போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா இணங்க வேண்டும் – ஜெலன்ஸ்கி: உக்ரெய்ன் மீதான போர் தொடரும் – டிமிட்ரி பெஸ்கோவ்

ரஷ்யா மற்றும் உக்ரெய்னுக்கு இடையில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக போர் நடைபெற்ற வருகின்றது.

இப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் எவ்வளவு முயற்சித்தும் இரு நாடுகளும் இணங்குவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்த உக்ரெய்ன் படைகள், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளை கைப்பற்றியதோடு ரஷ்ய இராணுவ வீரர்களையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், “எனது திட்டத்தை நான் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. விரைவில் அமெரிக்க ஜனாதிபதியிடம் எனது திட்டத்தை எடுத்துரைப்பேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், “ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரெய்ன் நுழைந்தமை எனது திட்டத்தின் ஒரு பகுதி. அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவின் உட்பகுதிகளை தாக்குவதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கேட்பேன்.

இதன் மூலம் ரஷ்யாவை போர் முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்கமுடியும். இதுதான் எனது யோசனை” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளிக்கையில், “எமது இலக்கை அடையும் வரையில் இச் சிறப்பு இராணுவ நடவடிக்கை என அழைக்கப்படும் உக்ரெய்ன் மீதான போர் தொடரும். உக்ரெய்ன் பிரதிநிதிகளிடமிருந்து இவ்வாறான அறிக்கைகளைக் கேட்பது இது முதல் முறை அல்ல” எனக் கூறியுள்ளார்.

குர்ஸ்க் பிராந்தியத்திலிருந்து உக்ரெய்ன் படைகளை வெளியேற்றுவதே ரஷ்யாவின் முக்கிய நோக்காக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button