நடுகைக்காரி!… 53 …. ஏலையா க.முருகதாசன்.

![]()
ஞானம் காய்ச்சலுக்காக உரசிக் கரைச்சுக் குடிச்ச மருந்தின் மணத்தையே தாயார் அது கடுக்காய்ப பேதியின் மணமோ எனச் சந்தேகத்துடன், அது எப்படி தனது அறையில் மணந்தது என்பதையும், குப்பைக்குள் கிடந்த சிரட்டையில் மணந்த மருந்தின் மணத்தை அது கடுக்காய்ப் பேதியின் மருந்துதான் எனச் சிரட்டையுடன் வந்து தானும் அப்பாவும் இந்தப் பேதி மருந்தைக் குடிக்காத போது….
….கடவுளே அப்படியாக இருக்குமோ எனத் தாய் தேவையில்லாத கற்பனையால் அரண்டு போயிருப்பதை எண்ணிய புஸ்பகலா, கன்னங்கள் இரண்டிலும் கைகள் இரண்டையும் வைச்சபடி நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனசில் தனது எதிர்காலம் எப்படி இருக்கப் போகுதோ என்னவெல்லாவற்றையும் சந்திக்கப் போகிறேனோ தெரியாதே எனக் கலங்கத் துடங்கினாள்.
„உனக்கு காதல் கீதல் எதுவுமில்லைத்தானே „ என்றதும்,’உன்ரை கையிலேதான் எங்கடை குடும்பத்தின்ரை மானம் மரியாதை அடங்கியிருக்குதடி’ என்றதும், „நீ எடுப்பாக அழகாக இருப்பதுதானடி இன்னும் பயமாயிருக்குது என்றதோட இந்தக் காலத்து ஆம்பிளைப் பிள்ளையளும் பொம்பிளைப் பிள்ளையளும் வீட்டிலை இருக்கிற போது நல்ல பிள்ளைமாதிரி இருக்கினம் வெளியிலை எப்படி இருக்கினம் என்றே தெரியேலை „ என்று தாய் சொன்னவிதம்,தன்னையும் தாய் கொஞ்சம் ஐமிச்சத்துடந்தான் பார்க்கிறார் என்பதைப் புரிஞ்சு. கொண்டாள்.
தான் சொன்ன பதிலில் தாய் அப்போதைக்குத் தற்காலிகமாகத் திருப்திப்பட்டாலும் முழுமையாகத் தன்னை நம்பவில்லையென்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
அதனாலைதான் கதவடிவரை போன தாய் திரும்பி வந்து „ உனக்கு மென்சஸ் வர எத்தனை நாள் இருக்குது’ என்று கேட்டிட்டுப் போயிருக்கிறார்,தாய் தன்னை ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் கேட்கப் போறாரோ எனச் சங்கடப்பட்டாள்.
பொம்பிளைப் பிள்ளையளை வைச்சிருக்கிற தாய்மார் தன் தாயைப் போலத்தான் இருப்பார்களோ என நினைச்ச புஸ்பகலா தான் ஞானத்திலை வைச்சிருக்கிற காதல் நிறைவேறுமா,ஞானம் இல்லாவிட்டால் நான் செத்திடுவேனே எனத் துடிச்சாள்.
ஆரம்பத்தில் ஞானம் என்மீது எந்த அக்கறையும் கொள்ளாமல் இருந்தான்.அவன் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அது மெல்லக் காதலாக மாறிய போதுகூட அவன்’ நீ எனது வகுப்புத் தோழி,சக மாணவி அந்த நட்புத்தான் உங்களிடம் எனக்கு இருக்கின்றது அதைத் தாண்டி எனது மனசில் எதுவும் இல்லை,எதுவும் தோன்றவில்லை’ என்றான்.
எனது அழகைப் பற்றியும் நிமிர்ந்த எடுப்பான தோற்றத்தை வர்ணித்து எனது தோழிகள் சொல்லியிருக்கிறார்கள்.எனது உறவினர்கள்கூடச் சொல்லியிருக்கிறார்கள்.
நான் எனது வீடு நோக்கி வீமன்காமம் ஒழுங்கையால் போகும் போதுகூட ஆம்பிளைப் பிள்ளையள் எதிர்த்திசையில் வருகையில்’ அங்கை பாராடா நடிகை ஜமுனா வாறா’ என்று என்னை நடிகை ஜமுனாவுடன் ஒப்பிட்டுச் சொல்வதைக் கேட்டு நான் உள்ளுக்குள்னை சந்தோசப்பட்டிருக்கிறன்.
மகாஜனக் கல்லூரியில்கூட தேத்தண்ணி இடைவேளையின் போதும் மத்தியானச் சாப்பாட்டு இடைவேளையின் போதும் தண்ணீர் குடிப்பதற்கு பைப்படிக்குப் போகும் போதெல்லாம்,என்னைக் கண்டதும்’டேய் காங்கேசன்துறை இராஜநாகித் தியேட்டரில் ஜமுனா நடிச்ச படம் ஓடுது பார்க்கப் போகலையா „என்று வேறை வகுப்பு மாணவர்களே எனக்குக் கேட்கத்தக்கதாகச் சொல்லக் கேட்டு மகிழ்ந்திருக்கிறன்.
ஆனால் ஒரு போதும் எனது அழகு ஞானத்;தைக் கவர்ந்ததாக அவன் காட்டிக் கொள்ளவே இல்லை.’நீ என்ன பெரிய அழகா’ என்பது போன்ற ஒரு அலட்சியமான பார்வையும் திமிரும் அவனுக்கு இருந்தது.
ஆனால் அவன் மீது எனக்கு நாளுக்கு நாள் காதல் வளர்ந்ததேயன்றி அவனின் திமிரைப் பார்த்து எனக்குக் கோபம் வரவில்லை.அது அவனுக்குக் கூடுதலான கம்பீரத்தைக் குடுத்தது.அது எனக்குப் பிடிச்சிருந்தது.
அப்படிப்பட்ட ஒருவனே என்னைக் காதலிக்கத் தொடங்கி காய்ச்சலுடனும் என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று வகுப்புக்கு வந்ததை நினைச்சு அவள் அவனைக் கனிவோடு நினைச்சான்.அவனோடு எனது எதிர்காலம் இருக்க வேண்டும் என்று உருகினாள்.
ஆனால் அவளின் தாயார் எமது குடும்பத்துக்கு காதல் என்பது கேடு என்று சொல்லியதை நினைச்சுக் கலங்கினாள்.தான் அழுவதையோ,அழுத சாயலையோ தாயார் கண்டுகொள்ளக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.
ஞானம் லோவர் பிறப் படிக்கும் போதே நீலலோஜினியின் தலையில் பூ செருகியதை புஸ்பகலா இரண்டு மூன்று நாளைக்கு முன்புதான் அறிஞ்சிருந்தாள்.
நீலலோஜினியும் நல்ல வடிவானவள்தான்,அவளுடைய சொண்டு எப்போதுமே றோஸ் கலராக இருக்கும்.என்னைவிட அவள் நிறமானவள்.நான் பொதுநிறம்.
ஞானம் நீலலோஜினியிடம் எந்தவிதமான ஈர்ப்பையும் இதுவரை காட்டவில்லை.
அருந்ததியின் சினேகிதிகள் நீலலோஜினக்கும் ஞானத்தில் ஒரு கண் இருப்பதாகச் சந்திரகுமாரியிடம் சொல்ல அதைச் சந்திரகுமாரி தன்னிடம் சொன்னதை நினைச்சும் அவள் தடுமாறினாள்.
ஒரு சிரட்டையும் மருந்து வாசனையும் அம்மாவைப் பல விசயங்களை யோசிக்க வைச்சுவிட்டது.எல்லாச் சுதந்திரமும் இருக்கின்றது.ஆனால் காதலுக்கு மட்டும் தடை.ஒரு வருடத்துக்கு ஒருமுறை அப்பா புதுச் சைக்கிள் வாங்கித் தருகிறார்.மாசத்தில் ஒருமுறையாவது அப்பாவும் அம்மாவும் படத்துக்குக் கூட்டிக் கொண்டு போகிறாhர்கள்.
