குறிப்பாக தற்பொழுது பரவும் காய்ச்சல் எலிக்காய்ச்சல் என்று சொல்லப்படுகிறது. தெள்ளு காய்ச்சலாக இருக்கலாம். கிருமிகளால் தொற்றுநோய் ஏற்படும் போது காய்ச்சலுடன் அவர்களுக்கு சுவாசப்பையிலும் தாக்கங்கள் ஏற்படலாம். சுவாசப்பையில் தாக்கம் ஏற்பட்டால் இரத்தக் கசிவு ஏற்பட்டு ஒக்ஸிசன் பரிமாற்றம் பாதிக்கப்பட்டு, இரத்தத்தில் ஒக்சிசன் அளவு குறைந்து மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்படும். செயற்கை சுவாசம் வழங்கினாலும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் கழிவுகள் கலந்திருக்கும். இந்நேரத்தில் உடலிலுள்ள காயங்களின் ஊடாக கிருமிகள் தொற்றலாம் அல்லது விலங்குகள், பறவைகள் மூலம் பரவவும் வாய்ப்பிருக்கிறது. எனவே கிருமி உடலுக்குச் சென்றால் உடலில் காய்ச்சல், இயலாத்தன்மை, அலுப்பு, தலையிடி போன்றவை ஏற்படும்.

ஆகவே 48 மணித்தியாலத்திற்கு கூடுதலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லவேண்டும். அங்கு இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மேலதிக சோதனைகள் மூலம் அதற்குரிய மருந்துகள் இருக்கின்றன. அதனை தகுந்த நேரத்தில் எடுத்தால் மரணத்தை தடுக்கமுடியும்.எனவே மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

ஆகவே பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்ற அதேவேளை,சுற்றத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *