கதைகள்

“மழைக்குப் பிறகான பொழுது” …. சிறுகதை – 25 …. அண்டனூர் சுரா.

அப்பன், ஆத்தா கால்களிலிருந்த பித்த வெடிப்புகளைப் போல வயல் வெடித்துக் கிடக்கிறது. விரிசலைப் பார்த்தால் பூமி வானத்திலிருந்து தவறி கீழே விழுந்திருக்குமோனு நினைக்கத் தோணுகிறது. எள் விதைச்சு ஒரு மாசம் ஆகவில்லை. வேர்கள் செத்துப்போய்விட்டன. தண்டுகள் மொத்த இலைகளையும் தரைக்கு உதிர்த்து விட்டு நிர்வாணக் கோலமா நிற்கின்றன. வயல் பார்க்க வெள்ளாமையாகத் தெரியலை. காசநோய் பிடிச்ச நோயாளியாட்டம் தெரிகிறது.

கூத்தையன் விளைச்சலை உத்துப் பார்க்கிறார். அவரோட வயிறு எரிகிறது. நச்சொரணை இல்லாதவனை செத்துட்டானா, இல்லையானு கிள்ளி பார்ப்பதைப் போல குனிந்து ஒரு பயிரைச் சொரண்டி பார்க்கிறார். தழை செத்து போனாலும் தண்டில் உயிர் இருக்கிறது. கொஞ்சம் போல உயிர். அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. எச்சிலைச் சுரந்து அதோட தூரில் துப்புகிறார். “பொழச்சிக்கோ, எப்படியாவது துளுத்துக்கோ” இலைகளைத் தடவிக்கொடுக்கிறார்.

துவைத்து காய்கிறது வானம். கொட்டுகிறது ஊசி வெயில். காற்றை இலைகளுக்குள்ளே முடிந்து வைத்துக்கொண்டு யாருடைய உத்தரவுக்கோ பணிந்து அசைந்து கொடுக்காமல் நிற்கிறது மரங்கள். சுற்றிலும் அமைதி. ஒரு காக்கா கரையவில்லை. ஒரு பொட்டுச் சத்தமில்லை. மாரியப்பன் போர் இறைவைச் சத்தம் மட்டும் சல, சலவென கேட்கிறது. இந்தப் பூமியில் உயிர்ச் சத்தங்கிறது தண்ணீர்ச் சத்தம்தான். அப்படியாகத்தான் கேட்கிறது கூத்தையனுக்கு.

மாரியப்பன் மடையைத் திறந்து தண்ணீரை அவரோட எள் வயலுக்குப் பாய்ச்சுகிறார். பொசு பொசுவென்றிருக்கிற ஈரத்தரையில் வெள்ளாடு மேய்கிற மாதிரி தண்ணீர் உரண்டுத் திரண்டு பாய்கிறது. வரப்பு ஓரத்திலே ஓர் எலி வளை. வளை வழியாகத் தண்ணீர் கசிந்து சின்னக்கண்ணு வயலுக்குள்ளே பாய்கிறது. மாரியப்பன் அதை மீசை துடிக்கப் பார்க்கிறார். ரெண்டு கொட்டு மண்ணை வெட்டி தோட்டை அடைக்கிறார். வெட்டிய வெட்டில் வாலை இழந்து பரிதாபமாக ஓடுது ஓர் எலி. மண்வெட்டியைத் திருப்பி அதோட மண்டையில் ஒரு போடு. அது தலையிலே பிரம்மன் எழுதிய எழுத்து அம்புட்டேதான்!

மாரியப்பனோட பரந்த வயல்வெளிக்குள்ளே ஒரு துண்டு நிலம் சின்னக்கண்ணுக்குரியது. அவரோட வயலுக்குள்ளேதான் அந்த எலி செத்துக் கிடக்கிறது. எலி மீது வைத்தக் கண்ணை எடுக்காமல் பார்த்து நிற்கிறார் சின்னக்கண்ணு. அவரோட வயிறு கப,கபவென பசி எடுக்கிறது. பசி என்பது அடுப்பு. எலியை எடுத்துக்கிட்டுப் போய் தோலை உறிச்சிட்டு கொழம்பு வைத்தால் கோர பசி அடங்கும் என நினைக்கிறார். அதை நினைக்கும் போதே நாக்கிலே எச்சில் ஊறுகிறது. மாரியப்பன் பார்க்க அதை எடுத்து வேட்டிக்குள் மறைச்சிக்கிற அவரோட மனசு இடம் கொடுக்கவில்லை. மண்ணை மிதித்துக்கொண்டு அதே இடத்தில் நிற்கிறார்.

