ஐயா திரு.பழ.நெடுமாறன் அவர்களே!

தங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்.தாங்கள் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறைப்படுவதற்கு நன்றி.ஆனால் அதே வேளையில் இலங்கைத் தமிழர்களை இனியாவது நிம்மதியாக இருக்க விடுங்கள்.

https://www.youtube.com/watch?v=gY0Q1BGD8jM&t=1s

தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்வதற்காக அப்பப்ப பொய்யுரை அறிக்கைகளைவிட்டு சிங்கள அரசியல்வாதிகளுக்கு கொம்பு சீவிவிடாதீர்கள். தாங்களும் சீமானும் பேசாமலிருப்பதே எங்களுக்குச் செய்யும் பெரும் உதவியாகும். தாங்கள் 1985ஆம் ஆண்டு ஒரு அறிக்கை விட்டீர்கள்.அது என்ன அறிக்கை என்று தங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?. அது என்னவென்றால் 80 படகுகளில் இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு இலங்கைக்கு வந்து இராணுவத்துடன் போராடி இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றப் போகிறோம் என்ற முட்டாள்தனமான அறிக்கையைத்தான் தாங்கள் வெளியிட்டீர்கள். பகுத்தறிவாளர் பெரியார் வாழ்ந்த மண்ணிலிருந்து தாங்கள் இப்படி ஒரு பகுத்தறியாது அறிக்கையை வெளியிட்டு இலங்கைத் தமிழர்களின் அபிமானத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்தீர்கள். தங்கள் அறிக்கையைப் பார்த்த தாயகத் தமிழர்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மெய்சிலிர்த்து விதுவிதிர்த்து புளகாங்கிதம் கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் குதியாய்க் குதித்தார்கள். ஐயா தாங்கள் இப்படி ஒரு அறிக்கையை விடும் போது தங்கள் மனச்சாட்சி தங்களை உறுத்தவில்லையா.தங்கள் அறிவு பகுத்தறியவில்லையா?. படகுகளில் தாங்களும் தங்கள் குழுவும் புறம்படும் போது ஒவ்வொரு நாட்டினுடைய கடல் சட்டங்கள் உண்டு,சர்வதேச கடல் சட்டங்கள்

உண்டு,இந்தியக் கடலிலிருந்து புறப்பட அதற்கு அனுமதி வேண்டும்,இலங்கைக் கடற்பரப்பினுக்குள் நுழைய அதற்கு அனுமதி வேண்டும் இவையெல்லாவற்றையும் தாங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. தங்களுக்கு அது நன்றாகவே தெரியும்.தங்களுடைய நோக்கம் இலங்கைத் தமிழர்களை உசுப்பேத்தி அவர்களை முட்டாளாக்கி சிங்களவர்களை இன்னும் இன்னும் வெறுப்படைய வைப்பது என்பதேயாகும். இப்பொழுது தாங்கள் திரு.பிரபாகரன் குடும்பத்துடன் சுகமாக இருக்கிறார் விரைவில் வருவார் என்றொரு மனச்சாட்சியே இல்லாத ஒரு பொய்யறிக்கையை வெளியிட்டுள்ளீர்கள். தாங்கள் அறிவாளியல்லவா இப்படி எல்லாம் புழுகிப் பொய் சொல்லாதீர்கள். திரு.பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லையென்பது இலங்கைத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.தயவு செய்து இனிமேல் இப்படி பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு இலங்கைத் தமிழர்களின் நிம்மதியைக் கெடுக்காதீர்கள்.தங்களுடைய வயதிற்கும் அறிவிற்கும் அனுபவத்திற்கும் இது அழகல்ல. எந்த அறிக்கையை தாங்கள் வெளியிட்டாளுலும் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.தாங்கள் தமிழ்நாட்டிருந்து கொண்டு என்னவும் சொல்லலாம். அதை எதிர்நோக்க வேண்டியவர்கள் இலங்கைத் தமிழர்களே. தாங்கள் உட்பட தமிழக அரசியல்வாதிகளாகிய தாங்களனைவரும் தொடர்ந்தும் இலங்கைத் தமிழர்களை முட்டாளாக்க முயற்சிக்காதீர்கள். சிங்களவர்களும் தமிழர்களும் சகோதரர்கள் அயலவர்கள்,தாங்கள் அல்ல. தாங்களும்,சீமானும்,கவிஞர் காசி ஆனந்தனும் இந்திய உளவுப் பிரிவினரின் ஆளுமைக்குட்பட்டு,இலங்கை அரசாங்கத்துடனான தமிழர்களின்

அரசியல் நெருக்கத்தை சிதைப்பதற்காக இப்படியான அறிக்கைகளைவிடத் தூண்டப்படுவதாக தமிழர்கள் தங்கள் அனைவரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள் என்பதையும் அறியுங்கள். .இப்படி ஒரு அறிக்கையை விடுவதன் மூலம் இலங்கைத் தமிழர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை அறிவதே தங்களைத் தூண்டிவிட்டவர்களின் நோக்கம். திருவள்ளுவரின் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதை உணர காலங் கடந்தாயினும் இலங்கைத் தமிழர்களுக்கு ஞானம் வந்திருக்கிறது என்பதை பணிவோடு அறியத் தருகின்றோம். எதுவாயினும் எமது அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள்.சிங்கள இனவாதிகளுக்கு கொம்புசீவி விடாதீர்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button