புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டு; அனுரவுக்கு ருத்ரகுமாரன் வலியுறுத்து !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமர் வி. ருத்ரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவும், சிறிலங்கா அரசியலமைப்பின் 6வது திருத்தத்தை ரத்து செய்யவும் மற்றும் ஈழத் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்துடன் அரசியல் களத்தில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

ருத்ரகுமாரன் மேலும் தெரிவித்ததாவது, நீங்கள் [ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.)] ஆயுதப் போராட்டத்தை ஒன்றல்ல, இரண்டு தடவைகள் முன்னெடுத்தது.

உண்மையல்லவா? இருந்தும் உங்கள் மீதான தடை நீக்கப்பட்டு சுதந்திரமாக அரசியலில் ஈடுபட அனுமதி அளிக்கப்படவில்லையா?

உங்களுக்கு ஒரு நியாயமும், தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு இன்னொரு நியாயமும் இருக்கும் போது இதை நாம் எப்படி இனப் பாகுபாடாகப் பார்க்காமல் இருக்க முடியும்?

உங்கள் ஆட்சியிலும் அணுகுமுறையிலும் தமிழ் மக்களுக்கு போராட வேண்டிய அவசியம் இருக்காது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் கூறுவதில் உண்மை இருப்பதாக நீங்கள் நம்பினால், 6வது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு சுதந்திரமான அரசியல் நடவடிக்கைக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும்?

தமிழர் தாயகத்தில் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த ஏற்பாடு செய்யுங்கள்—தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மற்றைய தெரிவுகளில் ஒரு சுதந்திரமான தமிழீழ நாடு என்ற விருப்பத்தையும் உள்ளடக்குங்கள். தேவைப்பட்டால், நீங்கள் ஒற்றையாட்சியையும் ஒரு தெரிவாக சேர்க்கலாம்.

தமிழ் மக்கள் ஒற்றையாட்சித் தெரிவை ஏற்றுக்கொண்டால், தமிழ் மக்கள் உங்கள் மீது உண்மையாக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

மேலும், ருத்ரகுமாரன் கூறியதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை வகித்த போது, சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாமல் இருப்பதற்கு புலிகளே காரணம் என புலிகள் மீது பழி சுமத்தியது.

தற்போது 15 வருடங்கள் கடந்தும், [தமிழ்] தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேசசக்திகளால் பிரயோகிக்கப்பட்ட கடுமையான அரசியல் அழுத்தங்கள் தற்போது குறைபாடடைந்து தமிழ்த் தேசியப் பிரச்சினையை முற்றாகப் புறக்கணிக்கும் அளவிற்கு மங்கிப் போய்விட்டது.

சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையால் சிங்கள அரசியல் இறுகியிருப்பதால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் வெளி இல்லாமல் போய்விட்டது என்பதே உண்மை. அத்துடன் தீர்வு காணும் அரசியல் கலாசாரம் சிங்கள அரசியலில் இல்லை. இதற்கான அரசியல் விருப்பமும் சிங்கள அரசியலில் இல்லை.

மகாவம்ச சிந்தனையிலிருந்து இத்தகைய கலாச்சாரம் மற்றும் மனப்போக்கு (தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு எதிரானது) வளர்ந்துள்ளது என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

எமது மாவீர தியாகிகளை தமிழ் ஈழத் தனிநாடு கோரி போராட வற்புறுத்திய சிறிலங்காவின் அதே அரச அமைப்புதான் இன்றுவரை தொடர்கிறது.

வெவ்வேறு ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் மாறி வந்தாலும் சிங்கள பௌத்த ஆதிக்க அரச கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக, எந்தச் சீர்திருத்தத்தையும் அனுமதிக்க முடியாத அளவுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்பு மிகவும் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் நிலையும் இதுதான். நீதித்துறையின் நிலையும் இதுதான்.

பல தேசிய சமூகங்களைக் கொண்ட எந்தவொரு நாட்டிலும், எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு தேசம் தன் விருப்பத்தை ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் மற்ற தேசங்கள் மீது திணிக்க முடிந்தால், அது ஜனநாயகம் அல்ல; மாறாக அது இனநாயகம்.

இலங்கைத் தீவில் தற்போது நிலவுவது ஜனநாயகம் அல்ல, இனநாயகமே

2009ஆம் ஆண்டு முதல் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய அரசியலமைப்பின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று கூறப்படும். இந்த விஷயத்தில் உரத்த ஆரவாரங்களும் இருக்கும்.

எமது தமிழ்த் தலைவர்கள் பலர் இந்த புதிய அரசியலமைப்பு வாக்குறுதியின் பின்னால் ஓடி மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை வழங்குவார்கள். தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காரணம், தமிழ் தேசத்தின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் அரசியலமைப்பில் இடம் பெறவில்லை என்பதல்ல, மாறாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் வெளி -அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டிருந்தாலும்- இல்லாததுதான். கடுமையான சிங்கள-பௌத்த அரச கட்டமைப்பு காரணமாக. அரசியலமைப்பின் 13வது திருத்தம் கடந்த 30 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு.

தமிழரின் தேசிய அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பலவீனம் காரணமாக தேசிய மக்கள் சக்தி (NPP) யாழ்ப்பாணத்தில் ஆசனங்களைப் பெற்றது. இந்தச் சூழலில், NPPயின் “ஊழல் ஒழிப்பு” என்பது தமிழ் மக்களை கவர்ந்த சுருதியாக இருந்தது.

ருத்ரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியின் முடிவுரையில், மாவீரர்களின் நினைவுகள் இருக்கும் வரை, தமிழ்த் தேசத்தை எவராலும் கபளீகரம் செய்ய முடியாது எனக் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button