கதைகள்

“தூயவன்” …. சிறுகதை …. 09 …. அண்டனூர் சுரா.

சாந்தினி, முகநூல் பக்கத்தில் பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்தவர்களின் பெயர்களைப் பதிவிடப்போகிறார் என்கிற செய்தியை அமலா வாயிலாக கறந்திருந்தான் சுதாகரன். அந்த ரகசிய செய்தியை அறிந்ததிலிருந்தே அவனது அன்றாட நடவடிக்கையில் பெருந்துண்டு விழுந்திருந்தது.

சில்மிஸங்கள் சந்திக்கு வந்தால் என்னாகுமென்று அவனொன்றும் அறியாதவனில்லை. நாய், புதைப்பிணத்தைத் தோண்டி சந்திக்கு இழுத்து வந்து கடித்துக் குதறும் பாடுதான் என்பதை அவன் அறிந்தே வைத்திருந்தான். சும்மாவே ஊருக்கு ஆயிரம் வாய். சுற்றும் இணைய வெளிக்கு சொல்லவா வேணும். இப்போதெல்லாம் யாரும் யாரையும் தன் கண்கொண்டு பார்ப்பதில்லை. எல்லாவற்றிருக்கும் கேமரா கண்தான். செல்பி எடுக்க ஒரு கண். பறவைப் பட்சிகள் பறந்தால் இருபது கண். விபத்து என்றால் மேலும் பல கண். நடிகர், நடிகைகள் வந்தால் ஆயிரம் கண்கள். இப்படியாக கேமரா கண்களாக விரிக்கும் இக்காலத்தில் கெட்ட தொடுதலுக்கும் சீண்டலுக்கும் சொல்லவா வேணும்?.

சாந்தினி பதிவிடப்போகும் மீடுவில் தான் நிச்சயம் இடம்பெறப் போகிறேன், என்பதை அவனது உட்கிடக்கை சொல்லியிருந்தது. அதை நினைக்க சுதாகரனுக்கு மண்டைக்குள் ஊட்டி ரயில் ஊர்ந்தது. மனத்திரையில் சில்வண்டு ஊரும் உணர்வைக் கொடுத்து தூக்கத்தின் திரையைக் கெடுத்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் அவன் மூன்றாம் கிரேடிலிருந்து முதல் நிலைக்குப் பதவி உயர்வு பெற்றிருக்கிறான். இன்னும் நான்கு வருடத்தில் ஓய்வு பெற இருக்கிறான். மீசை நரைத்தென்ன, ஆசை நரைக்க வேண்டுமே. நரைப்பேனா என்றது பருவம்.

மீடூ ரகசியத்தை அத்தனை ரகசியமாக அவனது காதிற்குள் புனல் வைத்து கொட்டிச் சென்றவர் யாரோ அல்ல, அலுவலகத்தில் எடுபிடி வேலை பார்க்கும் அமலாதான். கேழ்வரகிலும் நெய் கடைகிறவள். தேனீர் வாங்கிவருதல், மேசை நாற்காலிகளைத் துடைத்தல், சாப்பாடு எடுத்துவருதல்,… அவரது அவளது வேலை என்றாலும் அலுவலக அந்தரங்களைக் கறத்தல் அவளுக்குப் பிடித்த வேலையாக இருந்தது. எப்பேர்ப்பட்டவரின் இரகசியத்தையும் ரேடார் கண்களால் துல்லியம் பிசகாது கறந்து உரிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறவர்.

சாந்தினி, அலுவலகக் கடிதங்களை எழுத்துருவாக்கம் செய்யும் கணினி தட்டச்சு ஊழியர். இருபத்து ஐந்து வயதிற்குள் அகப்பட்ட பட்டதாரி. குறைந்த சம்பளத்தில் தினக்கூலியில் வேலை பார்க்கும் வறுமை நிற சிவப்பினப் பெண். சேலைகளாக உலாவும் அவ்வலுவலகத்தில் சுடிதார் தரித்தவர் அவர் மட்டும்தான். விரல்கள் பத்தும் அவரது மூலதனம். அவர் மீதுதான் சுதாகரன் சாடைக்கண் வைத்திருந்தான். அவரது நடை, உடையை தானியங்கி கண்ணால் கண்காணித்தான்.

ஏழைக் குடும்பம். சக்கரங்கள் அப்படியும் இப்படியுமாக அலாவும் மிதிவண்டியில் அலுவலகத்திற்கு வரக்கூடியவர் சாந்தினி. அவர் அலுவலகத்திற்குள் நுழைகையில் அவரது முகத்தில் வியர்வை வழிந்து நெழியும். ஒன்றாம் தேதியானால் தவறாது சம்பளம் வாங்கிவிடுபவர்களெல்லாம் அலுவலக நேரத்திற்குப் பின்னே வர, சாந்தினி குறித்த நேரத்திற்கும் முன்னதாகவே வந்துவிடக் கூடியவர். அவர் அலுவலகத்திற்கு வந்த பிறகே கையடக்க சிற்றுண்டி பாத்திரத்தைத் திறப்பார்.

சுதாகரன், சாந்தினிக்கு அப்பா வயதை ஒத்தவனாக இருந்தான். மீசை நரைத்து உச்சந்தலையுடன் கூடிய முன் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. நரையில் கருப்பு மை பூசி ஓரளவான இளமைக்குத் திரும்பியிருந்தாலும் பற்களின் வெற்றிலைக் கறையும் மங்கிய கண்களில் துருவேறிய மூக்குக் கண்ணாடியும் அவனது வயதைப் பத்து வயது குறைத்து இரு மடங்கில் பெருக்கிக்காட்டியது.

ஒரு நாள் சாந்தினி அவருக்கு வந்திருந்த அழைப்பில் அவருக்கு நெருக்கமான தோழியிடம் மனந்திறந்து பேசியதை அமலா ஒட்டுக் கேட்டிருந்தார். அமலா தேனீர்க் குவளைகளை எடுத்து அடுக்கி வைப்பதைப் போல அவரது காதினைச் சாந்தினியின் பக்கம் திருப்பினார். சாந்தினியின் விரல்கள் கணினி எழுத்துருக்களில் தவழ, அலைபேசியை இடது பக்கக் காதினில் வைத்துக்கொண்டு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து அவருக்கேற்பட்ட அவமானத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“பார்க்கத்தான் நான் பால், கொதித்தால் திராவகம்” எனும் வாக்கில் அவரது பேச்சு இருந்தது. “வேலை, பெரிய வேலை. இந்த வேலையை விட்டா எனக்கு வேற வேலை கிடைக்காதுபாரு… இவன்கள இப்படியே விட முடியாது. இவன்களுக்கு நானென்ன கசாப்புக்கடை கறித்துண்டா, என்னை யாரு என்ன நினைச்சாலும் பரவாயில்ல. மீடு பக்கத்தில எனக்கு ஏற்பட்ட அவமானத்த என்னோட பேஸ்புக்ல பதிவிடத்தான் போறேன்….” என்றதும் அமலாவிற்குத் தேவையான தகவல் கிடைத்துவிட்ட திருப்தியில் தலையை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டார்.

அமலாவின் நடை வழக்கத்திற்கு மாறாக மாறியிருந்ததை சுதாகரன் கணித்திருந்தான். பெண்ணின் ஒவ்வொரு அசைவிற்கும் பின்னேயும் ஒரு காரணக்காரியமிருக்கிறது, என்பது அவனது நீண்ட நாட்களுக்கும் முந்தைய கண்டுபிடிப்பு. முன் வழுக்கையை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு அமலாவை அருகினில் அழைத்துக் கேட்டான். “ என்ன நடப்புச் செய்தி?” அவனது கேள்வியில் கேலியின் குருத்து இருந்தது. அப்படியாக அவன் கேட்டதில் அமலாவிற்கு வியப்புத் தட்டியது. செய்தியைக் கறந்திருந்த சற்றேநேரத்திற்குள் இதை அவன் கேட்டிருந்தான். ஒரு வேளை சாந்தினி பேசியது இவருக்கும் கேட்டிருக்குமோ! எப்படி கேட்கும்…? சாந்தினி கண்ணாடியால் சூழப்பட்ட அறைக்குளிருந்தபடியல்லவா பேசினாள். அவளது வாய் அசைவுகளை வைத்து ஊகித்திருப்பாரோ?

அமலா, ஒரு முறை தன்னைச் சுற்றி ஒரு பார்வை பார்த்துக்கொண்டாள். இணைய கோபுரம் சமிக்ஞை கிடைத்ததும் தேங்கிக்கிடந்த செய்திகளெல்லாம் புலனத்தில் மளமளவென இறங்குவதைப் போல அவனது காதிற்குள் செய்தியைக் கொட்டினார். அச்செய்தியை உள்வாங்கிக்கொண்ட அவனுக்கு அமலாவிற்கும் கூட மீ டு பற்றித் தெரிந்திருக்கிறதே…என்பதை விடவும் தன் பெயர் அதில் இடம் பெறப் போகிறது என்கிற பயம்தான் பதற்றமாக நெஞ்சுக்குள் குதித்தது.

கொஞ்ச நாட்களாகவே அலுவலகம் பதற்றமாகவே இருக்கிறது. இதுநாள் வரைக்குமில்லாது உயரதிகாரி ஒருவர் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து செல்வதுதான் அதற்குக் காரணம். இந்தப் பதற்றம் போதாது என்று மீடூ வேறா? அவனது உள்ளுதடுகள் பதற்றத்தால் வறட்சியில் காயத் தொடங்கின.

சாந்தனி, அந்த அலுவலகத்தில் கணினிப் பெண்ணாக பணியேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. அதற்குள் அவரது முகநூல் பக்கத்தில் மீடுவாக இடம் பெறும் அளவிலான செய்கையில் இறங்கியிருந்தான் சுதாகரன். “பீடி பற்ற வைக்கணும் தீப்பெட்டி இருக்கா…” என ஓர் அலட்டலுமில்லாமல் கேட்டுவிடும் சாமார்த்தியம் கொண்டவனாகத்தான் சுதாகரன் இருந்தான். எந்தப் பெண்ணாக இருந்தால் என்ன, அவனுக்குப் பிடித்தவராக இருந்துவிட்டால் போதும். உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கா எனக் கேட்டுவிடுவதைப்போல கேட்டுவிடுவான் “என் மனசில நீங்க இருக்கீங்க, உங்க மனசில நான் இருக்கேனா?”. இப்படித்தான் அவன் தன் பேச்சைத் தொடங்குவான். அப்படியாகத் தொடங்குகையில் சின்னதாக ஒரு சிரிப்பு. உதட்டுச் சுழிப்பு. சாந்தக் கண்களில் காந்தமாக அனல் எரிந்திடும். எதையும் சிரித்துக்கொண்டே கேட்டுவிடும் வாயும் நாக்கும் பற்களும் அவனுக்கு இயல்பாகவே இருந்தது. இப்படியாகக் கேட்டுவிடும் வாய்ப்பு சாந்தினி விசயத்தில் அவ்வளவு எளிதில் வாய்த்துவிடவில்லை. அவரைக் கவரும்படியான நளினத்தில் அவன் இறங்கினான்.

அவனது கேட்டலிலிருந்த நரகல் தனத்தை அவனது பற்கள் சிரித்து மழுப்பியிருந்தது. கீழ்மையில் வழியும் எச்சிலை அவனது கைக்குட்டை இலாவகமாகத் துடைத்து மறைத்திருந்தது. அவனது ஆடை அலங்காரமும் உதடுகளில் நளிந்த அதரங்கமும் மோதிரங்களின் மினுமினுப்பும் அவனது கேட்டல் தவறல்ல, இதுவொரு நவீன நாகரிகமென தூக்கிப்பிடிக்கும் வேலையைச் செய்திருந்தது.

சாந்தினியை அவன் ஓய்வறையிலிருந்து வெளியேறும் சமயத்தில் முதலில் நெருங்கியிருந்தான். ஒரு பூனையிடம் சக பூனை நெருங்குவதைப் போலவே நெருங்கினான். காதினில் அலைபேசியை வைத்துகொண்டு எங்கேயோ வேடிக்கை பார்ப்பதைப் போல பார்த்து பேசிக்கொண்டு அவரை உரசியிருந்தான். உரசலுக்குப் பிறகு சின்னதாக ஒரு சிரிப்பு. பதிலுக்குச் சிரித்தால் சிரிக்கும்படியான உதடுகளின் விரிப்பு. ஒருவேளை சிரிக்கவில்லையென்றால் மன்னிப்பு கேட்டுவிடுவதைப் போன்ற முகத் தவிப்பு. இத்தனையுமான நவரச முகங்களைக் கொண்டவன் அவன்.

