கதைகள்

நடுகைக்காரி!… 52 ….. ஏலையா க.முருகதாசன்.

 ஞானத்துக்கும் புஸ்பகலாவுக்குமிடையில் காதல் தொடர்பு இருக்கின்றது என்பது மெது மெதுவாக மகாஜனாவில் பரவிவிட்டது.

எப்பொழுதும் வேறு எந்தச் செய்தியும் மக்கள மத்தியில் மெதுவாக பரவும்.ஆனால் காதல் சம்பந்தப்பட்ட செய்தி ஒளியைவிட வேகமாகப் பரவிவிடும்.

முதலில் இவர்களின் காதல் விவகாரம் ஆசிரியைகளாலும்,ஆசிரியைகளாலும் அவல் கிடைச்சது போல மெல்லப்பட்டாலும், நாளடைவில் அது பழஞ் செய்தியாகி ஆறின கஞ்சியானது.

ஆனால் சுந்தரராஜன் ஆசிரியை மட்டும் ஞானத்தையும் புஸ்பகலாவையும் விமர்சித்துக் கொண்டிருந்தார். அவரின் விமர்சனத்தில் இவர்களைப் பார்த்து மற்றப் பிள்ளைகளும் பழுதாகிவிடும் என்ற வாதாட்டம் இருந்தது.

இது எதைப்பற்றியும் ஞானமோ புஸ்பகலாவோ கவலைப்படவில்லை.காய்ச்சலினால் அவதிப்பட்ட ஞானம் காய்ச்சலுடன் தன்னைப் பார்ப்பதற்காகவே பள்ளிக்கூடம் வந்ததனால் அவன் மீதான அவளின் காதல் இன்னும் ஆழமானது.

பள்ளிக்கூடம் முடிஞ்சதும் ஸ்ராப் றூமின் மேற்குச் சுவரோடு இருக்கும் கல்லூரியின் கேட்வரை செல்லும் பாதையால்தான் ஞானம் நடந்து போய் புத்தகசாலைக்கு எதிராக உள்ள மாமரத்தின் கீழே விட்டிருக்கும் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போவது வழக்கம்.

ஆனால் அன்று புஸ்பகலா „இதாலை வாங்கோ’ என்று ரெனிஸ் மைதானத்திற்கும் தொடர் வகுப்புகள் இருக்கும் இடத்திற்கும் இடையிலிருக்கும் பாதையால் ஞானத்தையும் கூட்டிக் கொண்டு போனவள் ஞானம் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட ஆயத்தமாக, அவளும் தனது சைக்கிளை அங்கிருந்து எடுத்துக் கொண்டே „நாளைக்கு வரவேண்டாம் வீட்டிலை நல்லாய் நித்திரை கொண்டு காய்ச்சலை மாத்திப் போட்டு பள்ளிக்கூடத்துக்கு வாருங்கள் எனச் சொல்ல,’ம்’ என்று மட்டுமே சொல்லி அவனும் புறப்படுகிறான்.

புஸ்பகலா தனது வீடு இருக்கும் வீமன்காமத்தை நோக்கிப் போக ஞானம் தனது வீடு இருக்கும் பன்னாலையை நோக்கி பணடத்தரிப்புக்கச் செல்லும் தெருக்கூடாகப் போய்க் கொண்டிருந்தான்.

புஸ்பகலா தனது வீட்டுக்க வந்து அறைக்குள் போனவள் புத்தகப் பையை மேசையில் வைச்சிட்டு பள்ளிக்கூட உடுப்பை மாத்தியவள் பாவாடை சட்டையைப் போட்டுக் கொண்டு கிணத்தடிக்கு போய் முகம் கழுவிப் போட்டு „அம்மா தேத்தண்ணி „ என்று சொல்லத் தாய் „ தண்ணி வைச்சிருக்கிறன் கொதிக்கட்டும் போட்டுத் தாறன் சுண்டக் கடலை அவிச்சு வைச்சிருக்கிறன் „ என்று சொல்லிக் கொண்டே தனது அறையிலிருந்து வெளிவந்த தாய் கையில் சட்டையும் ஊசி

நூலுடன் „புஸ்பா இந்த நூலைக் கோர்த்துத்தா இந்தச் சட்டையைத்தான் கீரிமலைச் சிவன் கோவிலிலை நடக்கப் போற தம்பிராஜாவின்ரை மகளின்ரை கல்யாண வீட்டுக்குக் போட்டுக் கொண்டு போக வேணும்,கை கொஞ்சம்; இறுக்கமாக இருந்தது,அவிட்டுப் போட்டன் இனித் தைக்க வேணும் „ என்று சொல்ல,’அம்மா நான் தைச்சுத் தாறனம்மா, என்ரை அறைக்குள்ளை வைச்சிட்டு வாம்மா „ என்று புஸ்பா சொல்ல,தாயார் அவளின் அறைக் கதவோடிருந்த மேசையில் எட்டி வைச்சிட்டு அடுப்படிக்குள் வந்தவள் மகளுக்குத் தேத்தண்ணி போட்டுக் குடுத்திட்டு அவிச்ச கொண்டைக் கடலையையும் சின்னச் சருவச் சட்டிக்குள் போட்டுக் குடுக்க புஸ்பகலா விறாந்தைப் படியிலிருந்து தேத்தண்ணியைக் குடிச்சு கொண்டக் கடலையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

புஸ்பகலாவின் தாய்க்குப் பெயர் சிவகாமசுந்தரி,தகப்பனுக்குப் பெயர் மாணிக்கவாசகர்.புஸ்பகலாவும் அவளின் தமக்கை இராஜகலாவும் மட்டுந்தான் இரண்டு பெண்பிள்ளைகள் அவர்களுக்கு.

இராஜகலா யூனியன் கல்லூரியில் படிச்சவள்.புஸ்பகலாவைப் போல தமக்கையும் எடுப்பான தோற்றமும் அழகுமுள்ளவள்.இராஜகலா யூனியன் கல்லூரியில் அட்வான்ஸ் லெவல் படிச்சுச் சோதனையில் பாஸ் பண்ணியிருந்தாலும் பல்கலைக் கழகத்திற்குப் போகுமளவிற்கு மார்க்ஸ் இல்லாததால் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றதன் பின் ஒரு வருடம் யூனியன்கல்லூரியில்; படிப்பித்தாள்.

இதற்கிடையில் இராஜகலாவின் எடுப்பான தோற்றம் அவளின் அழகு ஆசிரியை என்ற மூன்று தகுதிக்குமாக அவளை கல்யாணம் செய்ய விரும்பி தெல்லிப்பழையைச் சேர்ந்த நகுலேஸ்வரன், தனது தாய் தகப்பனைக் கொண்டு தரகர் மூலமாக பேச்சுக்கால் வைச்சு கல்யாணமும் நடந்து முடிஞ்சுது.

நகுலேஸ்வரன் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.இராஜகலாவிற்கும் வெள்ளவத்தையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பல முயற்சிகளின் வழியாக ஆசிரியையாக வேலை கிடைச்சது.

வீட்டு விறாந்தைப் படியில் உட்கார்ந்து கொண்டு தேத்தண்ணியைக் குடிச்சுக் கொண்டே கொண்டைக் கடலையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த புஸ்பகலாவடிக்கு வந்த தாய் சிவகாமசுந்தரி ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டி „கொக்கா கடிதம் போட்டிருக்கா,என்ன எழுதியிக்கா என்று வாசிச்சுப் பார் என்று சொல்லிக் கொண்டே தேத்தண்ணிப் பேணியுடன் அவளருகிள் உட்காருகிறாள்.

கொண்டைக் கடலை சாப்பிட்ட கைவிரல்களைத் தாயின் சீலையில் துடைக்க’எண்ணைக் கையை என்ரை சீலையிலை துடைக்கிறியா’ என்று செல்லமாக புஸ்பகலாவில் கோபிக்கிறாள் தாய்.

கடிதத்தை வாசிக்கத் தொடங்கிறாள் புஸ்பகலா,

அன்புடன் அப்பா,அம்மா தங்கச்சி,

நாங்கள் சுகமாக இருக்கிறோம்.உங்கள் சுகத்தை அறிய ஆவல்.படிப்பித்துக் கொண்டே பட்டதாரிப் படிப்பு படிக்கலாம் என்ற வசதியிருப்பதால்,நான் வெளிவாரிப் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டும் என்று உங்களுடைய மருமகன் ஆசைப்படுகிறார்.படிச்சு முடிக்கும் வரை குழந்தை பெறுவதை இருவரும் பேசித் தள்ளிப் போட்டிருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கு பழக்கமான கற்றனில் இருக்கும் குடும்பம் எங்களுடைய வீட்டுக்கு வந்திருந்த போது எங்களுடைய கல்யாண அல்பத்தைப்பார்த்தவை,அதில் தங்கச்சியின் படத்தைப் பார்த்தவர்கள், அவளைத் தங்களுடைய மகனுக்கு கேட்டிருக்கினம்.

தங்கச்சி படிச்சுக் கொண்டிருப்பதால், அதுபற்றி எந்த முடிவையும் எங்களால் இப்போதைக்குச் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறோம்.தங்கச்ச்சியைக் கேட்டவையின்ரை மகன் கற்றன் தேயிலைப் பக்ரறியில் இன்ஜினியராக வேலை செய்கிறார்.

எல்லாவற்றையும் ஆறுதலாக யோசிப்போம்.

அன்புடன்

மகள்,அக்கா

கலா

என்றிருந்த கடிதத்தில் உள்ள மேல் பந்தியை கேட்கும்படி வாசித்தவள்,மிகுதியை மனசுக்குள் வாசிக்கும் போது அவளின் முகமே மாறுகிறது.

அதைக் கவனித்த தாய் „என்னடி கடிதத்தை வாசிச்சதும் முகம் மாறுது….’ என்று தாய் சொல்ல,ஞானத்தை நினைச்சுக் கொண்டவள் „ எனக்கொன்று; முகம் மாறவில்லை’ என்று பொய் சொல்லிக் கொண்டே எழுந்தவள்’இத்தாம்மா எனக்குப் போதும் மிச்சத்தை நீங்களே சாப்பிடுங்கள் „ என்று சொல்லிக் கொண்டே கொண்டைக் கடலைச் சட்டியை தாயின் முன்னால் வைச்சிட்டு,தேத்தண்ணிப் பேணியுடன் அறைக்குள் போனவள் சோர்ந்து போய் கட்டிலில் உட்கார்ந்தாள்.

தனக்கு மாப்பிளை பார்க்கத் துடங்கியிருக்கும் தமக்கையை நினைச்சு ஆத்திரப்பட்டவளுக்கு அழுகையாய் வர,படுக்கலாமா என்று நினைச்சவள்,கடிதத்தைப் பார்த்தவுடன் படுத்தாள் தாய் சநதேகப்படுவாள் என்று நினைச்சுத் தாய் அவிட்டுப் போட்டுக் குடுத்த சட்டையை வேகமா தைச்சுப் போட்டு மேசையில் வைச்சவள்,மருந்து மணம் வர அவளுக்குத் திக்கென்றது.

ஞானம் மருந்தை உரசிக் குடிச்ச சிரட்டையின் ஞாபகம் வர ,புத்தகப் பையிலிருந்து தாளில் சுற்றியிருந்த சிரட்டையை எடுத்துக் கொண்டு மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே வர தாய் திரும்பிப் பார்க்கிறாள்.

கடைக்கண்ணாலை தாயைக் கவனிச்ச புஸ்பகலா தாளில் சுற்றிய சிரட்டையைக் கண்டால் விடுத்து விடுத்து கதை கேட்பாள் என்று தெரிந்து,தனது வலது பக்கத்து

துடையோடு தாளில் சுற்றிய சிரட்டையை மறைச்சுக் கொண்டே,தாயின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக „அம்மா கடலைக்கிளை கனக்க மிளகாயைப் போட்டுட்டியள்,அதுதான் வயிறு ஒரு மாதிரியாய் இருக்கு ரொய்லற்றுக்குப் போகப் போறன்’ என்றவள் வேகமாக வீட்டிற்குப் பின்புறம் இருந்த ரொய்லற்றை நோக்கிப் போனவள் அதற்கு முந்தி,குப்பை கூட்டி குவிச்சு அடைச்சு வைச்ச குப்பை அடைப்புக்குள் சிரட்டையையும் தாளையும் போட்டு மாவிலை கொஞ்சத்தைப்; போட்டிட்டு சாட்டுக்கு ரொய்லற் கதவுச் சத்தம் கேட்கத்தக்கதா அடிச்சுப் பூட்டி ரொய்லற்றுக்குள் ஒரு நிமிசம் இருந்துவிட்டு வெளியே வந்து தன்னுடைய அறையை நோக்கிப் போகிறாள்.

தாய் அப்பொழுதும் படியிலேயே இருக்கிறாள்.’ அம்மா நான் கொஞ்ச நேரம் படுக்கப் போறன் „ என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் போனவள் படுக்கையில் விழுகிறாள்.

அவளை அறியாமலே கண்களிலிருந்து கண்ணீர வர தலையணையால் தலையை மூடியவாறு படுத்திருந்தாள்.

தேத்தண்ணியைக் குடிச்சு முடிச்ச புஸ்பகலாவின் தாயார் இரவுச் சாப்பாட்டைச் சமைப்பதற்காக குப்பைகள் சேர்த்து வைச்ச குப்பை அடைப்படியில் அடுக்கி வைச்சிருந்த விறுகுக் கட்டைகளை எடுக்கப் போனவளின் மூக்கில் மருந்தின் மணம் வரவே, என்ன இது மருந்து மணம் வருதே அதுவும் கடுக்காய்ப் பேதியின் மணமல்லவா வருகுது,எங்கடை வீட்டிலை யாருமே பேதி மருந்து குடிக்கவில்லையே என்று நினைச்சவாறு குப்பை அடைப்படியை நோட்டம் விட்டவளின் கண்ணில் ஒரு சிரட்டையும் தாளும் மாவிலைகளால் மூடிமறைச்சிருப்பதைக் காண்கிறாள்.

சிரட்டையை எடுத்தவுடனேயே நாட்டு வைத்திய பரியாரிமார் குடுக்கிற பேதி மருந்தின் மணம் போல ஒரு மணம் மூக்கில் அடிக்கிறது.

எனக்குத் தெரியாமல் ஆர் இஞ்சை சிரட்:டையில் உரசி மருந்தைக் குடிச்சிருப்பார்கள்.

இது கடுக்காய்ப் பேதி மருந்தின் மணம் மாதிரியும் இருக்குதே.மாதச் சுகமில்லாமல் வாறது பிந்தினால் கல்யாணம் முடிச்சவைதான் இப்படிக் குடிச்சு அதை வரச்; செய்யிறவை, இல்லாட்டில் சுகமில்லாமல் வாறது பிந்தி வேண்டாத கரு என்று நினைக்கும் பெண்களும் கடுக்காய்ப் பேதியை குடிச்சு அந்தக் கருவை இல்லாமல் செய்யிறவை, எனக்கும் கல்யாணம் செய்த போது ஒருமுறை பிந்த நானும் ஒருமுறை கடுக்காய்ப் பேதியை குடிச்சிருக்கிறன் என்று பதட்டமானவள் திரும்பவும் அந்தச் சிரட்டையை எடுத்து மணந்து பார்த்தாள் அவளின் நெஞ்சு பகீர் என்றது.கடவுளே நான் நினைக்கிற மாதிரி எதுவும் இருக்கக்கூடாது.அதுவாக இருந்தாள் குடும்ப மானம் மரியாதை போய்விடுமே என்றவள் திக் திக் என்ற நெஞ்சுடன் அடுப்படிக்கு வந்து விறகுக் கட்டைகளை எறிஞ்சுவிட்டு,சிரட்டையுடன் புஸ்பகலாவின் அறைக்குள் நுழைய அங்கும் அந்த

வாசம் வரவே மனசில் தேவையில்லாத கற்பனையுடன் படுத்திருந்த மகளை எழுப்புகிறாள்.

„புஸ்பா எழும்பு இந்த நேரத்திலை என்னடி படுக்கை’ என்று அவளைத் தட்டி எழுப்ப,புஸ்பகலா புரண்டு எழும்ப மகளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவள்,அவள் அழுது கண் சிவந்திருப்பதைக் கண்டதும் தனது மகள் ஏதோ சிக்கலில் மாட்டிவிட்டாள், தான் நினைப்பது மாதிரி என்றாள் நாங்கள் இனி உயிரோடையே இருக்கத் தேவையில்லை என்று தேவையற்ற எண்ணங்களுடன் „உன்ரை அறையிலும் கடுக்காயப் பேதி மணம் மணக்குது,குப்பைக்குள் கிடந்த இந்தச் சிரட்டையிலும் கடுகு;காய்ப் பேதி மணம் மணக்குது,பிள்ளை சொல்லு உன்ரை அறையிலை எண்ணெண்டு கடுக்காய்ப் பேதி மணம் வருகுது உள்ளதைச் சொல்லடி எனக்குப் பயமாயிருக்குதடி’ என்று தாய் படபடத்ததும்,அப்பொழுதுதான் தாயின் கையில் ஞானம் மருந்துரைச்சுக் குடிச்ச சிரட்டை இருப்பதைப் பார்க்கிறாள்.

ஞானம் மருந்துரைச்சுக் குடிச்ச சிரட்டை என்று எக்காரணத்தைக் கொண்டும் சொல்லக்கூடாது தனது முகத்திலும் எந்த வித்தியாசத்தையும் காட்டக்கூடாது என்று தீர்மானித்த புஸ்பகலா „அம்மா இந்தச் சிரட்டையிலிருந்து வாற மணத்தக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை,நீங்கள் சொல்றியள் இந்த அறைக்குள்ளையும் மருந்து மணம் வருகுதெண்டு, ஆனால் எனக்கெண்டால் மணக்கவில்லை’ என்றவள் பொய் சொல்ல வெளிக்கிட்டால் அந்தப் பொய்தான் உண்மை என்று நம்பும்படி சொல்லி நடிச்சுத்தான் ஆக வேண்டும் தீர்மானிச்சவள்,’அம்மா ஆராவது ஒழுங்கையாலை போனவை எங்கடை வளவுக்குள்ளை எறிஞ்சிட்டுப் போயிருப்பினம் „ என்று சொல்ல,’பிள்ளை எனக்கு நெஞ்சு பக்கு பக்கென்னுது உன்ரை வளர்த்தியையும் அழகையும் எடுப்பான உடம்பையும் பார்த்து நானும் அப்பாவும் சந்தோசப்பட்டாலும் உன்னைக் கட்டிக் குடுக்கும் வரை எந்தச் சிக்கலிலும் நீ மாட்டிவிடக்கூடாது,உனக்குக் காதல் கீதல் என்று வந்துவிடக் கூடாது என்று நேராத சுவாமி இல்லையடி…….

„அண்டைக்கு உன்ரை மாமி சொல்றா கெதியிலை புஸ்பாவை எங்கையாவது கட்டிக் குடுத்திடுங்கோ விட்டியள் எண்;டால் கொத்திக் கொண்டு போயிடுவங்கள் என்று…..

„இந்தக் காலத்து ஆம்பிளைப் பிள்ளையளும் சரி பொம்பிளைப் பிள்ளையளும் சரி வீட்டிலை நல்ல பிள்ளையளாய் இருக்கினம்,அவை வீட்டைவிட்டு வெளிக்கிட்டால் எங்கை போயினம் வருகினம் என்று தெரியர்து,பள்ளிக்கூடத்தில என்ன நடக்குதென்றும் தெரியாது .எங்கடை காலம் மாதிரி இப்ப இல்லை.பொம்பிளைப் பிள்ளைகளைப் பெற்ற தாய்மாரும் தகப்பன்மாரும் அவையைக் கரை சேர்க்கும் வரை வயித்திலை நெருப்பைக் கட்டிக் கொண்டு திரியிற மாதிரித்தான் திரிகிறம்’ என்றவள்,அவள் அருகில் கட்டிலில் உட்கார்ந்து அவளின் தலையை தடவிவிட்டுக் கொண்டே „இந்த மருந்து மணம் கடுக்காய்ப்

பேதி மருந்து மணம்,மனம் திறந்து சொல்றன் உனக்கு இது தெரிய வேண்டுமென்பதற்காக,இந்தப் பேதி மருந்தை கல்யாணம் செய்தவை மாதச் சூதகம் வராட்டால்தான் குடிப்பினம்,அதுதான் அந்த மணம் இஞ்சை வர மனம் ஏதேதோ நினைக்குதடி,குமர்ப்பிளளையள் வயித்திலை வாங்கிட்டாலும் இதைத்தான் பரியாரிமார் குடுக்கிறது,நீ எனக்கு எதையும் மூடிமறைக்கேலைத்தானே இந்தக் குடும்பத்தின்: மானம் மரியாதை எல்லாம் உன்ரை கையிலைதான் இருக்குதடி „ என்று தாய் அழத் தொடங்க,வேகமாக கட்டிலை விட்டெழுந்த புஸ்பகலா மேசையிலிருந்த பிள்ளையார் படத்தை எடுத்துக் கொண்டு தாய்க்கு முன்னால் பிடிச்சுக் கோண்டு,’ அம்மா இந்தப் பிள்ளையாரைக் கொண்டு சத்தியம் செய்யிறன் இஞ்சை மணக்கிற மருந்து மணத்துக்கும் சிரட்டையிலிருந்து வருகிற மருந்து மணத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்கிறாள்.

தான் பொய்ச் சத்தியந்தான் செய்கிறன் என்று தெரிந்தும் வேறு வழியின்றித்தான் இதைச் செய்கிறன் எனத் தன்னைச் சமாதானப்படுத்துகிறாள்.

மகளில் நம்பிக்கை வைச்சு கதவு வரை போன தாய் திரும்பி வந்து „ இன்னும் எத்தனை நாள் இருக்குது பிள்ளை அது வர்றதுக்கு „ என்று கேட்க,’அம்மா அதுக்கு இன்னும் ஏழு நாளிருக்கம்மா,என்னம்மா நீங்கள் பயப்படாமல் போங்கள்’ என்கிறாள் புஸ்பகலா.தாய் போனதும் கதவைச் சாத்திய வள்,கட்டிலில் உட்கார்ந்து இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்தடி கீழை பார்த்துக் கொண்டிருந்தாள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *