“சாதி சான்றிதழ்” …. சிறுகதை … 20 …. அண்டனூர் சுரா.

அப்பனும் ஆத்தாவும் வீட்டுக்குத் திரும்பி வருகிறப்ப மசண்டையாகிருந்தது. அப்பா
வெறுங்கையை வீசிக்கினு விசுக்,விசுக்கென நடந்தார். அம்மா அவர் பின்னே முகம் தொங்கிப்போய் வந்தாள். அவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள் விமலா. அவளுக்கு அழுகை பொத்துக்கினு வந்தது. உதடும் முகத்து தசையும் நிராதரவாகத் துடித்தன.
விமலா அவளோட பள்ளிக்கூட வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தாள். படிப்பு பாதியிலேயே நின்றிடுமோனு நினைக்கிறப்ப உசிரு அறுகுது. திங்கக் கிழமை பெரிய தீச்சர் அவளை நிக்க வச்சி கேள்வி மேல கேள்வி கேட்டாங்க. அத்தன பேரும் அவளையே பார்த்தாங்க. நாளைக்கும் அதான் நடக்கப்போவுது.
விமலா அப்பனுக்கிட்ட கேட்டாள் . “அப்ப, இன்னைக்கும் நீயி சாதிச் சான்றித வாங்கிண்டு வரல?”
அப்பன் எதுவும் பேசல. தோள்ல கெடந்த துண்ட உதறி குண்டிக்குப் போட்டுக்கினு புளிய மரத்து வேர்ல குந்தினார். அடுத்து விமலாவோட பார்வை ஆத்தா பக்கம் போணுச்சி. “அம்ம, நீயாவுது வாங்கிண்டு வந்தியாம்ம”
“இல்லடிம்மா” என்றபடி மவளை வாரி அணைச்சாள் தாய். விமலா ‘தங்க், தங்க்‘ கென தரையில குதிச்சாள். தமுக்கடியேனு கீழே விழுந்து தரையிலப் பொரண்டு அதுக்கும் இதுக்குமா உருண்டாள். கால், கையை ஒதைச்சிக்கினு ஓ….வென கத்தினாள். தலை மயிரு கலஞ்சி மொகத்தில கிடக்க, தலையெல்லாம் மண்ணு. மவளைப் பார்த்தாள் தாயி. அவளுக்கு நாசி விடைத்தது. ஒத்த புள்ள, தென்னம்பிள்ளையாட்டம். இப்படி அழுகுதே… மவளைப் பார்த்தாள். தொண்டைக்குள்ளே மூச்சு இடறியது.
மவளை வாரி அள்ளினாள் தாயி. விசும்பினாள் மவள். மார்போட அணைச்சி உச்சந்தலையில் உதட்டைப் பதித்தாள். தாய் முத்தம் எத்தனை ஒஸத்தி. அதைத் தெரிஞ்சி வச்சிருக்கிற வயசா அவளுக்கு?. கையைக் குறுக்காகக் கொடுத்து ‘சரட்‘டென துடைச்சாள் விமலா. “நாளக்கி எப்படியும் வாங்கிண்டு வந்திடுறேன்டிம்மா. அழாதே…. ஏ தங்கம்ல, ஏ செல்லம்ல”
“நாளக்கி பள்ளிக்கோடத்துக்குக் கொண்ணுண்டு போவலனா பெரிய தீச்சரு வையும்”
“நாள ஒரு நாளு மட்டும் ஓ தீச்சருக்கிட்ட சொல்லடிம்மா”
“நீனா வந்து சொல்லு”
தீச்சரை நினைச்சிப் பார்த்தாள் தாய். அவள் வயித்த எலி குடைஞ்சது.
“இந்தா பாரும்மா. இது அரசாங்கக் காசு. ஒரு மாசத்துக்கு மேல நாங்க வச்சிக்கிறக் கூடாது. கம்னிட்டி சர்டிபிகேட் வாங்கிக்கொடுத்தா உங்க மக பணம் உங்களுக்குக் கிடைக்கும். இல்ல பணம் திரும்பிப் போயிடும்”
“தாயி, ஆயிரம் ரூவா. ஏ மவளுக்கு எதையாவது வாங்கிக்கொடுப்பேன். வந்த காச திருப்பி அனுப்பிடாதீங்க. நீங்க நல்லாருப்பீக. ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்”
“அப்ப சாதிச்சான்றித வேணுமே?”
“வாங்கித் தந்திடுறே தாயி”
தீச்சரு அவகாசம் கொடுத்து ரெண்டு மாசமாச்சி. நாயா, பேயா அலைஞ்சிப் பார்த்தாச்சி. இன்னும் சான்றித கெடச்சப்பாடில்ல. எந்த மொகறைய வச்சிக்கினு தீச்சருக்கிட்ட இன்னும் ரெண்டு நாளு அவகாசம் கேக்குறதாம். மனசை அச்சமும் அவமானமும் சேர்ந்து அவளைக் குடைஞ்சது.
“நாளைக்கி அது இல்லாம போனா தீச்சரு பேசுவாங்க. என்னய நிக்க வச்சி கேள்வி மேல கேள்வியாக் கேப்பாங்க”
“அப்ப நாளைக்கும் நீ பள்ளிக்கோடத்துக்கு போவ வேணாம். காளைய பாத்துக்கினு இரு. விடிஞ்சதும் ஒரு தாண்டு போயி சான்றித என்னாச்சிச் சாமினு கேட்டுட்டு வந்திடுதேன்”
விமலா தன்னோட எதிர்காலத்தை நெனைச்சிப் பார்த்தாள். சாதிச் சான்றித இல்லாம மேல படிக்க முடியாதாம். அரசாங்கம் கொடுக்கிற சலுகெ, உதவித்தொகெ எதையுமே வாங்க முடியாதாம். யோசனை மண்டைக்குள்ளே சிலந்தியா வலை பின்னியது.
மறுநாளும் அவள் பள்ளிக்கோடத்துக்குப் போகவில்லை. ஏன் விமலா நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு வரலனு யாரும் அவளைக் கேட்டு வரவில்லை. அதை நெனைக்க அவளுக்கு அழுகை முட்டியது. புளியமரத்து வேரில் தலையை வைத்துக்கொண்டு காலை நெஞ்சுள்ள சுருட்டு படுத்துக்கினு பலதையும் ஒன்னொன்னா நெனச்சிப் பார்த்தாள். நேத்தைக்குப் பள்ளிக்கோடம் விட்டுத் தன்னைத் தேடி வந்த கிருத்திகா உடன் கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்ததை அப்படியே தொண்டைக்குள்ள பேசிக்கிறாள்.
“அவள் எஸ்சியாம். அவளுக்கு ஆயிரம் ரூவா உதவித்தொகெ வந்ததாம். ஹெட்மாஸ்டரு அவள் அம்மா அக்கௌண்ட்ல அதெ போட்டுட்டாங்களாம். எட்டு வருசம் அதெ எடுக்காம இருந்தா அந்தப் பணம் குட்டியாப்போட்டு ஆயிரம் ரூவாயும் ரெண்டாயிரம் ரூவாயா ஆயிடுமாம். பொறகு அது நாலாயிரம் ரூவா ஆயிடுமாம். அவள் சாதிக்குப் பத்தாம் வவுப்புல நானூறு மார்க்கு எடுத்தாலே பெரிசாம். பன்னொன்னாம் வவுப்புல பஸ்டு குரூப் கெடச்சிடுமாம். இப்படியெல்லாம் பேசிக்கிட்டிருந்த கிருத்திகா சட்டென என்னைப் பார்த்து கேட்டாள். என் கண்ணைப் பார்த்து கேட்டாள். “ஆமா, நீ என்ன சாதீடி விமலா.?”.
நானு என்னத்தச் சொல்ல. திறுக்,புறுக்கென முழிச்சேன். அவள் என்னயேவே குறுகுறுவென பார்த்தாள். “அடி, ஒனக்கு ஒன்னோட சாதி தெரியாதா?“.
“தெரியாதும்பே“‘
“நீ எஸ்சியா, எம்பீசியா, பீசியா? அதாவது தெரியுமா?”