சுதாகரனின் தீண்டலில் சாந்தினி சிரிக்கவில்லை. முறைக்கவுமில்லை. சிரிப்பும் முறைப்புமில்லாத அவரது பார்வை அவனை என்னவோ செய்திருந்தது. திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்த அவன் தன்னை அவள் திரும்பிப் பார்க்கிறாளா, எனப் பார்த்தான். அவர் பார்க்கவில்லை. விரலுக்கும் மேல் தனக்கு வேலை இருக்கிறது என்பவராக அவர் கணினியில் மூழ்கிப்போயிருந்தார்.

சுதாகரனின் அடுத்த எதிர்கொள்ளல் வேறொரு விதமாக இருந்தது. உதடுகளில் நெளிப்பு, கண்களில் ஒரு விதமான கெஞ்சல். இமைகளில் பயம். செயற்கையாக வெட்கத்தை முகத்தில் வடித்துக்கொண்டு சாந்தினியைப் பார்த்தான். அவர் மீதான மோகத்தை இமை வரைக்குமாக ஏற்றி, காமத்தைக் கண்களில் கனலாகக் காட்டி, ஓநாய் வாநீர் வடிப்பதைப் போல எச்சில் ஒழுக, விரல்கள் பரபரக்க, உடம்பை அப்படியும் இப்படியுமாக வளைத்து, முடிகளைக் கோதிவிட்டுக்கொண்டு, ஒரு வளைவு வளைந்து , குடைந்து, அவரது உதடுகளை அவனது கண்கள் பார்க்கக் கேட்டிருந்தான். கேட்டவன் அதே இடத்தில் நின்றிருக்கவில்லை. ஒரே இடத்தில் நிற்கும் படியான வேலையையா அவன் செய்திருந்தான். இந்திரன் குசும்பை அல்லவா அவன் நிகழ்த்தி முடித்திருந்தான். அவன், இருக்கைக்கும் ஓய்வு அறைக்குமாக நடந்தான். ஓய்வு அறையில் மீசையை நீவுவதும் முகத்தைக் கழுவுவதும் வாசனை பூச்சை அடிப்பதும் அவனது பையைத் திறந்து சென்ட் பாட்டிலை எடுத்து கையைத் தூக்கி இரு பக்க அக்குள்குள் அடித்துக்கொண்டு தொண்டையைச் செருமிக்கொண்டு சாந்தினியின் பார்வைக்குப் படும்படியாக அவரது இருக்கைக்கு நேரே மேசையை இழுத்துக் கிடத்திக்கொண்டு நாற்காலி நெட்டி பறிக்கும்படியாக குலுங்கி உட்கார்ந்தான். உட்கார்ந்தவன் கோப்புகளை வரிசையாக அடுக்கி தலை குனிந்து, கீழிமைக்குள் விழிகள் சொருக சாந்தினியை ஒரு பார்வை பார்த்தான். சாந்தினி அவனது பார்வையை ஒரு பொருட்டென கருதாமல் தலையை நிமிர்த்தாமல், ஒரு முறைப்பு முறைக்காமல் சாவியால் இயங்கும் ரோபோ பெண்ணைப் போல ஒரே சீரான வேகத்தில் கணினியில் இயங்கிக்கொண்டிருந்தார்.

அடுத்தடுத்து எத்தனையோ சந்திப்புகள். எதிர்கொள்ளல், பார்த்தல், சிரித்தல்,…சாந்தினியிடமிருந்து கனத்த மவுனமே பதிலாக வந்தது. மவுனம் சம்மதத்தின் அறிகுறி என்பதாக சுதாகரன் புரிந்து கொண்டான். அதை நினைத்தே அவரை மனதிற்குள் உருட்டினான். அவனது உருட்டலில் சாந்தினி தெங்கம்பழமாகிப் போனார். அவரது மவுனமும் எதையும் அலட்டிக்கொள்ளாத இருப்பும் மீடூ வில் வந்து நிற்குமென அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சாந்தினி எடுத்திருக்கும் முடிவை அமலா அவனது காதிற்குள் கொட்டியதும் கொதிக்கும் நீருக்குள் விழுந்திட்ட ஆமையைப் போலாகியிருந்தான். இப்பொழுதுதான் அவனுக்கு வீடொன்று இருப்பது நினைவிற்கு வந்தது. தன்னை விடவும் பத்து வயது குறைவான மனைவி நினைவிற்கு வந்தாள். பருவ மகள்கள், மகன், மாமனார், மாமியார் … என்று பலரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டின் முற்றம் வரைக்குமாக வந்து ஏன் இப்படியெல்லாமா செய்தீர்கள்? எனக் கேட்பதைப் போலிருந்தார்கள். அவனது வேலையும் பதவி உயர்வும் ஓய்வுக்காலமும் பென்சனும் நினைவிற்கு வந்தன.

சுதாகரன் தனக்கென்று ஒரு முகநூல் பக்கம் வைத்திருந்தான். அதில் பலரும் கலாய்க்கும் படியான மீம்ஸ்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தவன். இது தவிர இரண்டு வாட்ஸ்அப் குழுவிற்கு அட்மினாக இருந்தான். இத்தனையும் இருந்து தானும் தன் பெயரும் மீடூவில் பகிரப்பட்டால் தானும் தன் பெயரும் என்னாகுமென்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். சீண்டல்களில் பலரின் பெயர் அடிபடுகையில் சிரிக்க, குதூகலிக்க, பகிர, லைக், கமெண்ட் கொடுக்கவென இருக்கக் கூடியவன் சுதாகரன். இரண்டு மூன்று படங்களை எடுத்துவைத்துகொண்டு மீம்ஸ் வேறு எழுதுகிறவன். அவன் எழுதிய மீம்ஸ் ஒன்று பிரபல வார இதழில் வந்து பலரின் பகிர்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஒரு வேளை தன் பெயர் மீடூவில் அடிப்பட்டால் அது எப்படியெல்லாம் கேலிக்கும் பகிருதலுக்கும் உள்ளாகும் என்பதை நினைக்கையில் அவனுக்கு ஜன்னி எடுத்தது.

# சாந்தினி, மீடு சுதாகரன். இப்படியாக முகநூலில் பதிவிடப்பட்டால் என்னாகுமென்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். அதை நினைக்கவே அவனது தலை இணைய உருண்டையைப் போல உருண்டது. வியர்க்காத உதடுகளும் வியர்த்தன.

முகநூல் பகிர்வு இத்துடன் முடிந்துவிடப்போவதில்லை. இது மனைவிக்குத் தெரிய நேர்ந்தால் என்னாகுமென்று நினைக்கையில் அவனது உள்ளத் தடாகம் ஆட்டம் கண்டது. மேலும் மகள்களுக்குத் தெரிந்தால் அவர்களின் படிப்பும் தன் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையும் அன்பும் என்னாகும், என்பதையும் நினைத்தான். அப்படியாக நினைக்கையில் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. படபடப்பு கூடியிருந்தது. எப்பொழுது விழித்தாலும் அவன் முதல் வேளையாக சாந்தினியின் முகநூல் பக்கத்தைப் பார்வையிடுவதாக இருந்தான்.

“ ஏன் ரெண்டு நாளாகவே ஒரே இறுக்கமாக இருக்கீங்க…?” மனைவி கேட்டிருந்தாள்.

“ இல்லையே, நல்லாதானே இருக்கேன்…”

“ ஏங்க , இருபது வருஷமா உங்கக் கூட குப்பைக் கொட்டுற எனக்குத் தெரியாதா…?”

சுதாகரனின் தண்டுவட முடிச்சு மெல்ல அவிழ்வதைப் போலிருந்தது.

“ ஆமாம், அது யாருங்க சாந்தினி?”

முதல் கேள்வியைப் போல மறுகேள்வியை அவனால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

அவளது கேட்டலில் மேசையிலிருந்த தேனீர்க்குவளை தவறி நாலாபுறமும் துளிகள் சிதறின.

