ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும், ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால், அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

மேலும், குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அவர் வெறுங்கையுடன்தான் அங்கு சென்றிருந்தார்.

எனினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளிவராத அறிக்கைகள் இரண்டை அவர், அங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்திருந்தேன். இனியும் தாமதிக்காமல், அந்த இரண்டு அறிக்கைகளையும் ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தோம்.

எனினும், அமைச்சரவைப் பேச்சாளரான விஜத ஹேரத், சில அறிக்கைகளின் பக்கங்கள் குறைவாக காணப்படுவதாகவும் சில அறிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இதுதொடர்பாக தாங்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அமைச்சரே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான எந்தவொரு அறிக்கையின் பங்கங்கள் குறைவடையவும் இல்லை, எந்தவொரு அறிக்கையும் காணாமல் போகவும் இல்லை என்பதை நாம் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.

அரசாங்கத்திற்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும், ஜனாதிபதியின் செயலகத்திற்கும் இந்த அறிக்கைகளை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், எம்மிடம் தற்போது அந்த இரண்டு அறிக்கைகளும் கிடைத்துள்ளன.

எனவே, ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் இதுவரை வெளியிடப்படாத, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இந்த இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால், நாம் அந்த இரண்டு அறிக்கைகளையும் வெளியிடுவோம்” இவ்வாறு உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button