காரில் தப்பிய கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள உறையூர் கிராமத்தில் கடந்த 23-ந் தேதி இரவு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 32), பாலாஜி (24) ஆகியோர் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் அவர்கள் அந்த வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் திருடிக்கொண்டு தப்பி விட்டனர். கொள்ளையர்களை பண்ருட்டி போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

தலைவாசலில் பதுங்கல் இந்தநிலையில், நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கொள்ளையர்கள் இருவரும் பதுங்கி இருப்பதாக பண்ருட்டி போலீசாருக்கு தெரிய வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்க சென்று உள்ளனர். போலீசார் வருவதை அறிந்த அவர்கள் காரில் வேகமாக தப்பிச்சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை பின்தொடர்ந்து தங்கள் வாகனத்தில் சினிமா பாணியில் துரத்திச்சென்றனர்.

கொள்ளையர்கள் காரில் அதிவேகமாக வந்தபோது வழியில் 2 டோல்கேட்டுகளை உடைத்துக் கொண்டு தப்பித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைந்தனர். சினிமா பாணியில் துரத்தினர் தச்சம்பட்டு வழியாக கொள்ளையர்களின் கார் திருவண்ணாமலையை நோக்கி வந்தது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது புறவழிச்சாலை வழியாக கொள்ளையர்களின் கார் மின்னல் வேகத்தில் வந்தது. அவர்களை போலீசார் துரத்தி வந்தனர். திருவண்ணாமலையில் காரை மடக்கினர் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா அரசு பள்ளி அருகில் உள்ள கிரிவலப்பாதை சந்திப்பு பகுதியில் திருவண்ணாமலை போலீசார் தடுப்புகள் அமைத்து லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்களை வழியில் குறுக்கே நிறுத்தியிருந்தனர். அப்போது அந்த வழியாக கொள்ளையர்கள் வந்த காரை போலீசார் மடக்கினர். இதனால் கொள்ளையர்களால் அங்கிருந்து தப்ப முடியவில்லை. காரை நிறுத்திவிட்டனர்.

அப்போது, போலீசார் துணிச்சலுடன் செயல்பட்டு கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் பாய்ந்து உள்ளே இருந்த 2 பேரையும் அமுக்கிப்பிடித்தனர். பின்னர் 2 பேரையும் காருக்குள் இருந்து வெளியே இழுத்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் இருவரும் பண்ருட்டியில் திருடிய யுவராஜ் மற்றும் பாலாஜி என்பது உறுதியானது. அவர்களிடம் இருந்த 19 பவுன் திருட்டு நகை மற்றும் காரையும் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் பண்ருட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாருக்கு வெகுமதி காரில் தப்பி வந்த 2 கொள்ளையர்களை திருவண்ணாமலையில் மடக்கி பிடித்த போலீசாரை திருவண்ணாமலை சூப்பிரண்டு கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்ததுடன் அனைவருக்கும் வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button