படம் முடிஞ்சதும் ராஜா கிறீம கவுசில் ஐஸ் கிறீம் வாங்கித் தருவதிலிருந்து சுபாஸ் கபேயில் சாப்பாடு என நானோ அக்காவோ கேட்காமலே எல்லாவற்றையும் அப்பாவும் அம்மாவும் செய்தார்கள்.
நல்ல சாப்பாடு, நல்ல உடை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவங்கள் என எல்லாமிருந்ததால்தான் தாங்கள் இரண்டு பேரும் அழகாகவும் பூரிப்பாக இருப்பதற்குக் காரணம் என அக்கா பலமுறை சொன்னது மட்டுமல்ல,அப்பா அம்மாவின்ரை மனம் நோகாமல் நாங்கள் இரண்டுபேரும் நடக்க வேணும் என்று அடிக்கடி சொல்லுவார்,தமக்கை சொன்னதையும், நாங்கள் ஒன்றும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.அப்பா காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலையில் புகைதின்று உழைக்கிறாரடி,சாபபாட்டைவீணாக்காமல் சாப்பிடுங்கள் என்று தாயார் பலமுறை பிள்ளைகளுக்கு சொல்லியதையும் நினைச்சுப் பார்த்தாள்.
தமக்கை யாரையும் காதலிக்கவில்லை,ஆனால் யாராவது தமக்கையைக் காதலித்தார்களோ தெரியாது,இல்லாட்டில் தமக்கைக்கும் காதல் வந்து அதை முளையில் கிள்ளி எறிந்தாளோ தெரியாது.
இப்படியெல்லாம் யோசித்தவளின் மனசில் ஒரு பொறியாக ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.
புஸ்பகலாவின் தகப்பனின் தங்கையின் வீடு இவையின்ரை வீட்டுக்கு ஐஞ்சு வீடு தள்ளி ரயில் றோட்டோடு இருக்கிறது.அந்த வீட்டில் ஐஞ்சு வருடங்களுக்கு முன்பு ஒரு துயரமான சம்பவம் நடந்தது.
புஸ்பகலாவின் மைத்துனி இராஜமனோகரி அப்பொழுது கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவளுக்கும் அங்கு படித்த ஒரு இளைஞனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டது.
மூன்று வருடங்களுக்கு மேலாக இந்தக் காதல் தொடர்ந்த போது அந்த இளைஞன் தன்னைக் கல்யாணம் செய்வான் என்ற நம்பிக்கையில் ஒரு நாள் இராஜமனோகரி அந்த இளைஞனிடம் தன்னை இழந்துவிட்டாள்.அப்பொழுதெல்லாம் காதலிப்பவர்கள் அரிதாகவே தனிமையில் சந்திப்பார்கள்.
ஆனால் அச்சுவேலியைச் சேர்ந்த அந்த இளைஞன் இராஜமனோகரியைச் சந்திக்கு வந்த போது,அவளின் பெற்றோர் மாவிட்டபுரம் கநதசுவாமிக் கோவிலில் நடந்த கந்தசஸ்டிக்குப் பூசைக்குச் சென்றதால் அவள் மட்டுமே வீட்டில் இருந்தாள்.
அந்தத் தனிமைதான் அவர்கள் இரண்டு பேரும் பின்விளைவுகள் எதையுமே யோசிக்காமல் தவறு விடுவதற்குக் காரணமாகிவிட்டது.
சரி தவறு என்ற இரண்டுக்குமிடையில் முடிவெடுக்க முடியாத நிலையில் நடந்து முடிந்த அந்தச் சம்பவத்தால் இராஜமனோகரி நிம்மதியிழக்கத் தொடங்கினாள்.
அவசரப்பட்ட தனது தவறை யாரிடமும் சொல்ல முடியாமல் கலங்கிய அவள் பயந்தது போலவே அதுவும் நடந்தது.
அவளுக்கு வரவேண்டிய மென்சஸ் வரவில்லை.அப்பொழுதெல்லாம் மென்சஸ் காலங்களில் பொம்பிளைப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக மாட்டார்கள்.
வேலைக்குப் போகும் பெண்களும் இக்காலங்களில் வேலைக்குப் போக மாட்டார்கள்.
மென்சஸ் வரவேண்டிய நாளில் அது வராமல் போக இராஜமனோகரி தொடர்ந்தும் தொழில்நுட்பக் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்தாள்.
தாய் நாளை எண்ணி மகளைத் துருவித் துருவிக் கேட்ட போது அது பிந்தலாம் என்று இராஜமனோகரி சொல்லிக் கொண்டிருந்தாள்.
தனது நிலைமைய அந்த இளைஞனிடம் சொன்ன போது ஓடிப் போகலாம் என்று அவன் சொன்னதால் திடுக்கிட்டுப் போன அவள் ஓடிப் போவதைவிட சாவதே சரி எனத் தவறாக முடிவெடுத்து கடிதத்தை எழுதி வைச்சுவிட்டு ஒரு நாள் காங்கேசன்துறையிலிருந்து காலையில் கொழும்புக்குப் புறப்படும் யாழ்தேவி ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்தாள்.
அவள் யாருக்காவது, நடக்ககிறது நடக்கட்டும் என்று தன் நிலைமையச் சொல்லியிருந்தாள் யாருக்கும் கதை பரவாமல் கர்ப்பத்தைக் கரைத்திருக்கலாம்.அனூல் அந்தத் துணிச்சல் அவளிடம் இருக்கவில்லை.சபலத்தால் நடக்கும் தவறுக்காக ஒரு உயிர் போவதை மானம் மரியாதை என்று சொல்லி விட்டுவிட முடியாது.
வேகமாக வந்த யாழ்தேவி ரயில் மோதியதில் இராஜமனோகரியை தூக்கியெறிந்ததால் அவளின் உயிரற்ற உடல் அவர்களின் வேலிக்கரையோடு போய்க் கிடந்தது.
யாழ்தேவி ரயிலால் ஒரு பெண் அடிப்பட்டதைக் கண்ட சாரதி உடனடியாக ரயிலை நிறுத்த முடியாமல் தெல்லிப்பழைப் புகையிரத நிலையத்தில்தான் அவரால் வேகத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்த முடிஞ்சுது.
ரயிலில் பாய்ஞ்சு இளம் பெண்பிள்ளை தற்கொலை செய்த செய்தியால் தெல்லிப்பழைக் கிராமமே சோகத்தில் மூழ்கியது.இராஜமனோகரியின் தாயும் தகப்பனும் பித்துப் பிடித்தவர்கள் போலானார்கள்.அவமானத்தால் கூனிக்குறுகி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடந்தார்கள்.
தெல்லிப்பழையில் யாழ்தேவிக்கு முன்னால் பாய்ந்து ஒரு பொம்பிளைப்பிள்ளை பாய்ஞ்சு தற்கொலை செய்து கொண்டதாம் என்ற செய்தி வேகமதகப் பரவ அந்த இடத்தில் சனங்கள் குவியத் தொடங்கிவிட்டனர். பரிதாபப்பட்டவர்கள் சிலர்,அந்த துன்பத்தின் தன்மை தெரியாமல் வாய்க்கு வந்தபடி கதைச்சவர்கள் பலர்.
„உங்கை உந்த வீட்டுப் பெட்டைதான் தற்கொலை செய்தது’ என்று வீட்டைக் சுட்டிக் காட்டிப் புதினம் பார்க்க வந்தவர்களில் பலர் கதைக்கத்
தொடங்கினார்கள்;.எல்லாருடைய கண்களும் இராஜமனோகரியின் வீட்டையே சூழ்ந்து நின்றது.
தேத்தண்ணிக் கடை வாசலிலும் சந்தையடியிலும் நின்றவர்கள் தமது மனசில் பட்டதைக் கதைத்துக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாள் ஈழநாடு பத்திரிகையில் தெல்லிப்பழையைச் சேர்ந்த இளம் மாணவி யாழ்தேவி ரயில் முன் பாயந்து தற்கொலை.காரணம் தெரியவில்லை என்று செய்தி போட தந்திப் பத்திரிகையோ தெல்லிப்பழையில் ஒரு அழகான மாணவி யாழ்தேவி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாள்.காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த மாணவி இந்த விபரீத முடிவுக்கு வந்தாள்.அந்தக் காதலன் யார்? ஏன்ற கேள்வியுடன் செய்தியை முடிச்சிருந்தது.![]()
சந்தையில் மீன் வாங்குவதற்காக ஐஞ்சு சதம் குடுத்து தந்திப் பத்திரிகையை வாங்கிச் சென்றவர்கள் மீன் வாங்குவதை விட்டிட்டு புதினத்தை மற்றவர்களுக்கு வாசிச்சுக் காட்டுவதிலேயே மிகுந்த அக்கறையாக இருந்தார்கள்.
இராஜமனோகரியின் தற்கொலைச் சம்பவ வேதனை புஸ்பகலாவின் குடும்பத்தையும் சூழ்ந்து அவர்களையும் ஆட்டிப் படைச்சுது. புஸ்பகலாவின் தகப்பனுக்க இராஜமனோகரி சொந்த மருமகள்.அதனால் அவருக்கு காதலர்கள் மீதே வெறுப்பு வந்தது.’வாய் திறந்து சொல்லியிருந்தால் பொடியன்ரை தாய்தகப்பனின் காலில் விழுறந்தாவது செய்து வைச்சிருப்போமே,இப்படி எங்களை நடுக்கடலில் அந்தரிக்க விட்டிட்டுப் போயிட்டாளே’ என்று தாயும் தகப்பனும் கண்ணீர்விட்டு வாய்விட்டு அழுது கொண்டேயிருந்தனர்.
அந்தச் சோகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தாயும் தகப்பனும் மீண்டுவர இரண்டு வருடங்களாகிவிட்டன.
தன்னுடைய மகளுக்கு நேர்ந்த கதியை நினைச்சுத்தான் மாமியார் கெதியிலை தனக்கு கல்யாணம் செய்து வைக்கச் சொல்கிறாவோ என நினைச்சு யோசிச்சுக்கொண்டிருந்த புஸ்பகலா அவளையறியாமலே நித்திரையாகிவிட்டாள்.
„புஸ்பா எழும்பு சாப்பிட்டிட்டுப் படு’ என்று தாயார் இரவுச் சாப்பாட்டுக்கு எழுப்ப,எழும்பிய புஸ்பகலா’ அம்மா உங்களிட்டை புதுக் கொர்லிக்ஸ் போத்தலிருக்கா,என்ரை வகுப்புத் தோழிக்கு ஒரு கிழமையாய் கடுமையான காய்ச்சல்,நாளைக்கு மத்தியானம் போய் பார்க்கப் போறன் ,அப்ப அவளுக்குக் குடுக்கத்தான் எனக் கேட்க,’ அந்தப் பிள்ளையின்ரை வீடு எங்கை இருக்குது ‘ என்று தாய் கேட்க,கல்லூரிக்கு அருகிலிருக்கும் மேற்கொழுங்கையோடுதான் அவள் வீடு இருக்குது பாக்கியம்மா ரீச்சரின் வீட்டுக்குப் பக்கத்தில் „ என்று பொய் சொல்கிறாள் புஸ்பகலா.
„சரி காலமைக்கு கேள் தருகிறன்’ என்ற தாய் „இந்த மருந்துச் சிரட்டையை ஆர் எங்கடை குப்பைக்குள்ளை எறிஞ்சது என்றுதான் தெரியேலை’ என்ற தாய் மகளை
கீழ்க் கண்ணாலை பார்த்துக் கொண்டே வா சாப்பிட என்று கூட்டிக் கொண்டு போகிறாள்.
புஸ்பகலா தாய்க்குப் பின்னால் அடுப்படியை நோக்கிப் போனாலும் ஞானத்துக்கும் தனக்குமுள்ள காதல் நிறைவேற வேணும் என்று ஏங்கிக் கொண்டேதான் போனாள்.
(தொடரும்)
![]()