தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு இரு நாட்களில்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான நேற்றைய கலந்துரையாடலில் வேட்பாளர் யார் என்ற இறுதி முடிவு எட்டப்படாமல் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கலந்துரையாடல் முடிவுற்றது.

நேற்று திங்கட்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் பொது வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த அரியனேத்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருந்த நிலையில் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமலே கலந்துரையாடல் நிறைவடைந்தது.

இந்தக் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என் . சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்பினர் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வேட்பாளர்கள் இருவருடைய பெயர்கள் இறுதித் தெரிவுக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஒருவருடைய பெயரை எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமை பகிரங்கமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நேற்றைய கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யதீந்திரா, அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *