உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு: ரஷ்ய, சீன அதிபர்கள் அறிவிப்பு

ரஷ்யா மற்றும் சீன அதிபர்கள் நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக பேசினர். அப்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு காணப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக பேசினர்.

இரு தலைவர்களும் இதற்கு முன், 40க்கும் மேற்பட்ட முறை சந்தித்து பேசியுள்ளனர். சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.

ஷீ ஜின்பிங் சமீபத்தில், பிரான்ஸ் செர்பியா, ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்கக் கூடாது என, சீன அதிபரை, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தின.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் புடின், ஜின்பிங் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுக்கு பின், கூட்டாக பேட்டியளித்தனர். மேலும் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. இவற்றில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனா, ரஷ்யா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது. எந்தத் தடை இருந்தாலும், எங்களுடைய நட்பு தொடரும். எங்களுடைய உள்நாட்டு விவகாரங்கள், நட்பு மற்றும் இறையாண்மை மீதான மூன்றாம் நாடுகளின் தலையீட்டை எதிர்க்கிறோம். உக்ரைன் மீதான போருக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button