அந்த நேரம் ஒரு காக்காய் தரையோடு பறந்துவந்து தடவிச் செல்கிறது. அவருக்குள் பகீர் உணர்வு. எலியை எட்டி எட்டிப் பார்க்கிறார். அந்த இடத்தில் எலி கிடந்த தடமில்லை. கண்ணுக்கு எட்டி கைக்கு எட்டாமல் போச்சே என நினைக்கிறப்ப அவரோட மனசு பதைக்கிறது. வந்த பசி வாரி சுருட்டிக்கொண்டு போன இடம் தெரியவில்லை.

சின்னக்கண்ணு மண்வெட்டிய எடுத்துக்கிட்டு மாரியப்பன் நிக்கிற இடத்தை நோக்கி போகிறார். கௌரவம் மீசைக்காகும், வயித்துக்காகுமா? கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறார். “அண்ணே, மணிக்கு எவ்ளோனாலும் தாரேன்ண்ணே. ஒரு மணி நேரத்துக்குத் தண்ணீ விடுங்கண்ணே”. கேட்டதில் கெஞ்சல், பணிதல். தண்ணீர் கரைக்காத கல் போல அவரோட மனசு கல்கொண்டிருக்கிறது.

வெயில் ஊசியாகக் கொட்டுகிறது. தொண்டை வரண்டுத் தண்ணீர்த் தாகமெடுக்கிறது. பாய்ந்திருக்கிற தண்ணீரைப் பார்க்கிறார். ரெண்டு கைகளால் அள்ளி ரெண்டு மொடக்கு குடிச்சால் போதும். தொண்டை நனையும், மயக்கம் தெளியும். வெள்ளாமை தண்ணீர்க்காகக் காத்துக் கிடக்க நான் தொண்டையை நனைச்சிக்கிட்டால் போதுமா?

மாரியப்பன் வயலில் எள் விதைத்த அன்றைக்குத்தான் சின்னக்கண்ணும் விதைத்தார். ரெண்டு தண்ணி மட்டும் விடுங்கண்ணேனு கேட்டு விதைத்தார். அன்றைக்கு விதைச்சி வையி பார்க்கலாமுனு சொன்னார். இன்றைக்கு ஒரு தண்ணீர் விட மாட்டேங்கிறார். மனசு அவருக்குள் பதைக்கிறது. நெஞ்சுக்குள் குமைகிறது.

சின்னக்கண்ணுக்கென இருக்கிறது அந்தப் பத்துக்குழி நிலம்தான். பாட்டன் காலத்து சொத்து. அதைச் சுற்றியுள்ள நிலத்தை விட இஞ்சி அளவுக்கு உசரம். பார்த்தால் தெரியாது. தண்ணீத் தேங்கிப் பாய்கிறப்ப தெரியும். அடை மழை அடிச்சால் தேவைக்கு மீறி தண்ணீரை வயலுக்குள் தங்கவிடாது. அந்த நிலத்தைச் சுற்றி நாலாபுறமும் இருப்பது மாரியப்பனோட வரப்புகள். நிலப் பரப்பை கொஞ்சம் கொஞ்சமா கடல் விழுங்கி வருகிற மாதிரி சின்னக்கண்ணு நிலத்தைச் சுற்றியுள்ள வரப்புகள் விழுங்கிக்கொண்டு வருகிறது. சொல்வதுதான் பத்துக்குழி இடமென. அளந்துப் பார்த்தால் எட்டு தேறாது.

