பிரிட்டனில் கலவரங்களை அடுத்து நாடெங்கும் இனவாத எதிர்ப்பு பேரணி
பிரிட்டனில் கடந்த ஒரு வாரமாக குடியேற்ற எதிர்ப்பு கலவரங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்று வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் பேரணி நடத்தியுள்ளனர்.
வடக்கு லண்டன், பிரிஸ்டல் மற்றும் நியூகாசில் என பல இடங்களிலும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தியுள்ளனர். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பேரணிகளில் ‘அகதிகளை வரவேற்கிறோம்’ என்று இவர்கள் கோசம் எழுப்பியுள்ளனர்.
இதனையொட்டு மீண்டும் வன்முறை ஏற்படுவதை தடுப்பதற்கு ஆயிரக்கணக்காக பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் முஸ்லிம் தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவரே தாக்குதல் நடத்தியாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்தி பரவியதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது.
பள்ளிவாசல்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள் தாக்கப்பட்டதோடு கடைகள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டன. கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 400 பேர் வரை கைது செய்யப்பட்டு 150 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளூர் மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை கலகங்களை தடுத்திருப்பதாக லண்டன் பொலிஸ் தலைவர் மார்க் ரவ்லி குறிப்பிட்டுள்ளார்.
குடியேற்ற எதிர்ப்பு தீவிர வலதுசாரிகள் நாடு முழுவதும் ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்திருந்த நிலையில் பாதுகாப்புக்கு ஆயிரக்கணக்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளை தவிர்த்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘பொலிஸாரின் பலம் மற்றும் சமூகங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியது ஆகிவை நாம் எதிர்கொண்ட சவாலை தோற்கடித்தது என்று நான் நினைக்கிறேன்’ என ரவ்லி செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
![]()