“தெரியாதும்பே”
‘கொல்‘ லென சிரிச்சாள் கிருத்திகா. அவள் சிரிக்கையில ஏ உசிரு அறுவதைப் போலிருந்துச்சு. அழுகை நெஞ்சுக்குள்ளே பொத்திக்கினு வந்துச்சு.
“சாதி தெரியாமதான் இத்தனெ வருசமும் படிச்சியாக்கும்”
“எங்கேந்தே நான் படிச்சே. இதுக்கு முன்னே எங்கூரு கொத்தகத்து ஸ்கூலுல ரெண்டாம் வவுப்பு வரைக்கும் படிச்சே. அம்புட்டுதான் நா படிச்சது”
“பொறகு?”
“அப்பா பண்ணுற தொழிலுக்கு ஒதவிக்குப் போயிட்டேன்”
“ஓ அப்பா என்ன தொழிலு பண்ணுறாரு?”
“பூம்… பூம் மாடு ஓட்டுக்கினு ஊரு ஊரா போவாரு”
“நீ ஓ அப்பாவுக்கு என்ன ஒதவி செய்வே?”
“அப்பா கேள்வி கேக்கும். நானு பூம் பூம் வாசிப்பேன். நா வாசிக்க வாசிக்க சின்னக்கண்ணு தலய ஆட்டும்”
“அது யாரு சின்னக்கண்ணு?”
“நாங்க வளக்குற காளெ”
கிருத்திகா விமலாவைக் குறுகுறுவென பார்த்தாள். அவளைப் பார்க்க பாவமாத் தெரிஞ்சிச்சு. பள்ளிக்கோடத்தில கொடுத்தச் சீருடைய உடுத்திருந்தாள். சட்டை காறையா இருந்துச்சி. பாவாடையில திட்டுத்திட்டா சத்துணவுக் குழம்பு தெரிச்சிருந்துச்சி.
“நீ மூணாம் வவுப்பு, நாலாம் வவுப்பு எல்லாம் படிக்காம எப்டி சர்…னு அய்ந்தாம் வவுப்புக்கு வந்தே?”
“இப்ப அப்டி வரலாமாம். எனக்கு இப்ப வயசு பத்து ஆவுதா. பத்து வயசுக்கு நா அய்ந்தாம் வவுப்புதானே படிக்கணும். அதான் என்னை சர்ர்ர்னு அய்ந்தாம் வவுப்புல சேர்த்து வுட்டுட்டாங்க”
“ஒன்ன யாரு சேர்த்து வுட்டா?”
“ரெண்டு ஆபீசருங்க. ஒரு போலீசு. எங்க ஆத்தாவையும் அப்பனையும் மெரட்டு, மெரட்டுனு மெரட்டிக் கைரேகை வாங்கிக்கினு என்னய இந்த பள்ளிக்கோடத்துல சேத்து விட்டாங்க”
“இந்தப் புளிய மரம்தான் ஒங்க வூடா?”
“ஊம்,பகல்ல இங்கிண்ட இருப்போம். ராவுப்பட்டா அதோ அந்த கோயில்ல போயி படுத்துக்குவோம்”
“சோறு?”
“ஆத்தாவும், அப்பனும் அரிசி வாங்கிண்டு வருவாக. வந்ததும் அம்மா காச்சும்”
“இதான் உங்க சின்னக்கண்ணுவா?”
“உம்..உம்… இதான்”
“ஒனக்கு பூம், பூம்… வாசிக்கத் தெரியுமா.?”
“இம். வாசிப்பேனே”
“நல்லா வாசிப்பியா?”
“டக்கரா வாசிப்பேன்”
“எங்க எனக்காக வாசிப் பாக்கலாம்”
“வாசிச்சா எனக்கு என்ன தருவ?”
“சும்மா வாசிச்சாலும் எதனாச்சும் தரணுமா?”
“இம். எனக்கு கொடுக்காட்டியும் ஏ சின்னக்கண்ணுக்காக எதனாச்சும் கொடு”
“சரி, வாசி. நாளக்கி எதாவது தர்றே”
புளியமரத்து ஒரு கொம்புலு மாட்டிருந்த மேளத்த எடுத்தாள் விமலா. தலை வழியா மாட்டிக்கினு மேளத்த வயித்துக்கு நேரா வச்சிக்கினு ரெண்டு வளைவு குச்சியால மேளத்தை இசைச்சாள்.
“பூம்…. பூம்…. பூம்”
‘சலக், சலுக்….‘ படுத்துக்கிடந்த காளை தலைய தலைய ஆட்டிக்கினு சடக்கென எழுந்திருச்சி சோம்பல முறிச்சிச்சு. மூத்தரம் பேஞ்சிக்கினு சாணம் போட்டுச்சு. கொம்பைச் சிலுப்பிக்கினு கட்டித்தறிய சுத்திக்கினு இருந்துச்சு.
“அய்…”
கிருத்திகா மொகத்தில பூச்சொரிந்த புன்னகை.
“பூம்… பூம்… பூம்… இந்த மவராசிக்கு நல்லா பயிப்பு வருமா?”
“சலக், சலுக்”
“இவ எனக்குத் தோயியா இப்பாளா?”
“சலக், சலுக்”
“இவ ஒனக்கும் எனக்கும் தர்மம் செய்வாளா?”
“சலக், சலுக்”![]()
கிருத்திகா ஹி ஹி….னு சிரிச்சாள். அவக்கூட சேர்ந்து விமலாவும் சிரிச்சாள். ரெண்டு பேரும் சேர்ந்து சிரிச்சதைப் பார்த்த காளை தலையத் தலைய ஆட்டிக்கினு சலக்,சலுக்கென சத்தத்தை எழுப்புனுச்சு. இதை எல்லாத்தையும் ஒரு சேர பார்க்கிறப்ப அந்த எடம் சில்லறைக்காசு சிதறி சிரிப்பதைப் போலிருந்துச்சு.
அந்தி கரைஞ்சு இருட்டான நேரத்தில ஆயியும் அப்பனும் திரும்பி வாராங்க. அவுக மொகத்தில அதே பழைய ஏமார்ந்த ரேகைகள். நிராதரவு வெளிப்படும் சோகம் நிறைந்த பார்வை. விமலா ஆயியையும் அப்பனையும் தலையத் தூக்கி பார்த்தாள். தாயி தகப்பன கண்டதும் அவள் எழுந்திருக்கல. முட்டை வெடிச்சு குஞ்சு வெளியே வருவதைப் போல கண்ணுக்குள்ளேருந்து கண்ணீரு வெளியே வந்துச்சு. இமையை இறுக மூடி மெல்ல தொறந்தாள். கண்ணீர் சாரையா கன்னத்தில எறங்கிச்சு. கீழ் உதட்டப் பிதுக்கி மேல் உதட்டை கெட்டியா அழுத்திக்கினு விசும்பினாள்.
அவகிட்ட எதாவது கேட்டா அவ்வளவேதான். அழுதிடுவா. அழுகிறவ சும்மா அழ மாட்டாள். கால் கைய ஒதைச்சிக்கினு தலைய புளிய மரத்தில முட்டிக்கினு அழுவா. வேண்டாம், அவகிட்ட பேச்சு எதுவும் கொடுக்க வேணாம். தாயும் தகப்பனும் சேர்ந்து வெரசா ராவு சோத்துக்கு வழிப் பண்ணுனாங்க.
ராத்திரி அவள் சோறு தின்னல. ஆயியும் அப்பனும் என்னமோ சொல்லி கெஞ்சி பார்த்தாவ. அவள் கடைசி வரைக்கும் சோறு தின்னவே இல்ல. தண்ணிக்கூட குடிக்கல. அர்த்த ராத்திரியில பசி அவள் இரைப்பையப் பிறாண்டியது. கெண்டைக்கால பிடிச்சு இழுத்தது.
அஞ்சு மணிக்கே எழுந்தாள். மண்ணையள்ளி பல் துலக்கினாள். ஒரு தட்டுல பழைய சோத்த புயிஞ்சிப்போட்டு அதில ரசத்த ஊத்தி நல்லாப் பெசஞ்சித் தின்னாள். தலைய அவளா சீவிக்கினாள். சீருடைய உடுத்திக்கினாள்.
ஆயியும், அப்பனும் மவளையே பாத்துக்கினு இருந்தாங்க. விமலா புத்தகப் பையை எடுக்காம காளைக்கிட்ட போனாள்.
“விமலா, நீ ஏந்தே காளைய அவுக்கிற…?”
“ஆத்தா, பெத்தவ சொன்னா கேக்கணும். நீயி பயிக்கிற பொண்ணு. பள்ளிக்கோடத்துக்குப் போவலனா என்ன பெரிய தீச்சரு வைவாங்க. போலீஸ்காரங்க மெரட்டுவாங்க. கைரேயை வாங்கிருக்காங்க. நான் சொல்றதைக் கேளு. நீ காளைய அவுக்காத”
விமலா எதையும் காதில வாங்கிக்கல. பட்டுத்தரிச்ச குஞ்சலப் போர்வைய காளை முதுகில போர்த்தினாள். கொம்புல பச்சைத்துண்ட சுத்தினாள். கால்கள்ல சலங்கையக் கட்டினாள். மேளத்த எடுத்து தலை வழியா நெஞ்சில் கிடத்தினாள். தாயும் தகப்பனும் ஓடி வந்து தடுக்குறாங்க.
“நீ பயிக்க வேண்டிய பொண்ணும்மா. நீ நல்லாருப்பேம்ம. பள்ளிக்கோடத்துக்குப் போடாம்ம. நானு, உன் அப்பனும் போயி இன்னைக்கி எப்புடியாவது சாதிச் சான்றித வாங்கிண்டு வந்திடுதோ”
அவள் காளையை அதட்டிக்கினு நடையை வேகமாக எடுத்து வச்சி நடக்கிறாள். “இந்தே, இந்தே வெரசாப் போ…”
காளைய வெரட்டி ‘விசுக்,விசுக்‘ கென நடக்கிறாள். அவள் படிக்கிற மேட்டுப்பட்டி துவக்கப் பள்ளியத் தாண்டி, முனியங்கோயிலத் தாண்டி, அம்பேத்காரரு சிலையத் தாண்டி, ரவுண்டானாவை ஒரு சுத்துச்சுத்தி காந்தி செலையத் தாண்டி, பேருந்து நெலயத்தைத் தாண்டி நடக்கிறாள்….
தாயும் தகப்பனும் பின்னால ஓடி வாறாங்க. எம்மாந்தொலைவையும் ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்து சேர்ந்திட்டாள். இன்னும் கொஞ்ச தூரந்தான். அதோ வேகத்தடை. அந்தோ நிழற்குடை, இந்தா வந்திருச்சு தாலுகா ஆபிஸ்.
சுற்றுச்சுவத்துக்குள்ள வாகனங்க வரிசையா நிக்குது. ஆபிஸருங்க உள்ளே போறதும், வாறதுமா இருக்காங்க. மேளத்த எடுத்து வயித்துக்கிட்ட வச்சிக்கினாள். காளைய தாலுகா ஆபீஸ் படியில ஏத்திக்கினாள்.
“ பூம்…. பூம்…. பூம்….” கண்ண மூடிக்கினு, தொண்டையில முட்டுற அழுகைய அடக்கிக்கினு விடாமல் பத்து நிமிசம் வாசிக்கிறாள். உள்ளக்கிடங்கிலிருந்து பேசுறாள். வறண்டு கமறுது குரலு.
“ இந்த ஆபிஸ்ல வேலை பாக்குறவங்க எல்லாருமே மவராசன்க தானே?”
“ சலக், சலுக்” காளை தலையை ஆட்டுது .
“ நா சொல்றதெ காது கொடுத்து கேட்பாங்களா?”
“ சலக்., சலுக்”
“ என்னைய அவங்க புள்ளயா நெனப்பாங்களா?”
“ சலக், சலுக்”
“ எனக்கு சாதிச்சான்றித தந்து என்னோட தலை எயித்த மாத்துவாங்களா?”
“சலக் , சலுக்”
“ பூம்,பூம், பூம், பூம்….”
![]()