சிந்தித்து சிறகை விரியுங்கள் ஸ்டாலின்!…

முதல்வர் ஸ்டாலினின், ௭௦வது பிறந்த நாளன்று, சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ‘தற்போது, நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடு இப்போது, சிக்கலான கால கட்டத்தில் உள்ளது. விலைவாசி உயர்வு விண்ணை தொட்டு விட்டது. வறுமையும், வேலையின்மையும் அதிகரித்துள்ளது.

‘இந்நிலையை மாற்ற, முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்; அதற்கு சரியான நேரம் இதுவே. ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக ஸ்டாலின் இருக்கிறார்’ என்று கூறி, உசுப்பேற்றி இருக்கிறார்.

அரசியல் ஆதாயத்திற்காக, அவ்வப்போது இப்படி யாரையாவது, எதிர்க்கட்சிகள் உசுப்பேற்றி விடுவது வாடிக்கையானது தான். முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, உத்தவ் தாக்கரே, குமாரசாமி, நிதிஷ்குமார் மற்றும் ராகுல் ஆகியோருக்கு, ‘பிரதமர்’ பதவி ஆசை காட்டி மோசம் செய்து, ஒருவழியாக ஓரங்கட்டி விட்டனர்; இப்போது, அந்த வரிசையில் ஸ்டாலினை சேர்த்துள்ளனர்.

இதுவரை நம் நாட்டில் பிரதமராக பதவி வகித்தவர்களில் யாராவது, ஹிந்தி தெரியாமல் பதவி வகித்து இருக்கின்றனரா… பார்லிமென்டில் துண்டுச் சீட்டு இல்லாமல், மணிக்கணக்கில் ஹிந்தியில் உரையாற்ற வேண்டியிருக்கும்; உறுப்பினர்களின் வினாக்களுக்கு, உடனடியாக ஹிந்தியிலேயே பதில் சொல்ல வேண்டியிருக்கும். அந்த தகுதியும், திறமையும் ஸ்டாலினுக்கு இருக்கிறதா?

பரூக் அப்துல்லா உரையாற்றி விட்டு சென்ற அடுத்த நிமிடம் முதல், ஸ்டாலின் கனவு காண்கிறாரோ இல்லையோ, உடன் பிறப்புகள் ஸ்டாலினை, பிரதமர் பதவியில் அமர வைத்து, அழகு பார்க்கத் துவங்கி விட்டனர். ‘ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு எதையோ மேய்க்க’ என்றதொரு சொலவடை உண்டு.

அதுபோல, தாய் மொழி தமிழே, ‘ததிங்கிணத்தோம்’ போட்டுக் கொண்டிருக்கும் போது, எப்போது ஹிந்தி கற்று, எப்போது ஹிந்தியில் பேசுவது… பிரதமர் நாற்காலியில் எப்போது அமர்வது… ஆசைப்படலாம் தவறில்லை; பேராசைப்படலாமா?

இதுவரை எதிர்க்கட்சிகள் உசுப்பேற்றி விட்டவர்கள் எல்லாம், என்ன கதியாகினர் என்று தெளிவாக சிந்தித்து பார்த்து, முதல்வர் ஸ்டாலின் சிறகை விரிப்பது நல்லது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button