“யா..யா…யாரது சாந்தினி…?” அவனது உதடுகள் குழறின.

“என்னங்க, நான் உங்களக் கேட்கிறேன். நீங்க என்னையக் கேட்கிறீங்க?” என்றவள் சிரித்தாள்.

“தெரியலையே யாரு…?” அவனது கண்கள் அன்றைய தினசரியைத் தேடின. மனைவி அவரைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்திருந்தாள்.

சாந்தினியை இவளுக்கு எப்படித் தெரியும்? ஒரு வேளை சாந்தினி என்னைக் குறித்து முகநூலில் எழுதிவிட்டாளோ! அவனது கை வேகமாக அலைபேசியைத் துழாவி முகநூல் பக்கத்திற்குள் நுழைந்தது. அவளது பக்கம் இரவு பார்த்துவிட்டு வைத்த பக்கத்திலேயே இருந்தது. இவளது பக்கத்தை நான் பார்த்ததை என் மனைவி ஒருவேளை கவனித்திருப்பாளோ? அப்படியாக கவனிக்கும் பழக்கத்தை இதுநாள் வரை ஒரு பழக்கமாக அவள் கொண்டிருக்கவில்லையே! அவளது பெயர் இவளுக்கு எப்படியாம் தெரிய வந்தது? இது குறித்து கேட்கக்கூடாது என்றுதான் நினைத்தான். ஆனால் அவனையும் அறியாமல் ஒரு கேள்வி வந்து விழுந்தது. “ ஆமாம், யாரு சாந்தினி…?”

அவனது கேள்வி மனைவியின் காதினில் விழவே செய்தது. ஆனால் அவள் நீண்ட நேரத்திற்குப் பிறகே பதில் சொல்லியிருந்தாள். “ எனக்கென்ன தெரியுமாம், நீங்கதானே ராத்திரி சாந்தினி, சாந்தினினு முணங்கிக்கிட்டிருந்தீங்க…”.

இதை அவள் சொல்கையில் அவனது உடம்பு வியர்த்து, அவன் பருகிய தேனீர் புரை ஏறியது. ஆனால் சுதாகரன் தன்னை முறை சுதாரித்துக்கொண்டு பதில் சொன்னான் “ அப்படியாகவா சொன்னேன். சாந்தம் நீ, என்பதை அப்படியாகச் சொல்லியிருப்பேன்…” என்றதும் சமையலறை பாத்திரங்கள் உருளத் தொடங்கின. பாத்திரங்கள் உருள்வது தன் மீதான வெறுப்பின் வெளிப்பாடு என்பது அவன் ஒன்றும் அறியாதவனில்லை.

வீட்டிற்குளிருக்கும் வரைக்கும் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அலுவலகத்திற்குள் நுழைகையில் படபடப்பு கூடியிருந்தது. அவனுக்கு எதிரே அவர். அவருக்கு எதிரே இவன். எதிரே உட்கார்ந்திருப்பது எதிரியாள் உட்கார்ந்திருப்பதைப் போலிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். வணக்கம் இல்லை. சிரிப்பு இல்லை. சின்னதாக ஒரு நல விசாரிப்பு கூட அவர்களுக்கிடையில் இருந்திருக்கவில்லை. அவன் உட்கார்ந்திருக்கும் இருக்கை சுமையாக கனத்தது.

“ சாந்தினி…” மெல்ல அழைத்தான். ஏன் அழைத்தேனென்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சாந்தினியின் கைகள் கணினியில் இயங்க மெல்லத் திரும்பிப்பார்த்தார்.

“ குட் மானிங்க் சாந்தினி…”

சாந்தினி பதிலுக்கு வணக்கம் சொல்லவில்லை. முகம் பழையபடி இறுக்கமாகவே இருந்தது. பின்புறம் தொங்கிக்கிடந்த பின்னலிட்ட கூந்தலை அப்படியும் இப்படியுமாக எடுத்துவிட்டு முகத்தில் கோபம் கொப்பளிக்க உட்கார்ந்திருந்தார். அந்நேரம் பார்த்து அவருக்குத் திரும்பவும் ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை அவர் சட்டென எடுத்துவிடவில்லை. அதைப் பார்த்தபடியே இருந்தார். பிறகு எடுத்து காதினில் வைத்தபடி இறுக்கமானார். அவர் அமைதியாகத்தான் இருந்தாரே தவிர அவரது முகம் கோபத்தால் வெந்து குழைந்து கொண்டிருந்தது. தொடர்பு துண்டித்ததும் அவரது விரல்கள் அலைபேசிக்குள் நுழையவும் வேகமாக இயங்கவும் செய்தன.

அவன் வேகமாக அலைபேசியை எடுத்து சாந்தினி பக்கத்திற்குள் சென்று பார்த்தான். சாந்தினி, அவளது முகநூல் பக்கத்தில் மீடூ பதிவிட்டிருந்தார். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீடூவில் அவனது பெயர் இருந்திருக்கவில்லை. பதிலாக அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து போகும் உயரதிகாரியின் பெயர் இருந்தது. அவர் பதிவிட்ட அடுத்த நொடியிலிருந்து பின்னூட்டங்கள் விழத் தொடங்கின. அத்தனையும் கண்டனப் பதிவுகள்.

சுதாகரனுக்கு உட்சுவாசம் வெடித்தது. அதேநேரம் அவன் அவமானமாகவும் உணர்ந்தான். நானும் தானே அவளைப் பாலியல் ரீதியில் நெருங்கியிருந்தேன். தொல்லை கொடுத்தேன். என் பெயர் ஏன் அவளது மீடூவில் இல்லை, என்கிற கேள்வி அவனைத் துளைத்தது. என் படிப்பை அவளது படிப்புடன் ஒப்பிட்டு பார்த்திருப்பாளோ? அவளது அழகிற்கு முன் நான் வெறும் குப்பையாகத் தெரிந்திருப்பேனோ? அவளுக்குத்தான் என்னவொரு திமிர். என்னை எப்படியாக அவமதித்திருக்கிறாள்? என் கறுப்பும் நரைப்பும் அவளுக்கு கீழ்த்தனமாகத் தெரிந்திருக்கிறது! என் படிப்பையும் என் கிரேடையும் என் சாதியையும் அவள் நுகர்ந்து பார்த்திருக்கிறாள். இதற்காகவா நான் இத்தனை நாட்கள் தன்னிலை மறந்து திரிந்தேன்.

ஒருவேளை மீடு பக்கத்தில் அவனது பெயர் இடம் பெற்றிருந்தால் கூட இப்படியாக அவன் கலவரப்பட்டிருக்க மாட்டான். இத்தனை நாட்கள் எதிர்பார்த்து, அதற்காகவே தூக்கத்தை இழந்து, மனதில் படபடப்பு கூடி, நிம்மதியிழந்து பேயறைந்தவனைப் போல தவித்து திரிகையில் இவன் பெயர் இல்லையென்றால் எப்படியாம்?. அவனால் ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை. அவமானம் அவரைப் பிடுங்கித் தின்றது. அவளை அழைத்துக் கேட்டுவிட்டால் என்ன, என்று கூட நினைத்தான். எப்படி கேட்பது? இதில் ஏன் என் பெயரில்லை என நேரடியாகக் கேட்டுவிட முடியுமா? வேண்டாம்! என்னை அவள் மன்னித்திருக்கலாம். என் ஓய்வு வயதைக் கருத்தில்கொண்டு விட்டுத் தொலைத்திருக்கலாம்.

மெல்ல எழுந்து சாந்தினியின் முகத்தைப் பார்த்தான். அவர் கணினி விசைப்பலகையில் முகத்தைப் புதைத்து உடல் குலுங்கிகொண்டிருந்தார். அவரது குலுங்கலில் குழந்தையின் துடிப்பு தெரிந்தது. அவரது பக்கத்தில் தன் சார்பில் ஒரு பின்னோட்டம் பதிவிட நினைத்தான். நானும் கூடத்தான், என்று பதிவிட தோன்றியது. சற்றுநேரம் முகநூல் பக்கத்தைப் பார்த்திருந்தவனின் விரல்கள் எழுத்துகளில் ஊர்ந்தன.

“என் பெயர் இதிலில்லை என்பதற்காக நான் தூயவன் என்றாகிவிடாது”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *