ஒன்லைன் முறைகேடு; 46 கணக்குகளில் 5000 கோடி ரூபா பணம்

இலங்கையில் இணையம் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வங்கல்கள் மேற்கொள்ளப்பட்ட 46 கணக்குகளில் 5000 கோடி ரூபா பணம் இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்கள் மற்றும் 35 வெளிநாட்டவர்கள்  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, அல்ஜீரியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த மாதம் 22ஆம் திகதி காலை 10.30 முதல் இரவு 10.30 வரையில் மாத்திரம் 880 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான தொகையினை இந்தக் குழு பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் முதலாவது சந்தேகநபரான பிரவீன் பண்டார முதன்மையாக செயற்பட்டதாகவும், இதற்காக டுபாயில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பகுதியில் உள்ள 30 அறைகள் கொண்ட ஹோட்டல் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மாதாந்தம் 80 இலட்சம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 22 இலட்சம் ரூபா பெறுமதியான இலங்கைப் பணம் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பணம் அரச காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் சீனாவைச் சேர்ந்த குழுவொன்று விசாரணைகளுக்காக இலங்கை வரவுள்ள நிலையில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கூடாது என திணைக்களம் கோரியுள்ளது.

அத்துடன், சந்தேகநபர்கள் 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 36 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களுக்காக சுமார் 40 சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்ததாக தெரியவருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *