சிலிண்டருக்கு வாக்களிக்கத் தவறினால் சிலிண்டர் இன்றியே வாழவேண்டி வரும்

எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்கத் தவறினால் எரிவாயு சிலிண்டரும் இன்றி வாழ வேண்டிய நிலைமையே மக்களுக்கு ஏற்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நான் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது முதலாவதாக உரத்தை வழங்கி விவசாயத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தேன். இதன்பின்னர் அனைத்து போகங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. நாங்கள் வயலையும் நிரப்பி சமையலறைகளையும் நிரப்பினோம். மருந்துகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களும் இருக்கின்றன. பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.

இன்னும் குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதனை செய்ய வேண்டும். இதற்காக முதலில் ரூபாவை வலுப்படுத்த வேண்டும். நாங்கள் மொத்த தேசிய உற்பத்தியை 89 வீதமாகவும் பண வீக்கத்தை இன்னும் குறைக்க வேண்டும் இதன்படி ரூபாவை பலப்படுத்தினால் பொருட்களின் விலைகளை குறைக்க முடியும்.

மக்கள் கஸ்டத்தில் இருக்கும் நேரத்தில் பயந்து ஓடியவர்களை ஆட்சிக்கு கொண்டுவரப் போகின்றீர்களா? அரசாங்கத்தை பொறுப்பேற்றதால் என்னை விமர்சிக்கின்றனர். நான் குறைந்த வருமானமுடைய மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அஸ்வெசும திட்டங்களை அறிமுகப்படுத்தினேன். பாடசாலை மாணவர்களுக்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். ஏன் தலைவர்கள் என்னுடன் இணைந்து பணியாற்றுவதில்லை?. சஜித், அனுர மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கவில்லை. அவர்களுக்காகவா வாக்களிக்கப் போகின்றீர்கள்?

உடல்களை நல்லடக்கம் செய்ய முடியாமல் எரிக்க நடவடிக்கை எடுத்தமையினால் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனை செய்யாமல் இருப்பதற்காக புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளோம். இதன்படி விரும்பியவர்கள் உடலை அடக்கம் செய்யவோ, எரிக்கவோ அல்லது உடல்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கலாம். இது தொடர்பான வர்த்தமானியை அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக வெளியிடவுள்ளோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்கவும் குழுவொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் கடந்த அரசாங்கத்தில் நடந்தவற்றுக்கு முஸ்லிம் மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம்.

இதேவேளை நாங்கள் சர்வதேச நாணய நிதியம், சீனா உள்ளிட்ட 17 நாடுகளிடம் உதவிகளை கேட்டுள்ளோம். உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ளோம். அவற்றை மீறினால் எமக்கு நிதி கிடைக்காது. ஆனால் இந்த உடன்படிக்கையில் சிலவற்றை மாற்றுவோம் என்று சஜித் கூறுகின்றார்.

ஆற்றில் அடித்துச் சென்றவரை காப்பாற்றி மீண்டும் ஆற்றில் போடுவதா ? அதனையே அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இது ஆரம்பம் மட்டுமே. முன்னால் போக வேண்டும் உங்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்தியுங்கள். அதனை பாதுகாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் எரிவாயு சிலிண்டரும் இல்லாமலே வாழ வேண்டி வரும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button