சின்னக்கண்ணு கேட்கிறப்பவெல்லாம் அந்தப் பத்துக்குழி இடத்துக்குத் தண்ணீர் விட்டவர்தான் மாரியப்பன். தண்ணீர் மட்டுமா விட்டார், பையன் படிக்கப் பணமும் கொடுத்தார். கேட்டும் கொடுத்தார் கேட்காமலும் கொடுத்தார். ஒரு வருசம் முழுமைக்கும் கொடுத்தார். ஒரு நாள் சின்னக்கண்ணுவைக் கூப்பிட்டுவிட்டு கடன் நோட்டைத் தூக்கிக் போட்டார். சின்னக்கண்ணுக்கு அப்போதுதான் புரிந்தது, மாரியப்பன் அள்ளிக்கொடுக்கவில்லை, அளந்துதான் கொடுத்திருக்கிறார் என்று. மனசொடைந்து போனார்.

“இதெல்லாம் நான் வாங்கிய கடன் தானுங்க. அதை நான் மறுக்கல. இராப் பகலா உங்க வயல்ல நான் மாடா உழைச்சிருக்கேனே” பரிதாபமாகக் கேட்டார் சின்னக்கண்ணு.

“உழைச்சேதான். யார் இல்லைங்கிறா. அதுக்காக உனக்கு நான் கஞ்சி ஊத்திருக்கேனே. உன் நிலத்துக்கு கேட்கிறப்பெல்லாம் தண்ணீ விட்டுருக்கேனே“

மாரியப்பன் இப்படிச் சொன்னதும் அவருக்குள் இடி இறங்கியது. நெஞ்சடைத்து ஒட்டுத்திண்ணையில் சரிந்துப் போனார்.

“சின்னக்கண்ணு ஒரு மாசத்துக்குள்ளே வாங்கிய கடனைத் திருப்பிக் கொடு. இல்லே நிலத்த எழுதிக்கொடு”

துண்டை வாய்க்குள் திணித்துக் கொண்டு விம்மினார் சின்னக்கண்ணு. நடை பிணமாக வீட்டுக்குத் திரும்பினார். ‘நம்ம நிலத்து மேலே நாம காணும் கனவை விட, நம்ம நிலத்தை வச்சி அடுத்துவன் காண்கிற கனவு பெருங்கனவால இருக்கு’. ஓலைப் பாயை விரித்து வீட்டுக்குள் முடங்கினார். அவரோட பூமி தனியே வேகமாக சுற்றியது. மாரியப்பன் கொடுத்தக் கடனைத் திருப்பிக் கேட்டது தப்பாகத் தெரியவில்லை. ஒரு மாசத்துக்குள் திருப்பிக் கேட்டதும் பாரமாகத் தெரியவில்லை. நான் உழைத்த உழைப்புக்கு அவர் ஊத்தின கஞ்சிதான் கூலியாம். அப்படியாக அவர் சொன்னதை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

லட்சம் ரூபாய் செலவு செய்து போட்டிருக்கிற போர் அவருடையது. அது இறைக்கும் தண்ணீயுமா அவருடையது? தண்ணீர் அவருடையதுனா என் நிலத்திலே கேணியிலே ஏன் தண்ணீ இல்லாமப் போச்சு?. அவர் நிலத்துல போர்க்குழி பறிக்கிற வரைக்கும் என் கிணத்தில தண்ணீர் இருந்துச்சே. இப்ப இல்லையே. அதுக்காகவாவது எனக்கு அவர் தண்ணீர் விட வேண்டாமா? சரி விடு, கரண்டுக் கம்பி அவருடையது. அதில் பாய்கிற கரண்டுமா அவருடையது? அவர் வயலில் போர் தண்ணீர் இறைக்கும் போது என் வீட்டுல குண்டு பல்பு சிம்னி விளக்கு மாதிரில எரியுது. என் நிலத்துக்கும் கீழே இருக்கிற தண்ணீயையும் தானே அவரொட போர் உறிஞ்சி இறைக்குது. இப்படியெல்லாம் அவரோட மனசு நினைக்கிறது, கலங்குகிறது.

மறுநாள் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வயலுக்குப் போகிறார். நிலம் தரிசாக இருந்தது. கொஞ்சம் போல உள்ளுர ஈரம். அடிக்கு ஒரு குழி போட்டார். காலைப் பசி எடுக்கிறதுக்குள் தொப்புள் தொப்புளாட்டம் வயல் முழுக்கவும் குழி. உடம்பு சடசடத்து வந்தது. துண்டால் வியர்வையைத் துடைத்துக்கொண்டு வரப்பில் உட்கார்ந்தார். அவரை நோக்கி வந்துக்கொண்டிருந்தார் மாரியப்பன்.

“ஏன் சின்னக்கண்ணு குழிப் பறிக்கிற?”

“இனி யாரையும் நம்பி நான் வெள்ளாமை செய்யப் போறதில்லங்க. வாங்கிய கடன் தலைக்கு மேல் கத்தியா தொங்குது. வாழ கெடு வெக்கலாம். சாக கெடு வைக்கக் கூடாது. கடன் கையை முறிக்கலாம், கழுத்தை முறிக்கக் கூடாது. கடன்கள நான் அடைச்சாகணும். கீழச் சீமை பக்கம் போய் நாலு காசு

சம்பாதித்து கடனை அடைக்கலாமென இருக்கேன். நிலத்தை அப்படியே விட்டுட்டு போக முடியாது பாருங்க. அதான் தைலக்கன்னு போட்டுட்டு போகலாமுனு குழி பறிக்கேன். மண்ணுக்கும் கெட்டி, வரப்புக்கும் கெட்டி”

சின்னக்கண்ணு சொல்லச் சொல்ல மாரியப்பன் நெஞ்சுக்குள் குழி விழுந்தது. வயலில் குழிப் பறிக்கிறவன் தனக்கும் சேத்துல குழி பறிக்கிறான். தைல மரங்கள் விளையும் நிலத்துல தண்ணீ நிற்காதே. நிழல்பட்ட இடமெல்லாம் வெள்ளாமை சாவியாப் போயிடுமே. ஆமை புகுந்த வீடும் இந்தத் தைலக் காடும் ஒன்னாச்சே. தலையைச் சிலுப்பிக்கொள்கிறார்.

“அட மண்வெட்டியக் கொடப்பா. கன்னு ஊன்னுறானாம் கன்னு. யாரு உனக்கு தண்ணி விடலைனு சொன்னது?. குழியத் தூத்திட்டு வெள்ளாமையப் பண்ணப்பா” என்றவராய் அவரது வயலுக்குப் போனார் மாரியப்பன்.

சின்னக்கண்ணு மாரியப்பன் வார்த்தைகளை நம்பி விடவில்லை. பறித்தக் குழியைத் தூர்த்துவிட்டு கீழச் சீமைக்குப் போனவர் கடனை அடைக்கத்தான் ஊர்த் திரும்பினார். கடனை அடைத்தக் கையோட நிலத்தை உழுதார். இப்போது சின்னக்கண்ணுக்கும் மாரியப்பனுக்கும் இடையில் கடனுமில்லை, பாக்கியுமில்லை.

நிலத்தை இரண்டு பட்டங்கள் வெறுமென போட்டுவைத்திருந்த சின்னக்கண்ணு, பெரும்பட்டத்தில் மாரியப்பன் எள் விதைக்கிற அன்றைக்கு சின்னக்கண்ணும் எள் விதைத்தார். பழைய சம்பவங்களை மறந்து தண்ணீர்க் கேட்டார். “அட யாரப்பா உனக்கு தண்ணீ விடமுடியாதுனு சொன்னது” எனச் சொன்னவர்தான் மாரியப்பன். இன்றைக்கு ஏனோ மாட்டேங்கிறார்! இதையெல்லாம் அசைபோட்டபடி காய்ந்து கருகிப் போயிருந்த எள் செடியைத் தடவிக் கொடுக்கிறார் சின்னக்கண்ணு.

அந்த நாள் இரவு. வடகிழக்கு வானம் இருண்டு வந்தது. இரவைத் துடைத்து அள்ளுவதாட்டம் மின்னல் வெட்டு. மாரியம்மன் அணைந்து ஆடுவதைப் போல மரங்கள் தலை சுத்தி ஆடின. ‘ ஊய்…’ என ஓலம். மண்ணைப் பெயர்த்தெடுத்து வீசுகிறது காற்று.

குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து பார்க்கிறார் சின்னக்கண்ணு. அவரது கண்கள் வானத்தைப் பார்க்கின்றன. வடகிழக்குத் திசையைக் கையெடுத்து கும்பிடுகிறார். யானை படையைப் போல திரண்டு வருகிறது மேகம். மின்னல் கண்களைக் குத்துகிறது. குல தெய்வத்தையும் பாதியிலே அவரை விட்டுட்டுப் போன சம்சாரத்தையும் வேண்டிக்கிறார். தீர்த்தம் தெளிக்கிறது தூரல். கொஞ்ச நேரத்தில் சட, சடவென பெருமழை.

சின்னக்கண்ணு முகத்தில் பூரிப்பு, பெருமகிழ்ச்சி. செத்த உடம்புல உயிர் பாயும் உணர்வு. விதைத்த எள் வீண் போகவில்லை. பெருமூச்சு விட்டுக்கொள்கிறார். எப்பொழுழுது விடியுமென அவரது கண்கள் படபடக்கின்றன.

வானம் விடிந்து வந்தது. வரப்பில் நடந்தபடி வெள்ளாமையை நோட்டமிடுகிறார். எள் பயிர்கள் மறுபிறப்பு எடுத்திருக்கின்றன. குனிந்த, சுருங்கிய இலைகள் நிமிர்ந்து தழைக்கின்றன. வரப்பில் அமர்ந்து எள் செடிகளைத் தடவிக் கொடுத்து முத்தம் கொடுக்கிறார். தனக்குள்ளாகப் பேசி, சிரித்துக் கொள்கிறார். உள்ளங்காலுக்கும் தலைக்கும் நல்ல ரத்தம் பாய்கிறது. முகத்தில் பூரித்த புத்துணர்ச்சி.

சின்னக்கண்ணு மண்வெட்டியைத் தோளில் வைத்தபடி மாரியப்பனின் நிலத்தை ஓரெட்டுப் பார்க்கிறார். வரப்பை மிஞ்சிய நீர்ப்பெருக்கு. பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கிப்போயிருக்கின்றன.

மாரியப்பன் வரப்பில் நிற்கிறார். அவருக்கு அருகில் அவருடைய சம்சாரம். இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

“ நேத்தைக்குச் சின்னக்கண்ணு எள்ளுக்குத் தண்ணீக் கேட்டான். விட்டுத் தொலைத்திருக்கலாம்….”

“ இப்ப ஏன் இந்த யோசனை?” சம்சாரம் கேட்கிறாள்.

“விட்டிருந்தால் நம்ம பயிர் நீர்ல மூழ்கிப் போனதாட்டம் அவனோட பயிரும் மூழ்கிப் போயிருக்கும்”

கணவன் இப்படியாகச் சொன்னதைக் கேட்டு அவள் திடுக்கிட்டாள்.

மாரியப்பன் இப்படியாகச் சொன்னது சின்னக்கண்ணு காதிலும் விழுந்திருந்தது. அவருக்கு அதிர்ச்சியோ, திடுக்கிடலோ இல்லை. அவருடைய முகத்தில் மலர்ச்சி. “ இத்தனை நாட்கள் தண்ணீ விட முடியாதென சொன்ன மாரியப்பனா இப்படிச் சொன்னது? அவரால் இப்படியெல்லாம் சொல்ல முடியுமா? நம்ப முடியலையே! ஒரு மழைக்கே இப்படி! இன்னும் மாசம் ஒரு மழை பெய்தால்? இதுவே வாரம் ஒரு மழை பெய்தால்? அடடா, மழை ஒரு மனுசனோட மனசை எப்படியெல்லாம் மாத்துது. பின்னே, எனக்குத் தண்ணீ விட்டிருக்கலாமென சொன்னது அவருக்குள்ளே ஏற்பட்டிருக்கும் எவ்வளவு பெரிய மாற்றம்!” தனக்குத்தானே பேசிக்கொண்டு வானத்தை ஏறிட்டுப் பார்க்கிறார் சின்னக்கண்ணு. கல்லையும் கரைத்துவிட்ட மேகம் கலைந்துக்கொண்டிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *