ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட வடக்கு இளைஞர்கள் நால்வரையும் மீட்போம்
முகவர்களினால் ஏமாற்றப்பட்ட நிலையில் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 4 வடக்கு இளைஞர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் மூலம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க உறுதியளித்தார்.
சபாநாயகர் அசோகா ரன்வல தலைமையில் கூடிய நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ், சிறீதரன் முன்வத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
சிறீதரன் எம்.பி விசேட கூற்றை முன்வைக்கையில், இலங்கையிலிருந்து முகவர்களினால் ஏமாற்றப்பட்ட நிலையில் அதிர்ஷ்ட ராஜ் கோமஸ் மிதுஷன் 24 வயது யாழ்ப்பாணம் கச்சேரியடி,சுயநிகாந்த் பகீரதன் 21 வயது சண்டில் வீதி மத்தொனி கரவெட்டி,சுந்தரலிங்கம் பாலச்சந்திரன் 46 வயது முதலாம் வட்டாரம் , முள்ளியவளை முல்லைத்தீவு,கீதபொன்கலன் பிரதாப் 37 வயது கடற்கரை வீதி குருநகர் யாழ்ப்பாணம், ஸ்டீபன் சிவேஷ் 31 வயது குருநகர் யாழ்ப்பாணம் ஆகியோர் ரஷ்யாவின் இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவர்கள் முகவர்களினால் ஏமாற்றப்பட்ட நிலையில் ரஷ்ய இராணுவத்தில் இணக்கப்பட்டதாக அவர்களின் படங்களையும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.
தயவு செய்து இவர்களை இந்த நாட்டுக்கு மீண்டும் அழைப்பதற்கான ஒரு வழிமுறையை மேற்கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன் எனக் கூறியதுடன், இராணுவ சீருடையில் அவர்கள் இருக்கும் படங்களையும் சிறீதரன் எம்.பி. சபைக்கு சமர்ப்பித்தார்.
இதற்கு சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க பதிலளிக்கும் போதே ,இந்த விடயம் எமக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது நீங்களும் இதனை முன்வைத்துள்ளீர்கள். நாம் இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.
![]()