பயங்கரவாதிகள் போல் செயற்படும் குரங்குகள்; முழு நாட்டுக்கும் பெரும் பாதிப்பு
குரங்குகள் பயங்கரவாதிகள் போல் செயற்படுவதனால் முழு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தேசிய உற்பத்திகளை ஒருபோதும் மேம்படுத்த முடியாது என விவசாயம், கால்நடைவளர்ப்பு. காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரான லால்காந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
கண்டி மாவட்டத்திலிருந்து இம்முறை தேசிய மக்கள் சக்தியிலிருந்து 9பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை அமோக வெற்றியாகும். கண்டிமாவட்ட விவசாயிகள் உட்பட பொதுமக்கள் எம்மிடம் பல பிரச்சினைகளை முன் வைத்துள்ளனர்.
வன விலங்குகளினால் விளை நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு முழு நாட்டுக்கும் பாரதூரமானதாக காணப்படுகின்றது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தேசிய உற்பத்திகளை ஒருபோதும் மேம்படுத்த முடியாது. பிரதானமாக குரங்குகளின் தொல்லையை குறிப்பிட வேண்டும். குரங்குகள் பயங்கரவாதிகள் போல் செயற்படுகின்றன.
தமது விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைளையும் விவசாயிகளினால் மேற் கொள்ள முடியும். அதற்கு எவ்வித சட்ட சிக்கலும் கிடையாது. வன விலங்குகளினால் பயிர் செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நடவடிக்கைளை எடுத்துள்ளோம் அவற்றை சிறந்த முறையில் முன்னெடுக்கும் பொறுப்பையும் ஏற்கின்றோம்.
கண்டி மாவட்டத்தில் அக்குறணை பிரதேசம் வெள்ளத்தினால் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு அந்த மக்கள் எம்மைக் கோருகின்றனர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண விசேட கருத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம். விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
பொருளாதாரம்,அரச நிருவாகம் உள்ளிட்ட பல அரச துறைகள் சவால்களை எதிர்கொண்டுள்ளன . அரச நிர்வாக சேவை வினைத்திறனான முறையில் மாற்றி அமைக்கப்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை அடையலாம். ஆகவே அரச துறையினர் சிறந்த முறையில் செயற்பட வேண்டும்.
அரச துறையினர் பொதுக்கொள்கையின் அடிப்படையில் மாற்றத்தை எதிர்பார்த்து எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். எனவே இந்த மாற்றத்துக்கும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
![]()