செம்பரம்பாக்கம் – அண்டனூர் சுரா..!சிறுகதை 13

“அண்ணாத்தே, நைனா, சேட்டு யாருனாச்சும் இய்னே வாங்களே. அய்யோ, ஏ குட்சயெல்லாம்ஆத்தோடப் போவுதே. ஏ உயப்பு எல்லாமே போச்சுதே….” வாயிலும் வயித்திலும் அடிச்சிக்கீனு அயிகீறேன்.மய பெய்யிற இரைச்சலும் கூவத்துல தலைக்குப்புற பாயுற தண்ணீயும் நாலு வீசம் தாண்டி எனக்குகேட்கீது. நா அயிகிற அயிகை எனக்கு கேட்கீல. சுனாமி கினாமி மறுக்கா வந்திடுச்சோனுபயந்துக்கினுருக்கேன். கொடங்கைக்குள்ள மவளயும் மகனயும் அணைச்சிக்கிட்டு பதுங்கிப்போயிருக்கேன்…
பெய்ற மய பேயா பெய்யுது. நேதைக்கி பெய்த மயயை விட இன்னேக்கு செம மய. கபாலீசுவரருகோயிலு அய்ரு புராணக் கதைங்கிற பேர்ல சொல்வாரே, “அடே அம்பிகளா, வானத்தில தேவதைகஇருக்கா இலயோ. அவ ஒரு நா பார்த்து மொத்த அவாளும் குளிப்பாடா. அவ குளிக்கிற ஜலம்தான்டாம்பிமய” அப்படி ஒன்னுதான் நடக்குதோனு என்னால நெனக்காமருக்க முடியீல.“
அட அண்ணாத்தே, ஏ வூட்டு ஆம்பளய யாருணாச்சும் பார்த்தீன்களா? அந்த மன்சன் குடிச்சிட்டுஎங்கே சாஞ்சிக்கிடக்குதோ” வயித்தில வாயில அடிச்சிக்கீறேன். தொண்டைக்குள்ளே மென்னுக்கீறேன்.அதுக் கட்டின தாலிய எடுத்து பாத்துக்கீறேன். மோந்துக்கீறேன்.
மெட்ராஸு புதுசா மேஜரான பொண்ணு மாதிரி தெரியீது. சடங்கு சுத்த மானமும் மேகமும் மாமன்மச்சான் கணக்கா சீர் சனத்தோட வர்ற மாதிரியிருக்கீது. பெரியப் பொண்ணான தலயில தண்ணீ ஊத்துறமாதிரி ஊத்திக்கிட்டுருக்கீது மய. ஒங்களயெல்லாம் என்ன செய்றீனு பாரெனெ சொல்லிக்கீனு ஓடுதுவெள்ளம். குப்பம் முழுசும் வெள்ளக்காடு. சிங்காரச் சென்னெ செத்த நேரத்துக்குள்ள செத்தசென்னெயாகீடுச்சு.
கூவத்து ஆத்துக்கரையத் தாண்டி நாலு வீசம் தூரம் நெட்டே நடந்தா சைதாபேட்டையில ஏ வூடு.தாம்பரத்தில, ஆவடியில, கிண்டியில ரோட்டோரத்தில மூத்திரம் பெய்ய, வெளிக்குப் போவவேகாவறிக்கல்ல அடுக்கி கட்டிருப்பான்களே கக்கூஸு அம்புட்டுக்காணும்தான் ஏ வூடு. எட்டுக்கு ஆறேஅடி. இமிக்கினூண்டுது. மெட்ராஸுல பொற்ந்து வள்ந்து குப்பக் கொட்டிக்கினுகீற எங்களுக்குகுருவிக்கூடு அம்புட்டேதான் வூடு. வாய வந்த வந்தேறியளுக்கு வானத்த தொட்டுக்கீனு வூடு. .
கூவத்த, அடயாற அபகரிச்சு கட்டிருக்கிற வூடெல்லா பாக்க சோக்கா இருக்கீது. மாடி, மேலமாடியென ஏறிக்கீனே போவுது. சென்னை ஒன்னேதான் கெதியென இருக்கிற எங்க பொயப்பு குப்பையாகஆகீது. சென்னெயில மய வந்தா, வெள்ளம் வந்தா மொதல்ல மெதக்கீறது நாங்கதே. பொறகுதான்பாலீத்தீனு, பேப்பரு, கடுதாசி எல்லாம்….
திசம்பரு பொறந்தா டெரரா பூடும். சுனாமி வந்தது திசம்பருதே. ரெண்டாயிரத்து அஞ்சு வெள்ளம்குட்சய, குப்பத்த அல்லாக்கா தூக்கிக்கீனு போனது திசம்பருதே. செம்மரபாக்கம் நெறஞ்சி தண்ணீதொறந்து வுட்டாங்கோன்னு வச்சிக்கோ. எங்க பொயப்புல மண்ணு வியிந்தீரும். போயின வருசம் நல்லதிசம்பரு. அதுக்கும் மொத வருசம் டெக்கரான திசம்பரு. அப்படினாக்கும் திசம்பருதே இந்த வருசம்இருக்கப் போவுதுனு நினெச்சீனு இருந்தேன். மொத தியதியே செம்பம்பாக்கம் தண்ணீயதொறந்துவூட்டான்கோ….
“அய்யோ….அய்யய்யோ…..கூவத்தீல வெள்ளம்” அல்லாரும் கூவுறாங்கோ. கரீட்டுதான். நான்நெனச்சது கரீட்டாப்போச்சு. கூவத்துல ஓடற தண்ணீயெல்லாம் ஏ குட்சக்குள்ள வருது. பாதி வெலயிலசிமென்ட் வாங்கி அலோபிளாக் கள்ள வச்சி கட்டின வூடு . மேக்கூர ஆஸ்பட்டாசு.
ஆத்தோரத்தீல குடியிருக்கீறம். இன்னா கூவி இன்னா பிரயோஜனம். உலகத்துத் தண்ணீயிலாம்தெருவுக்குள்ளே வரீது. தாமிரப்பர்ணி, வையை ஆத்துத் தண்ணீ போல சோக்கானத் தண்ணீ இல்லே.மூத்திரத்தண்ணீ. மலம்,சாக்கடத் தண்ணீ. நாத்தம் குடலைப் புடுங்கீது. உமட்டிக்கீனு வரீது. மலம், ஜலம்மெதந்து அப்பளம் மாதிரி வூட்டுக்குள்ளே வரீது. தண்ணீ ஏற மலமும் ஏறீது. நாறீது.
“நெஞ்சுளவு தண்ணீயீல பைக் ஓட்டுறான்கோ. ஆட்டோ ஓட்டுறான்க. எதுவுமே நடக்காத மாதிரிநடக்குறான்க. குப்பம் மெதக்குறது அவன்களுக்கு குப்ப மெதக்குறதா தெரியீது. கோயம்பேடு,கோடம்பாக்கம், ஆழ்வாப்பேட்ட சினிமாக்காரக் குட்டிக ஏரியாவுக்குள்ளே ஒன்னுன்னா டீவிக்காரப் பயல்வதுடிக்கிற மாதீரி எங்க ஏரியாவப் பார்த்து துடிக்கிறதீல்ல.
ஒன்னு சொல்லட்டா நைனா. இந்த மெட்ராசு இருக்கீதுங்களே மெட்ராசு. இது எங்களுக்கானபூர்வீகம். ஆனா இன்னேக்கு அது அரசியவாதிங்க, சினிமாக்காரங்களோட கூடாராமாயிடுச்சு. மலயாளதமிலு, தெலுங்கு தமிலு பேசுறவங்களுக்குக் கெடைக்கிற மரிவாத, கௌரதம் மெட்ராஸு பாஷபேசுறவங்களுக்கு கெடைக்கிறதீல. குப்பமென எங்கள மலயேத்திற இந்த அதிகாரிங்களுக்குக் கூவத்த,அடயாத்த அபகரீச்சு மாட மாளிக கட்டியிருக்கிறவங்கள விரட்டியடிக்க முடியுறதில்ல.

ஏரியா முச்சூடும் தண்ணீ. மாடில நின்னு மாஞ்சு மாஞ்சு போட்டோ, வீடியா எடுக்குறானுங்க. “சார்மொவம் தெரியீல. இங்கே பாருங்கோனு சவுண்டு விடுறான்க. ரோட்ட எடுக்குறான்க. போற, வாறகுட்டிகள எடுக்குறான்க. சன்னலு வரைக்கும் தண்ணீ நிக்கிற பெரிய வூட்ட எடுக்குறான்க. குட்சக்குள்ளதத்தளிக்கிற எங்கள எடுத்தான்களா? இல்லே. காலையில முழங்கா வரைக்கும் ஓடியத் தண்ணீ மத்தியம்இடுப்பு வரைக்கும் ஓடினூச்சு. சாயந்திரம் இடுப்பத்தாண்டி கழுத்து வரைக்குமா ஓடி உச்சந்தலயத்தொட்டுனூச்சு.
உவ்வாவுக்கு வயியக் காணோம். கண்ணுல பொட்டுத் தூக்கமில்ல. மூத்திரம் மட்டும் வருதுமுந்திக்கீனு. சர்க்கர வியாதிக்குச் சொல்லவா வேணும். ஆம்பளைங்க லுங்கிய சுருட்டிக்கீனு குந்திட்டாபோதும். நா பொம்பள. அவங்களப் போல குந்தி எந்திரீக்க முடியீல.
எப்பவும் போதெயில கூடவே இருக்கிற ஏமூட்டு ஆம்பளயக் காணோம். அந்த மன்சன் எங்கேபோனார்னு தெரியீல. அவரத் தேடிக்கீனு போவலாமெனப் பார்த்தா பயலயும் பொண்ணயும் கூட்டிக்கீனுபோவ பய்மா இருக்கீது.
குட்சய விட்டுட்டு போனா திரும்பி வாறப்ப குட்ச கெடைக்காது. அதிகாரிங்க குட்சய பேத்துஎறிஞ்சிட்டு வேற எய்னயாவது போயீ தங்கிக்கீறச் சொல்வான்கோ. நேக்கு ஒரு பக்கம் ஏ வூட்டு ஆம்பளக்கவல்ல. இன்னொரு பக்கம் குட்சக் கவல்ல. அந்த மன்சன் எப்படியும் திரும்பி வந்திடுவாருங்கிறநம்பிக்கையில குட்சக்குள்ளேயே குந்தினுருக்கேன்.
ஏ கூட மவளும் மகனும் இருக்காங்க. மவனுக்கு மீச அரும்பிக்கிட்டு வருது. மவ வயசுக்கு வந்துரெண்டு மாசம் ஆவுது. “அம்ம வாம்ம. போயிடலாம்…“ என்கிறாள் மவள்.
“ஓ அப்பன் வந்திடட்டும் போயிடுவோம்…” என்கிறேன்.
ஒன்னுக்கு ரெண்டுக்கு வருது. குட்சக்குள்ள எறங்கி கூட்ற மாதிரி போயிக்கிட்டே பீச்சாங்கையிலஅலம்பிக்கிறேன். வயித்துப் பசி கொடலத் தின்னுது. குட்ச முயிக்க தண்ணீருந்தும் தாகம் தணிச்சிக்கிறமுடியீல. ஏ கவல எல்லாமே ஏ மவ மேலேதே. எனக்குத் தூர ஒதுங்க இன்னும் நாளு இருக்கீது.மவளுக்கு நாளைக்கு. அவ என்ன செய்யப் போறாளோ, நெனைக்கிறப்ப வசிறு பிசையீது.
“அம்மாடி, ஒன்னுக்கு வருதொ?” ஏ மகளக் கேட்டுக்கீறேன். அவ அவத் தம்பிய ஒரு பார்வைபார்த்துக்கீனு “போயிட்டேன்ம்மா….” என்கிறாள். ரெண்டு பேரும் சிரிச்சிக்கீறோம். உள்ளுக்குள்ளேஅயிதுக்கீறோம்.
“அம்மாடி, நீயீ ரெண்டுக்குப் போனீயாம்பே?” அடுத்து கேட்கிறேன்.
“வரலம்மே….” என்கிறாள்.
“ நாளக்கி ஒதுங்கிற நாளடிம்மா நீயீ”
“ ம்மா…..” என்கிறாள்.
“ என்னடீம்மா செய்றது?”
ஒரு வயியும் தெரியலம்மே. அவ என்னையப் பார்க்கீறாள். நானு அவளெப் பார்க்கீறேன்.
குட்சக்குள்ள ஒரு ஸ்டீல் கட்டிலு. போன வாரம் வாங்கினீது. புதீசு. வாரச்சீட்டுல எடுத்தது.இன்னும் கடன் கட்டி முடியீல. அதுக்கு வந்த சோதனையப் பார்த்தீங்களா. அத நேரா நிமிர்த்தி அதில ஏறிநா, ஏ மக, மவ, மூணு பேரும் குந்தினுருக்கோம். கெணத்து வாயில, குளத்து வாயில தவளைககுந்தியிருக்குமே அப்படி குந்தீனுருக்கோம். கட்டிலு விளிம்போட போய்க்கீனு இருக்கீது தண்ணீ.
அரசாங்கம் பிச்ச ஓட்டுக்குக் கொடுத்த டீவியெ வெள்ளம் இழுத்துக்கீனு ஓடூது. மிக்சி, கிரேண்டருபேனு,…சொல்லிக்கொள்ளாம வெள்ளத்தோட போவூது. வெள்ளத்துல மனுசங்களே மிதக்கிறப்ப, இந்த டீவி,மிக்சி எம்மாத்திரமாக்கும்……
ஏ மவ சொன்னாள். “அம்ம, வெள்ளத்தில டீவி போகீதும்மா”
எனக்கு வந்துச்சேக் கோபம். வுட்டேன் ரெண்டு. “அடச்சீ நீய, வாய மூடிக்கினு கம்முனுருக்கமாட்டே” அவள் அப்பிடியே வாய மூடிக்கீனாள்.
“அம்ம, என்னோட புக்கு, நோட்டெல்லா வெள்ளத்தில போகுதும்மா” தலையீல அடிச்சிக்கிட்டுஅயிகிறா மவள். பெட்டிக்குள்ளே வச்சிருந்த ரேசன் அட்ட தண்ணீயோட போவுதேனு நா அயிகீறேன். ஏமவனும் அயிகீறான், அவன் வௌயாடுற பேட்டு வெள்ளத்துல போயிடுச்சுனு’
இதெல்லாம் தொலயுது. எனக்கு என் மன்சன் கவலெதே. ரோட்டுக் கடெக்குப் போயிட்டுவாறேன்னு போன மனுசன் இன்னுமே திரும்பி வரலங்கிற கவலை என்னைப் பிய்ச்சுத் திண்ணூது.நிமிர்த்திருக்கிற கட்டிலுல குந்திக்கீனு ஏரியாவ சுத்தி முத்திப் பார்த்தேன். தண்ணீயில மெதக்கிறதோணிப்போல மெதக்குது வூடுக. ஒருத்தரு புள்ளய தலயீல தூக்கி வச்சிக்கிட்டு ரோட்ட கடந்து போறாரு.அவருக்குப் பின்னே ராலஞ்சுப் பேரு.
“ அண்ணாத்தே, ஏ வூட்டு மன்சன பார்த்தீங்களா?”
அவரு சுத்தி முத்திப் பார்க்கீறாரு. ஏ கண்ணுக்கு அவரு தெரிகிற மாதிரி அவரு கண்ணுக்கு நாதெரியீல.
அந்த மன்சன நெனைக்க நெனைக்க எனக்குக் கோபமா வருது. அந்தாளு வருட்டும் ரெண்டு நல்லாவச்சிவிடுறேன். மன்சன்தானா? கேப்மாறி, முள்ளமாறி. அந்தாள நெனைக்க, நெனைக்க கோவமாக்கீது.அந்த மன்சன நெனச்சி திட்டிக்கீறேன். நா திட்டுறப்ப அந்த மன்சன் நடிக்கும் பாசாங்க நெனச்சி ஏ மவசிரி, சிரினு சிரிச்சிக்கீறாள். அவளப் பார்த்து ஏ மவன் சிரிக்கீறான். சிரிச்ச சிரியில தவறிதண்ணீக்குள்ளே…வியிந்திட்டான். எனக்கு என் உயிரே போயீடுச்சு. ஒத்தப்புள்ள. இப்டி விழுந்திட்டானேனு.அவன் சமத்து. ஒன்னுக்கு ரெண்டுக்கு போயிட்டு நீந்தி மேலக்கே வந்தீட்டான்.
ரேசன் அட்ட, ஆதாரு அட்ட வெள்ளத்தோடு போயிடுச்சு. ஓட்டட்ட மட்டும் மெதந்து, மெதந்துவரீது. அதப் பார்க்க எனக்குச் சிரிப்பு, சிரிப்பா வரீது. எனக்குனா ஒரே ஆச்சிரியம். மவக்கிட்ட சொல்லிபொருமுறேன். “எல்லா அட்டயும் வெள்ளத்தோட போவுது. ஓட்டட்ட மட்டும் மெதந்து வருதேனூ….“ மவள்கை நீட்டி எடுத்து ஏ இடுப்பில சொறுகீனாள்.
மூனு நாளா தண்ணீயீல தத்தளிச்சோம். யாரும் எட்டிப் பார்க்கீல. நானு வேலைக்குப் போற சேட்டுமொதலாளி, வட்டிக்கடெ நைனா, கடனுக்குச் சாமான்க கொடுத்து மாத மொதத் தேதியீல மொத்தமாகக்வாங்கிக்கீற மளிகெக் கடெ அண்ணாத்தே. யாரும் எங்கள நலம் விசாரிக்கீல. வார்டு உறுப்பினீரு, யாரும்இந்தாண்டே வரீல.
சென்ன முயிக்கவும் கரண்டு இல்லே. பஸ்ஸு போக வர்ற இல்லே. உசரத்தில எலிக்காப்டருபறக்கீற சத்தம் மட்டும் கேட்கீது. வானத்த நிமிர்ந்து பார்க்கீறேன். சடங்கு சுத்த வந்த மாமன் சாதிசனத்தோட திரும்பிப் போற மாதிரி போயினுக்கிட்டு இருக்கீதுங்க மேகம். மய விட்டிருச்சிங்கிற திருப்தி
எனக்கு. பசி. சின்னக்குடல பெரியக்குடலு திங்கீது. தாகம் நாக்க வறண்டூது. தாகத்தத் தணிக்க எச்சியைமுயிங்கிக்கீறேன்.
நாலாம் நாளு. மத்தியம்….
எங்களை நாலு பேரு தூக்கி வுட்டாங்க. சென்னையில இப்படியுமா மக்க இருக்காங்க. நம்பமுடியீல. காவிரி ஆத்துக்குள்ள ஒட்டகம் நடக்கிற மாதிரி சென்ன குடியிருப்புக்குள்ள வருது நாலஞ்சுப்படகுக. எங்கள ஒரு படகீல ஏத்தீ, ஒரு மேட்டுல எறக்கி வுட்டாங்க. சோத்துப் பொட்டலம் கொடுத்தாங்க.
தண்ணீ கொடுத்தாங்கோ. படுக்கப் பாயீ, தலயணை, போர்த்திக்கிற போர்வ கொடுத்தாங்க. ரெண்டு பேரு
செலவுக்கு வச்சிக்கங்கனு பணம் கொடுத்தாங்க.ரெண்டு நாளா ஓராளு மட்டம் ஓடிய வெள்ளம் போனாப் போகுதேனு முயங்காலு வரைக்குமாகவடிஞ்சிப் போயிருந்தீச்சு. நேக்கு ஏ வூட்டு ஆம்பளக் கவலெ. மவளெயும் , மகனெயும் கொடங்கைக்குள்ளஅணைச்சிக்கிட்டு ஒவ்வொரு கடையா நடக்கிறேன். எல்லாக் கடையும் இறுக்கி சாத்தி இருக்கீது. அந்தமன்சன் கடெ மட்டும் தொறந்திருக்கீது. கடெக்குள்ள ஆம்பளங்க நடமாட்டம் இருக்கீது. பொம்பளனு கூடப்பார்க்காம கடைக்குள்ளே நுயைஞ்சு பார்க்கீறேன். கண்ண மூடி ஊத்திக்கிட்டுருக்கிற ஆம்பளையள உசுப்பிகேட்கீறேன். “ஏ வூட்டு மன்சன்ன பார்த்தீங்களா? நீங்கப் பார்த்தீங்களா?”.விசாரிக்கீறேன். ஒரு துப்புமில்ல.தொலவுமில்ல.
சென்னெயில அமேதி திரும்பிருச்சீனு ரேடியோ விடாமச் சொல்லினுக்கீது. டீவிங்க வளைச்சிப்பிடிச்சு சென்னையே காட்டினுக்கீது. சென்னயில எதுவுமே நடக்காத மாதிரி பஸ்ஸு , ஆட்டோ, வாகனம்புகைய மூஞ்சியில அடிச்சிக்கீனு கர்….கொர்…ரென போய்னுக்கீது.
நானு ஏ புள்ளைகளோட சைதாப்பேட்ட, சிந்தாரிப்பேட்ட, கிண்டி, ஆவடி சுத்தி இருக்கிற அத்தனசாக்னாக் கடெயையும் சுத்திப் பார்த்திட்டு ரெண்டு நாளுக் கயிச்சு வூட்டுக்குத் திரும்பி வாறேன். மனுசன்இன்னும் வூடு திரும்பல. அந்த மனுசன நெனைக்க கோபமா வருகீது. அந்த மன்சன் மட்டும் ஏ கையீலகெடைக்கட்டும். ஏ பேமாறீ, கேப்மாறி. ஓ மூஞ்சீல ஏ பீச்சாங்கைய வக்கே. பொட்டயயும் குட்டியயும்விட்டுட்டு எங்கேடா நீ போனே? நாக்குப்பிடுங்க கேட்க சுத்திமுத்தி பார்க்கேன். ஏ வூடு இருந்த எடம்தொடச்சிக் கெடக்கு. ஊரு ஆம்பள அத்தனையும் அதது வூட்டு உத்தூத்து பார்க்குது. ஏ ஊட்டு ஆம்பளயமட்டும் காணோம்.
ஏ ஊட்டு ஆம்பள செத்துட்டாரோனு மனசு அடிச்சுக்குது. நான் நெனைக்கிறத குப்பத்துச் சனங்கவாய்விட்டு சொல்றாங்க. “ ஓம்புருசன் செத்துட்டாரு”னு. கரையொதுங்கி நாறிப்போயிருந்த பொணத்திலஒன்னக் காட்டி இதுதான் ஓம்மன்சன்னு சொல்றாங்க.
“அட குடிகார மன்சா, தண்ணீ தண்ணீனு தண்ணீயிலயே போயிட்டீயேடா.” வாயிலயும்வவுத்துலயும் குத்திக்கிறேன். ஏ புள்ளய ரெண்டும் கல்லு மாதிரி குந்திருக்குது. சுத்துப் பேட்டதெரிஞ்சவங்க துக்கம் விசாரிக்க வருதுங்க. ஆறுதல் சொல்லுதுங்க. பொம்பளைய என்னெக் கட்டிப்பிடிச்சி அழுவுதுங்க.
ஏ புருசன் கட்டுனத் தாலிய ஒருத்தி இறக்க வாறா. நான் கிட்டே விடேலே. இன்னொருத்திபூவையும் பொட்டையும் பறிக்கிறா, அதுக்கும் நா எடம் கொடுக்கீல. அயிது அயிது எனக்கு மொகம்வீங்கிப் போச்சு. செம்பரம்பாக்கத்து தண்ணீயால செத்துபோன இருவது பேர்ல ஏ மனுசன் பெயரையும்சேர்த்துட்டான்வ. நிவாரணம் கொடுப்பாங்களாம். அதுக்கு….
உசிருக்கு இருபதாயிரமுனு ஆயிரத்தப் பிடிச்சிக்கிட்டு கொடுத்தாவ. இதெ நான்தே வாங்கிக்கொடுத்தேனு ரெண்டு பேரு வாசல்ல வந்து நிற்கானுன்க. கொடுத்து ஒதுக்கியது போவ பத்துமிஞ்சியிருந்துச்சு.
எனக்கு என்னவோ, ஏ மனுசன் செத்துட்டதா தோணல. என்னைக்கிருந்தாலும் வரத்தான்போறாருனு நெஞ்சுக்குழி சொன்னூச்சு. வரட்டும், வரணும். கல்லானாலும் எனக்கு அந்த மனுசன் புருசன்.இப்பக் கிப்ப வந்திடக் கூடாதுனு மட்டும் நெனச்சேன். நான் நெனச்சி ரெண்டு நாளுகூட ஆவல. தண்ணீப்பிடிக்க பைப்படிக்கு போறே. பயபுள்ள மன்சன் கையில ரெண்டு வறிக்க ரொட்டிய பிடிச்சிக்கிட்டு ரோட்டஅளந்துக்கிட்டு வர்றார். தெரு சனம் அத்தனயும் வாயில கைய வச்சிக்கிட்டு நிற்குது.
“அம்ம அம்ம. அப்பா வருதும்மா….“ குதிக்கிறாள் ஏ மவள்.
“ அய் அப்ப….” என்றான் ஏ மகன்.
“ அடச்சீ வாய மூடு. அப்பனாம் அப்பன்….” வந்துச்சே எனக்குக் கோவம். சேலயத் தூக்கி இடுப்பிலசொறுகிக்கீனு மன்சன் தலெமுடிய பிடிச்சேன். கேட்டே ரெண்டுக் கேள்வி. “ஏ பேமாறீ ஓ மூஞ்சீல ஏபீச்சாங்கைய வக்கே. பொட்டயயும் குட்டியயும் விட்டுட்டு எங்கேநீ போனே. மன்சன்னா நீ. என் புருசனாநீ” நாக்குப் பிடுங்கக் கேட்டேன்.
அதுக்கு அந்த மன்சன் சொல்லுது. “ சாராயக் கடைக்குப் போனேனா. கடலூர்ல செம மய. கண்ணுமண்ணுத் தெரியாம கொட்டோ கொட்டுனு கொட்டுது. வெள்ளாமக் கொல்லைக எல்லாம் வெள்ளத்திலபோகுது. பசி ஆத்துற வெவசாயிங்க கொய்யோ மொய்யோனு கத்துறாங்க. அதெ டீவிங்க திரும்பத்திரும்பக் காட்டுனாங்க. மனசு கேட்கீல. கடலூர்க்குப் பேரிடக் குழு போனுச்சு. ஒத்தக் குடும்பத்தயாவதுவெள்ளத்திலேருந்து மீட்கலாமெனு குழுவோட குழுவா போயிட்டேன்டி”கிறார்.
எனக்கு இந்த மனுசன நெனச்சி சிரிப்பு வரீது. அழுவையும் வரீது. நான் என்னத்தச் சொல்ல?என்னத்தச் செய்ய?
![]()