கதைகள்

எங்கே அவன்?…. (குறும் கதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

கால்ஃபீல்ட் தொடர்வண்டி நிலையத்தில் நின்றிருந்த தொடர்வண்டி சிறிது நேரம் நேரம் கடந்தும் கிளம்பவி்ல்லை. அனிச்சையாக வாசித்துக் கொண்டிருந்ததை நிறுத்தி தலையைத்தூக்கி என்ன நடக்கிறது எனப்பார்த்தேன். என்னைப்போன்றே வாசிப்பில் ஈடுபட்டிருந்த அனைவரது தலைகளும் நிமிர்ந்தன. வாசிப்பு என்பது மனிதனுக்கு எவ்வளவு அவசியம் என்பது எல்லோருக்கும் புரிந்த ஒன்றே.ஆனால் இவ்வாசிப்பு பொது அறிவைப் பெருக்கிக்கொள்ளவா? நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவா? அல்லது பொழுதைப்போக்கவா? என்ற நிலையில் நிறுத்தி எண்ணிப்பார்த்தால் உண்மையில் யார் யாருக்கு எது வாசிப்புஎன்பது புரிந்து விடும். ஆகையால் வாசிப்புக்கு வலிய நாமே ஒரு பொருளை எண்ணிக்கொண்டு அதையே மற்றவர்களும் எண்ணாவிட்டால் அவர்களுக்கு வாசிப்பில் ஈர்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது.தொடர்வண்டி கிளம்பாததற்குண்டான காரணத்தை அறிவிப்பின் மூலம் உணர்ந்ததும் எல்லோரும் திரும்பவும் கைபேசியுடன் ஐக்கியமாயினர். இவர்கள் அனைவரும் வாசித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதியாகவும் கூறமுடியாது. சிலர் பாட்டு கேட்கலாம். சிலர் படம் பார்க்கலாம். சிலர் செய்தி வாசிக்கலாம். சிலர் பொழுது போக்குக்காகவும் வாசிக்கலாம். சிலர் அறிவைப்பெருக்கும் விதமானவற்றில் ஈடுபட்டிருக்கலாம்.சட்டென்று என் மனக்குதிரை இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்றது. அப்போதெல்லாம் காலையிலும் மாலையிலும் பணிக்காக சிட்டிக்கு செல்பவர்கள் இரண்டு மூன்று மணி பயணநேரத்தை கையிலிருக்கும் நூலுடன் செலவிடுவார்கள். எப்படியும் ஒரு வாரத்துக்கு ஒரு நூலை முடித்துவிடுவார்கள். இன்று இரண்டு வாரத்துக்குள்ளாவது ஒரு நூலை முடிப்பார்களா? இப்படி பலவாறாக எண்ணவும் நான் இறங்க வேண்டிய சதர்ன் கிராஸ் நிலையம் வரவும் சரியாக இருந்தது.தொடர்வண்டியிலிருந்து இறங்கி அடுத்த தடத்தில் சன்பரி செல்லும் தொடர்வண்டிக்காக காத்திருந்தபோதுதான் நான் அதிசயிக்கும்படியான ஒன்று நடந்தது. என் தடத்தைநோக்கி எஸ்கலேட்டரில் இருந்து ஒருவர் இறங்கி வந்தார். என்னருகே வந்து நின்றார்.“சன்சைன் செல்லும் தொடர்வண்டி இந்த தடத்தில் வருமா?” என்னருகே நின்றவர் கேட்டார்.“வரும். இன்னும் சில நிமிடங்களில் சன்பரி செல்லும் தொடர்வண்டி வரும். அது சன்சைனில் நிற்கும். நானும் அங்குதான் இறங்குவேன்.” என்றேன்.“ரொம்ப நன்றிங்க” என்று சொன்னவரின்முகத்தில் எந்தவித கவலையின் சாயலும் தென்படவில்லை.நன்றி சொன்னவரின் முகத்தில் கவலையின் சாயல் தெரியவில்லை என்றதும் குழப்பமாக இருக்கிறதல்லவா? என்னருகே நின்றவருக்கு இரண்டு கால்களும் இல்லை செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் அவர் செயற்கைக்காலுடன் இருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. டீசர்ட்டும் பர்முடாஸும் அணிந்திருந்தார்.அவருக்கு முழங்கைக்கு கீழ் இரண்டு கைகளும் இல்லை. விபத்தால் அப்படியானதா அல்லது பிறவியிலேயே அப்படியா என்று தெரியவில்லை. ஏனென்றால் இரண்டு கைகளும் ஒரே மாதிரி இருந்தது. இரண்டு கைகளிலும் முழங்கைக்கு கீழே முடிவில் ஒரு நெல்லிக்காய் வடிவில் உருண்டையாகஇருந்தது.சன்பரி தொடர்வண்டி தடத்தில் தொடர்வண்டி வந்து நின்றது. அவரிடம் சொன்னதும் ஒன்றுமே அலட்டிக் கொள்ளாமல் என்னுடன் இயல்பாகவே வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். தொடர்வண்டி ஓட ஆரம்பிக்கவும் அவர் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நான் அவரைப்பற்றியே எண்ணிக்கொண்டுருந்தேன்.நமக்கெல்லாம் கைகால்கள் எல்லாம் நன்றாக இருந்தும் எவ்வளவோ பிரச்சனைகள். அவற்றையெல்லாம் சமாளித்து வருகிறோம். ஆனால் இவருக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதிருக்காது. அந்த பிரச்சனைகளோடு கைகால்களும் இல்லாதது பெரிய பிரச்சனையாகவே இருக்கும். அதுவும் அன்றாட அவரின் தேவைகளை செய்யவே எவ்வளவு அல்லல்பட வேண்டியிருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.தொடர்வண்டி டாட்டினம் நிலையத்தில் வந்து நின்றது.“அடுத்த தொடர்வண்டி நிலையம் சன்சைன்.அங்குதான் இறங்கவேண்டும்”“அப்படியா, நன்றி” என்று அவர் சொல்லவும் அடுத்த நிறுத்தம் சன்சைன் என்று அறிவிப்பும் வந்தது.சிறிது நேரத்தில் சன்சைன் தொடர்வண்டி நிலையத்தில் வண்டி நிற்கவும் உற்சாகமாக எழுந்து வண்டியிலிருந்து இறங்கினார். நானும் அவரைத் தொடர்ந்தேன். மேல்தளத்தில் வெளியேற வேண்டிய இடம் இருந்ததால் லிப்டில் நுழைந்தோம். அவரே லிப்ட் மேலே செல்வதற்காக உள்ள குறியை தனது முழங்கை முடிவிலிருந்த உருண்டையான பகுதியினால் அழுத்தினார். லிப்ட் மேலே சென்று நின்றது.லிப்டில் இருந்து வெளிவந்ததும் அவர் தன் முழங்கையின் அடிப்பகுதியால் பர்முடாஸில் இருந்த பாக்கெட்டின் அடியில் மேல்நோக்கி ஒரு தட்டு தட்டினார். பாக்கெட்டிலிருந்த கைபேசி மேழே எழும்பிக் குதிக்க மறு முழங்கையால் கீழேவிழாதபடி சரியாகப்பிடித்தார். அந்த போனுடன் இருந்த மைகீ கார்டை ஸ்கேனரில் காட்டி வெளியேறியவர் கீழ் தளத்துக்கு செல்ல திரும்பவும் கீழிறங்க லிப்டுக்கு சென்றார். நானும் உடன் சென்றேன். கீழிறங்கியதும் நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றார்.அவர் சென்றதும் எனக்கு மனதுக்குள் வலித்தது. என்னையும் அறியாமல் என் கண்கண்கள் கலங்குவதை உணர்ந்தேன். என்னால் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் உதிர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. இறைவன் இருக்கிறான் என்கிறார்களே? அவன் எங்கே இருக்கிறான்? இங்கே சிலரைக்கேட்டால் போனபிறவியில் செய்த பாவம் என்பார்கள். அவனோ அந்த இறைவனையே மன்னித்தவனாக இயல்பாக நடந்ததை கடந்து செல்கிறான். தூரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் அவன் என் கண்முன் இறைவனாக சென்று கொண்டிருக்கிறான்.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *