டாக்டர் ப. விக்கினேஸ்வரா ஓராண்டு நினைவு!
சுன்னாகத்தில் நாற்பது ஆண்டுகள் மருத்துவ சேவையாற்றிய வைத்தியர் !!
——————————————————
-க. செல்வகுமாரன் .MA
ஓய்வுநிலை அதிபர்
(சுன்னாகத்தில் நாற்பது ஆண்டுகள்
மருத்துவ பணியாற்றிய வைத்தியர் ப. விக்கினேஸ்வரா ஓராண்டு
நினைவாக 22/02/2023 இக் கட்டுரை பிரசுரமாகிறது)

டாக்டர்.ப.விக்கினேஸ்வரா அவர்கள் அமரராகி (22/02/22) ஒரு வருடமாகிறது. ஆனால் அவரிடம் சிகிச்சைபெற்ற மக்கள் இன்றும் அவரது திறமைகளையும், சேவைகளையும் புகழ்ந்து நினைவு கூருகின்றனர்.
டாக்டர். ப. விக்கினேஸ்வரா மிகவும் பிரபல்யமான செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யமான வைத்தியர்களாக விளங்கியவர்கள் அமரர்களான Dr.S.A.வெற்றிவேல், Dr.S.A. தர்மலிங்கம் அவர்கள் இவரது மாமனார்களாவர். யாழ்ப்பாண முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வெ. யோகேஸ்வரன் இவரது மைத்துனராவார்.
விக்கினேஸ்வரா அவர்கள் கொழும்புத்துறையில் சாமியார் வீதியில், யோகர் சுவாமிகளின் ஆச்சிரமத்திற்கு அருகாமையில் உள்ள இல்லத்தில் 1930ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி சபாரத்தினம் பரமநாதன் – சண்முகம், அப்புக்குட்டி தங்கரத்தினம் தம்பதிகளின் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தார்.
சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் : 

தனது மாமனார் Dr.SA.வெற்றிவேல் அவர்களிடமிருந்து பொறுமை, சகிப்புத்தன்மை, இரக்கம், உண்மையாக நடத்தல், கடின உழைப்பு ஆகிய நற்பண்புகளைக் கற்றுக் கொண்டார். கொழும்புத்துறை யோகர் சுவாமிகளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் கிடைத்துக் கொண்டிருந்தது. நல்லூர்க் கந்தப் பெருமானைத் தினமும் சென்று வழிபாடு செய்திருந்தார். யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்ப வகுப்புமுதல் உயர் கல்வி பயின்றார்.
தொடர்ந்து கொழும்பு மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வைத்தியராக வெளியேறினார்.
1968ஆம் ஆண்டு சுன்னாகம் தனியார் வைத்தியநிலையத்தை தனது மைத்துனர் Dr.நவரட்ணம் அவர்கள், விக்னேஸ்வரா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு உயர் வைத்தியக் கல்விக்காக இலண்டன் பயணமானார்.
விக்னேஸ்வரா முழுநேர வைத்தியராகச் சேவையாற்றினார். புன்சிரிப்புடன் கூடிய பண்பான, அன்பான உரையாடலும், அழகான கம்பீரமான தோற்றமும் எல்லோரையும் கவர்ந்திருந்தது. பொறுமையாக நோயாளியை சோதிப்பார்.
எல்லாவிதமான சிகிச்சைகளையும் தனியாக தன்னம்பிக்கையுடன் மேற்கொண்டவர். நச்சு இரசாயனங்களால் ஏற்படும் விபத்துக்களின் காரணமாக விரைந்து வரும் விவசாயிகளின் உயிரைக் காப்பாற்றி விடுவார். தன்னிடம் வரும் நோயாளிகளை அரச மருத்துவமனையில் அனுமதிக்கும்படி சிபார்சு செய்து அனுப்பியபின் தானும் அங்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறுவார்.
இவரது வைத்திய நிலையத்துக்கு இவரைச் சந்திப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி. தர்மலிங்கம் உட்பட பல பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.
1992ஆம் ஆண்டு மே மாதம் 30ஆந் திகதி விமானப்படையின் குண்டுவீச்சின் காரணமாக வைத்திய நிலையக் கட்டடம் தகர்ந்தது.
இச் சம்பவத்திற்கு பின் யாழ்ப்பாணத்தில் பிறவுண் வீதியிலுள்ள சொந்த இல்லத்திலும் வைத்திய சேவையைத் தொடர்ந்தார். 2001ஆம் ஆண்டு ஓய்வெடுப்பதெனத் தீர்மானித்தார்.
கொழும்பில் சிறிது காலம் தங்கினார். 2009ஆம் ஆண்டு பிள்ளைகளின் அழைப்பை ஏற்று அவுஸ்திரேலியாவிற்கு சென்றார். அங்கு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லோருடனும் மகிழ்ச்சியுடன் தனது நேரத்தைக் கழித்தார். பிள்ளைகள் இவரை இறுதிவரை தமது சொந்த வீட்டிலேயே அன்புடனும், ஆதரவுடனும் இவரது தேவைகளை கவனித்தனர்.
“நோயாளிகளுக்கு ஒரு பொற்காலம்”
நிறைவான வாழ்க்கையை நடாத்திய னுச. விக்னேஸ்வரா அவர்கள் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி அமைதியாக கந்தன் கழலை அடைந்தார். 

டாக்டர். விக்னேஸ்வரா அவர்கள் சிகிச்சை அளித்த காலத்தை “நோயாளிகளுக்கு ஒரு பொற்காலம்” என மக்கள் வர்ணிக்கின்றனர். பலர் இவரை அரசியல், சமூக செயற்பாடுகளில் ஈடுபடுத்த முற்பட்டபோது “நோயாளிகளுக்கு சேவை செய்வதைவிட மேலானது வேறு ஒன்றும் இல்லை” என்று கூறி அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விடுவார். ஆனால் தேசப்பற்று மிக்கவர். பிள்ளைகளுக்கும் தேசப்பற்றை வளர்த்திருந்தார்.
விக்னேஸ்வராவின் நினைவாக “ஈழத்தில் மாட்டுவண்டிச் சவாரியும் தமிழர் மரபும்” என்ற நூல் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களால் தொகுக்கப்பட்டு அனாமிகா வெளியீடாகக் கிடைக்கப் பெற்றோம். பிள்ளைகளின் தேசப்பற்றை இது எடுத்துக்காட்டுகின்றது.
விக்னேஸ்வரா அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது எமக்கு மட்டுமல்ல வைத்திய உலகிற்கே ஒரு பேரிழப்பாகும். இறைபதமடைந்த செய்தியைக் கேட்டதும் இப்பகுதி மக்கள் பல்வேறு வழிகளிலும் விக்கினேஸ்வரா அவர்களிற்கு அஞ்சலி செய்து ஆன்மா சாந்தியடைய வேண்டுமென பிரார்த்தித்தனர்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப்படும்”.
க. செல்வகுமாரன் .MA
ஓய்வுநிலை அதிபர்
சுன்னாகம்
![]()