மாண்புமிகு மதிப்பெண்!…. சிறுகதை….. 18 ….. அண்டனூர் சுரா.

‘நீங்க எதிர்பார்க்கிற மார்க்க நாங்க ஏன் எடுக்கணும்?” யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது.
நேற்று வரைக்கும் “ஹாய் புனிதா, எப்படிடி இருக்கே..?” அலைபேசியில், குறுந்தகவலில், கட்செவியில், முகநூலில் நலம் விசாரித்தவர்களெல்லாம், “புனிதா, எப்டிடி எக்சாம் எழுதிருக்கே?” எனக் கேட்கையில் என்னையே நான் ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொள்ளணும் போலிருந்தது.
பதின்மம் வயதை உதைத்து விளையாடும் இந்த எக்ஸாம் சிஸ்டத்தைக் கண்டுபிடித்தவர் யாரென கூகுளில் தேடி கண்டுப்பிடித்தாக வேணும். அவரை வாட்ஸ்அப்பில் ஒட்டி கிழி ,கிழியென கிழிக்க வேணும். மண்டையைச் சிதறுத் தேங்காயாக்கும் இந்தத் தேர்வு முறை தேவைதானா?. அப்பப்பா, வீட்டைத் தாண்டினால், வீட்டிற்குள் நுழைந்தால் வீதியெங்கும் படி, படி, படிதான்!
“புனிதா, எக்சாம் எப்படி எழுதியிருக்கே?“
“ம், எழுதிருக்கேன்”
“மார்க் எவ்ளோ வரும்?”
“வரும்”
“ ஆயிரம்?”
“ பார்க்கலாம்”
“ஆயிரம் மார்க்கெல்லாம் எந்த மூலைக்கு?”
இதைக் கேட்கையில் என் தண்டுவடம் முடிச்சி அவிழ்வதைப் போலிருந்தது. ஆயிரம் என்ன குறைந்த மதிப்புடைய எண்ணா?. நான்கு இலக்க எண்களில் மிகச்சிறிய எண்ணாக அது இருந்தாலும் மூன்று இலக்க எண்களின் நீளம் தாண்டிய பி.டி உஷா அல்லவா அது! இந்த அப்பாக்களே இப்படித்தான். எவ்வளவு மதிப்பெண் எடுத்துக்கொடு. ஊகூ…ம் பத்தாது, பத்தாது, பத்தாதுதான்!. ம், என்ன செய்வதாம்? எவ்வளவு எடுத்தாலும் இப்போதெல்லாம் மதிப்பெண் மதி்க்கப்படுவதே இல்லை. ‘மதிப்பெண்’ணில் ‘பெண்’ இருக்கிறதே!
ஏன்தான் இந்த +2 வகுப்பில் கையையும் காலையும் வைத்தேனோ! எத்தனை இரவு, எத்தனை பகல்! எத்தனை நாள் தூக்கம். கடிகாரம் ஓடும் முன் ஓடி, பின் தூங்கி முன் எழுந்து, ‘தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண்களை எடுக்க நினைப்பதையன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..’ என முந்நூற்று அறுபது டிகிரியும் படிப்பு, படிப்பு, படிப்புதான்.
நான் பன்னிரெண்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்த மறுநாளே என் வீட்டில் நடந்தேறிய மாற்றம் இது. பள்ளியில் பாடம் நடத்துகையில் பள்ளிப் பாடம் கேட்கும் தொலைவில் தொலைக்காட்சி இணைப்பு அறவே இல்லாத வீடொன்றைப் பிடித்திருந்தார் அப்பா. வீட்டின் முகப்பில் புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை மாட்டிவிட்டிருந்தார். உட்கார்ந்துப் படிக்க ஒரு குட்டினூன்டு சோபா. வைத்து எழுத வட்டமேஜை. அறை முழுக்க அலமாரிகள். வீடு பார்க்க குட்டிக் கன்னிமாரா நூலகம் போலிருந்தது.
நீள் தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் அதன் அணு எண்களுக்கேற்ப அடுக்கி வைக்கப்பட்டிருக்குமே ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம், பெரிலியம், போரான்…..என்று, அப்படியாகத்தான்
அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தேன். தனிமங்களுக்கு அணு எண். என் புத்தகங்களுக்கு கட்ஆப் மார்க். முதலில் உயிரியல், அடுத்து இயற்பியல், வேதியியில், அடுத்து கணிதம்.
அப்பா என்னை ப்ளூடூத் பார்வையில் இயக்கத் தொடங்கினார். காலையில் எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவுக் கொடுக்க நல்ல படிப்பு, மாலை முழுவதும் படிப்பு, அதை வழக்கப்படுத்திக்கொள்ளுப் புனிதா…எனும் அளவிற்கு அப்பாவின் நன்னடத்தை விதிகள் இருந்தன. லியானார்டோ டாவின்சி வலது கையில் எழுதிக்கொண்டு இடது கையில் படம் வரைவாராம், அதை நோக்கியதாக எனது தூண்டல் துலங்கல் இருந்தது.
ஒரு நாள் அப்பாவிடம் கேட்டேன். “அப்பா, ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் எது, சொல்லுங்கள் பார்ப்போம்?”
“ ஸ்ரீரங்கம் “
“இல்லை, உங்கக் கனவுதான்”![]()
அப்பா, என்னை கெனான் கேமரா பார்வையில் பார்த்தார். இரண்டு நிமிடங்கள் பார்த்தவர் என் அருகினில் வந்தார். என் கையை இறுகப் பற்றினார். “ம், நீ டாக்டராகணும். அது ஒன்றுதான் என்னுடைய ஏழடுக்கு கனவு”. நான் பத்தாம் வகுப்பில் எடுத்திருந்த அதிகப்பட்ச மதி்ப்பெண்கள் அப்பாவை அப்படியாகப் பேச வைத்தது. அப்பா எதிர்பார்க்கும் மதிப்பெண்ணை எடுத்துக்கொடுக்க நான் என்ன மோடி அறிமுகப்படுத்திய ‘மேக் இன் இந்தியா’ இயந்திரச் சிங்கமா, பார்க்கலாம்.
மீத்தேன், ஈத்தேன்….இதைப் படிக்கையில் ‘தேன் வந்து பாயுது காதினிலே..’ என்கிற அளவிற்கு இருக்கிறது. ஆனால் அதைக் குறியீடாக, தத்துவமாக, பயன்பாடாக எழுதத் தொடங்குகையில் மீள் வினை மீளா வினையாகிவிடுகிறது.
“ அப்பா ”
“ என்னடா, கொஸின் பேப்பர் எதுவும் வேணுமா?”
“இச்!” அப்பாவை ஏன்தான் அழைத்தோமென இருந்தது. அப்பாவிற்கு என்னாகிவிட்டது. “படிக்கிறதெல்லாம் மறந்து போகிறதப்பா…” எனச் சொல்லலாமென அழைத்தால் “ கொஸின் பேப்பர் எதுவும் வேணுமா” என்கிறாரே. அப்பா இல்லாத நேரம் பார்த்து தலையைச் சுவரில் முட்டிக் கொள்ளணும் போலிருந்தது.
அப்பாதான் இப்படியென்றால் பள்ளிக்கூடம், அப்பப்பா! நேரம் பார்த்து மணி அடிக்கும் வாட்ச்மேன் கூட உத்தமவில்லனாகவே தெரிகிறார். ஒரு நாள் ஸ்டடி கிளாஸ். பிரையோஃபைட்டா படித்துக்கொண்டிருந்தேன். அடிவயிற்றில் வலி. கணக்குப்படி நாளை வரவேண்டிய வலி அது. அல்ஜீப்ரா, திரிகோணமிட்ரிக்குள் ஆட்படாத இந்த வலி ஏன் இப்ப வரணுமாம்? தாவரவியலை மூடி வைத்துவிட்டு விலங்கியலைத் திறந்தேன். தாவரவியல் டீச்சர் என் குடுமியைப் பிடித்தார்.
“ டீச்சர்…”
“தாவரவியல் படிக்காம என்ன படிக்கே?”
“ விலங்கியல் டீச்சர்”
“ அதுல என்ன படிக்கே?”
“ மாதவிடாய் சுழற்சி”
“ நீ பியூர் சயின்ஸா, மேத்ஸா.?“
“ மேத்ஸ் டீச்சர்”
“ உனக்கு இந்தக் கேள்வியெல்லாம் கேட்க மாட்டாங்க. இதை ஏன் வீணாப் படிச்சிக்கிட்டு?”
டீச்சர் அப்படிச் சொன்னதும் என் தைராய்டு சுரப்பு சட்டென நின்றுவிட்டதைப்போலிருந்தது. வேகு,வேகுவென நடந்து அவரது அறைக்குப் போனவர் திரும்பி வருகையில் அவரது கையில் ரயில் அட்டவணை அளவிற்குப் பாட அட்டவணை இருந்தது.
“ புனிதா, இதோ பார். இப்ப பாட்டனி பிரீயடு”
நான் விரிகோணத்தில் பார்த்தேன். அவர் என்னை குறுங்கோணத்தில் பார்த்தார். மன்னித்து விடுங்கள் டீச்சர, என்ற நான் விலங்கியலைப் புத்தக பைக்குள் வைத்துவிட்டு அவருக்குப் பதில் இவரென தாவரவியலை எடுத்தேன்.
காலை இரண்டு இட்லி. அதற்குச் சட்னியாக இயற்பியல். மதியம் கொஞ்சம் சாதம். அதற்குக் கூட்டுப் பொரியலாக தாவரவியல். இரவு ஒரு சப்பாத்தியுடன் கொஞ்சம் கணக்கு. இப்படியாகத்தான் வயிற்றுப் பசியுடன் கூடிய மனனப் பசியைத் தணித்துக்கொண்டு வந்தேன். “சாப்பாட்டு நேரத்தில படிப்பு என்னடி வேண்டிக்கிடக்கு…” இப்படியாகச் சொல்லும் அம்மா இப்போது அதையும் சொல்வதில்லை.
“ புனிதா, இனி இப்படியாகப் படிப்பது ஆகாது”
“ ஏன்ங்கப்பா?”
“ ஜனவரி, பிப்ரவரி… முடிந்துவிட்டது”
“அதனாலே?”
“இனி வரி..வரி…யாகப் படிக்க வேணும்” என்ற அப்பா ஒரு பிரத்யேகமான கரும்பலகையைக் கொண்டு வந்து என் அறையில் மாட்டினார். அதன் மேற்பக்க மூலை செங்கோண முக்கோணத்தை அவரே எடுத்துக்கொண்டார். அதில் தினமும் ‘தேர்விற்கு இன்னும்…… நாட்களே உள்ளன’ என எழுதத் தொடங்கினார். அந்த ….. இல் எண்கள் இறங்கு வரிசையில் வர, வர எனக்கு பயத்தில் அட்ரீனல் சுரந்தது.
“புனிதா….”
“ ம்ப்பா…”
“ என்ன படிக்கே…?”
“ இங்கிலீஸ் எசே…”
“ கட் ஆப் மார்க்குக்கு லாங்வேஜ் தேவையில்லையே. அதை ஏன் படிச்சிக்கிட்டு. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜிக்கு அதிக கவனம் கொடு…”. அப்பா இப்படிச் சொன்னதும் அவர் மீது எனக்குக் கோபம் வந்தது. அதை அவரிடம் வெளிக் காட்டவா முடியும்? கோபம் மிக முக்கியமான கேள்வியில் இல்லையே!
“ புனிதா, எக்ஸாம் பீஸ் ஐம்பதாயிரம் கட்டச்சொல்லிருக்காங்க….”
“ அவ்வளவா! ஏன்ப்பா?”
“ ஒன் மார்க்ல எதுவும் டவுட் இருந்தா சொல்லித் தருவாங்களாம்”
“‘அப்பா, எக்ஸாம் சிஸ்டத்தில ஏகப்பட்ட கன்டிசன்ஸ் இருக்கு. அதெல்லாம் சாத்தியமில்லங்கப்பா…”
“ ஏன் சாத்தியமில்ல. ஜனநாயக நாட்டுல எதுவும் சாத்தியம்த்தான்”
“ இருக்கலாம்ப்பா. அந்தளவிற்குக் கண்காணிப்புகளும் இருக்கே”
“ அதனாலதான் அவ்ளோ பணம் கட்டச்சொல்றாங்க”
“ அப்படியொரு தேவை எனக்கு வராதுங்கப்பா. பணத்தைக் கட்டி ஏமாற வேணாம்”
“ குட்! வரக்கூடாது. ஒரு வேளை வந்தால்?”
“ வந்தால்!”
“ தயங்காம ஹால் சூபர்வைசர்க்கிட்ட கேட்டு எழுதலாம்ல”
இதற்கு நான் என்ன பதில் சொல்வதாம்? மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே ஓடும் பற்சக்கர ரயில் என் மண்டைக்குள் ஓடுவதைப் போலிருந்தது.
“சரிங்கப்பா….” சொல்லிக்கொண்டே டியூசனுக்கு ஓடினேன்.
டியூசனுக்கும் ஸ்கூலுக்கும் இடையில் பாம்பன் பாலம் அளவிற்கு இணைப்பு இருந்தால் தேவலாம் போலிருந்தது. சிவன் பெரிதா, விஷ்ணு பெரிதா? . டியூசன் மாஸ்டர் பெரியவரா.? ஸ்கூல் மாஸ்டர் பெரியவரா.?. டியூசன், ஸ்கூல்…இவற்றில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேணும்? அப்பாவிடம் ஒரு நாள் கேட்டிருந்தேன். அப்பா சார்புநிலை தத்துவம் அளவிற்கு அதை விளக்கினார். “ஸ்கூல், எக்ஸாம் எழுத. டியூசன் மார்க் வாங்க…”.
பிறகென்ன டியூசன் மாஸ்டர் சொல்வதை உபநிடதமாக எடுத்துக் கொண்டு வியர்வை சிந்தி, தூக்கம் சிந்தி, புத்தகங்களைக் கரைத்துக் குடித்து தேர்வுகளை எழுது, எழுதென எழுதி மார்ச் மாதத்தைக் கடத்திருந்தேன்.
இந்தப் பூமிக்கு என்னதான் அவசரமோ? விடிந்தால் நாளை தேர்வு முடிவு.
எனக்குத் தூக்கம் வருவேனா, என்றது. விரிப்பில் புரண்டுப் படுத்தேன். தலையில் ‘கிண்ண்…’ என புத்தகச் சுமை. மண்டைக்குள் எறும்பு ஊர்வதைப் போலிருந்தது. வரையறு, என்றால் என்ன, உதாரணம் தருக,….கேள்விகளின் அணிவகுப்பு. இன்னும் கொஞ்சம் நல்லாப் படித்திருந்திருக்கலாமோ? தெரிந்தக் கேள்வியையே இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ? மனதிற்குள் திக்…திக்!.
எவ்வளவு மதிப்பெண் வரும்? எவ்வளவு வந்தால்தான் என்ன? வருவது வரட்டும்.
“திடுக்”
“ என்னடிம்மா? ”
“ கெட்டக் கனவும்மா…”
“ என்னடிக் கண்டே?”
“ என் கிளாஸ்ல நான் மட்டும் ஃபயிலா போயிருக்கேன்ம்மா…”
கனவு கண்டது நான். திடுக்கிட்டது நான். அம்மாவிற்கு என்ன வந்தது? அவளுக்கேன் இப்படி வியர்த்துக் கொட்ட வேண்டும்?. அம்மா திடுத்தெப்பென எழுந்தாள். வேகமாக ஓடினாள். “எங்கே ஓடுகிறாள்?” நான் நிழலாகப் பின்தொடர்ந்தேன். அம்மா முகம் கழுவி, கை கால் அலம்பி, பூஜை அறைக்குள் நுழைந்தாள்.
“ என்னம்மா செய்யப்போறே?”
“ உஷ்!”
“ டொய்ங், டொய்ங், டொய்ங்” மணி அடித்து சுப்ரபாதம் பாடத் தொடங்கினாள்.
“ வா, இப்படி…” என் கையைப் பிடித்து இழுத்தாள். “குல தெய்வத்தை நல்லா வேண்டிக்கோ. விபூதியை எடுத்துக்கோ….”
“ என்ன பழக்கமடி இது. இந்த நடு சாமத்திலே?” அப்பா பூஜை அறைக்குள் நுழைந்தார்.
“ நாளைக்கு ரிசல்ட்டுங்க”
“ இருக்கட்டும் அதுக்கு?”
“ புள்ள பாஸ் பண்ணனுமுனேதான்”
அப்பா இதற்கு என்ன சொல்லப் போகிறாரென அப்பாவைப் பார்த்தேன். “எனக்கும் கொஞ்சம் விபூதிக் கொடு” என்றவாறு அவர் கையை நீட்டினார். அன்றைய தினம் அப்பா நெற்றியில் பெரிய பட்டையைப் போட்டுக் கொண்டு, பவ்வியமாக நின்றதை நினைத்தால் அர்த்தராத்திரியிலும் சிரிப்பு வரவே செய்யும்!
“ புனிதா”
“ ம்ப்பா…”
“ வரும்ல…”
“ என்னதுங்கப்பா…?”
“ கட் ஆப்?”
“ … ”
“இம்“, “ஊகூம்” இரண்டில் எதை நான் பதிலாகச் சொல்ல?
“ வரலாம்ப்பா”
நான் அப்படிச் சொன்னதும் அப்பாவின் முகத்தில் மின்காந்த நிறமாலை. கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டினார். நீண்ட பெருமூச்சு விட்டார்.
“ நம்மக் குலப்பெருமை, நீ எடுக்கப் போகிற மதிப்பெண்ணில் இருக்கு”
“ பெண்ணின் பெருந்தக்க யாவுள மதிப்பெண்” என்று திருக்குறளைத் திருத்தி எழுதிக் கொள்ளணும் போலிருந்தது.
மறுநாள் பொழுது, சாணம் தெளித்து விடிந்தது. என்புத் தோல் போர்த்திய உடம்பாக படுக்கையிலிருந்து வெளியே வந்தேன். உலகம் என்னை மையமாக வைத்து சுற்றுவதைப் போலிருந்தது.
அப்பா லைசோபாவில் வலது கால் மடக்கி உட்கார்ந்திருந்தார். அவரது கையில் ரிமோட் இருந்தது. புதிய தலைமுறை, தந்தி தொலைக்காட்சி தேர்வு முடிவு வெளியாகப்போகும் செய்தியை நீட்டலளவையில் அளந்துக் கொண்டிருந்தது.
நான் அப்பாவைக் கவனித்தேன். மருத்துவமனையில் பைபாஸ் ஆப்ரேஷன் செய்துக்கொள்ளப்போகும் படபடப்பில் இருந்தார். மகளின் மதிப்பெண் தெரிந்தப் பிறகு சிரித்துக் கொள்ளலாமென முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டார். பத்தாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மதிப்பெண்ணை ஆயிரத்து இருநூறுடன் தொடர்புப் படுத்தி பெருக்கி வகுத்து ஒரு உத்தேசமான மதிப்பெண்ணிற்கு வந்தார்.
“புனிதா?”
“அப்பா”
“ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் எவ்ளோ எவ்ளோ வரும்?”
அதேக் கேள்வி திரும்பவும். என்ன பதில் நான் சொல்வதாம்? எனக்குள் அணுக்கரு பிளவு நடந்தேறியது.
“எவ்வளவு வரும்?” நூற்றுத்தொண்ணூற்று…..என விளித்து ஒவ்வொரு பாடத்திற்கும் உத்தேசமான மதிப்பெண்ணைச் சொன்னேன். நான் கணிக்கும் மதிப்பெண், அப்பா எதிர்நோக்கும் மதிப்பெண் இவை இரண்டிற்குமான வித்தியாசம் ஒரு மில்லி மீட்டர் அளவில் இருந்தது. அப்பா முகத்தில் ஈயாடவில்லை.
“ சிங்கப்பூர்லிருந்து உன் மாமா பேசினார்”
“ என்னப்பா சொன்னார்?”
“உன்னோட ரிஜிஸ்டர் நம்பரைக் கேட்டார்”
“ கொடுத்தீங்களா?”
“ இல்ல..”
“ தேங்க்ஸ்ப்பா..”
“ உன்னோட பிரைமரி டீச்சர் கலைவாணி போன் பண்ணுனாங்க”
“ என்னங்கப்பா சொன்னாங்க?”
“ உன் மார்க்க வாட்ஸ் அப்பில் போடணுமாம்”
நியூரான் இல்லாத நகத்தில் கூட இரத்தம் பாய்வதைப் போலிருந்தது. என்னை அறியாமல் உதடுகள் நெழிந்தன. என்னைச் சுற்றிலும் கண்களாகத் தெரிந்தன.
அலைமாறியில் 3 ஜீ சிணுங்கிக் கொண்டிருந்தது. எடுத்துப் பேசலாம்தான். பேசினால் என்ன கேட்பார்கள்? “புனிதா எவ்ளோ மார்க்?”.
போனை எடுக்கத்தான் வேண்டுமா? அலைபேசியை ‘உஸ்’ நிலைக்கு மாற்றினேன். அப்பா கையில் மற்றொரு அலைபேசி இருந்தது. அது லூமியா. அதில் உலக உருண்டை சுற்றிக் கொண்டிருந்தது.
எனக்கு பதற்றம். வலது கண் மட்டும் தனியாகத் துடித்தது. நான் இடத்தை விட்டு மெல்ல விலகி குளியறைக்குள் நுழைந்துக்கொண்டேன். தண்ணீர்க் கொட்டும் இரைச்சலை என்னைச் சுற்றி எழுப்பிக் கொண்டேன்.
இந்நேரத்திற்குத் தேர்வு முடிவு வந்திருக்கணுமே! மனதிற்குள் அசூசை. அறையை நிசப்தத்திற்குக் கொண்டு வந்தேன். அப்பா யாருடனோ தொடர்பில் இருந்தார். இதுநாள் வரை எனக்குச் செலவளித்த தொகையைப் பட்ஜெட்டாக வாசித்தார்.
“ அப்பா ” .குளியலறையில் இருந்தபடி தலையை வெளியே நீட்டி கத்தினேன். அப்பா வெளியே ஓடிவந்தார். அவரது முகத் திசுக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தன.
“ ரிசல்ட் என்னாச்சுங்கப்பா?’
“ இச்” என்றார்.
எனக்குள் நியூட்ரினோ வெடிப்பதைப் போலிருந்தது.
“ஏன்கப்பா, கட்ஆப் வரலைங்களா?”
“ஸ்கூல் பஸ்ட் வராமல் போயிட்டியேடா” என்றவர் நெட்டிகள் பறித்தார்.
நான் தலையை ஆமையைப் போல உள்ளே இழுத்துக் கொண்டேன். குழாய்த் தண்ணீரைத் திறந்துவிட்டு தலையை அதில் நீட்டினேன். இன்னும், இன்னும் கொஞ்சம் அழ வேண்டும் போலிருந்தது.
![]()
ப்ளஸ் 1 மாணவியின் படிப்புக்கான மன அழுத்தத்தை பள்ளிகளை விட அவளது குடும்பம் தான் அதிக எதிற்போடு கொடுக்கிறது என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார் எழுத்தாளர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி